Doctor Vikatan: எங்கள் வீட்டுத் தோட்டத்தில் தானாகவே முளைத்திருந்தது ஒரு செடி. குப்பைச்செடி என பிடுங்க நினைத்தபோது, அது கல்யாண முருங்கை செடி என்றும், அற்புதமான மருத்துவ பலன்கள் கொண்டது என்றும் சொன்னது கூகுள். கல்யாண முருங்கையை யார், எப்படி, எந்தப் பிரச்னைக்கு எடுத்துக்கொள்ளலாம்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி.
நீங்கள் குறிப்பிடுகிற கல்யாண முருங்கை மரம் கிராமப்புறங்களில் மிகவும் பிரபலம். இதன் கிளைகளில் முட்கள் இருப்பதால் இது 'முள் முருங்கை' என்றும், 'முருக்க மரம்' என்றும்கூட அழைக்கப்படுகிறது. இம்மரத்தின் விதையைத் தரையில் தேய்த்து உடலில் வைத்தால் சூடாக இருக்கும். கிராமங்களில் இதை 'நெருப்புக்கொட்டை' அல்லது 'சூட்டுக்கொட்டை' என்று விளையாட்டாகப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.
சாதாரண முருங்கைக்கீரை அனைவருக்கும் நல்லது என்பதை எல்லோரும் அறிவோம். அதை உலகமே 'சூப்பர் ஃபுட்' என்று கொண்டாடுகிறது. கல்யாண முருங்கை அதற்குச் சற்றும் சளைத்ததில்லை. குறிப்பாக, பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இன்று பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை, முறையற்ற மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் தொடர்பான வலிகள், எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis), உடல் பருமன் என பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பல முக்கியப் பிரச்னைகளுக்கு கல்யாண முருங்கைக் கீரை அற்புதமான தீர்வுகளைத் தருகிறது.
கல்யாண முருங்கை இலைகளைச் சேகரித்து, நிழலில் உலர்த்திப் பொடிசெய்து கொள்ளவும். தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு பொடியை சாதாரண நீரில் கலந்து 2 முதல் 3 மாதங்கள் குடித்து வந்தால், பிசிஓடி, முறைதவறிய மாதவிடாய் சுழற்சி, உடல் பருமன், எண்டோமெட்ரியோசிஸ், சினைப்பைக் கட்டிகள் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
ஃப்ரெஷ்ஷான கல்யாண முருங்கை இலைகள் கிடைக்கும் என்பவர்கள், 5 முதல் 10 இலைகளை அரைத்து சாறு எடுத்து, அதில் 20 மில்லி (சுமார் கால் டம்ளர்) அளவு காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும், கர்ப்பப்பை மற்றும் சினைப்பை தொடர்பான பிரச்னைகள் குணமாகும். குறிப்பாக, எடைக்குறைப்புக்கு மிகச் சிறப்பாக உதவும்.
கல்யாண முருங்கைக்கீரை மதுரையில் மிகவும் பிரபலம். அங்குள்ள சௌராஷ்டிர இன மக்கள் இந்த இலையை அரிசிமாவுடன் கலந்து 'கல்யாண முருங்கை வடை' அல்லது 'முள் முருங்கை வடை' செய்து மாலையில் சிற்றுண்டியாகச் சாப்பிடுவார்கள்.
கல்யாண முருங்கை இலைகளை குளிர்காலத்தில் சாப்பிடுவது சளித் தொந்தரவுகளுக்கு நல்ல தீர்வளிக்கும். ஆஸ்துமா, வீஸிங், சைனஸ் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் கல்யாண முருங்கை அற்புதமான மருந்தாக வேலை செய்யும். அடிக்கடி சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கும் கல்யாண முருங்கை இலை மிகவும் நல்லது.
இந்த மரம் வீட்டில் இருந்தால் அதை வெட்ட வேண்டாம் என்பதே என் அறிவுரை. ஏனெனில் எல்லா வீடுகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் இந்த இலைகள் தேவைப்படும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்... உங்கள் வீட்டில் தானாக வளர்வதாகச் சொல்கிற இந்தச் செடி, உண்மையிலேயே கல்யாண முருங்கைதானா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இதில் பிரகாசமான சிவப்பு நிறப் பூக்கள் பூக்கும். இந்த மரம் குறித்து தெரிந்தவர்களிடமோ, மருத்துவர்களிடமோ, தோட்டக்கலை நிபுணர்களிடமோ அதை உறுதிசெய்து கொண்டு பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment