Doctor Vikatan: என் வயது 50. மெனோபாஸ் வந்து ஒரு வருடமாகிறது. எப்போதும் களைப்பு, தூக்கம், எதிலும் ஆர்வமின்மை போன்ற பிரச்னைகளை உணர்கிறேன்.
மெனோபாஸ் வந்துவிட்டாலே சத்து மாத்திரைகளை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும், அப்போதுதான் இந்தப் பிரச்னைகள் வராது என்றும் சிலர் சொல்கிறார்களே, அது உண்மையா? அப்படியானால் நான் எப்படிப்பட்ட சத்து மாத்திரைகளை எடுத்தக்கொள்ள வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
மெனோபாஸில் (menopause) அடிப்படையான சில சப்ளிமென்ட்ஸ் தேவைப்படலாம். மெனோபாஸ் காலத்தில் பெண் உடலின் மிக முக்கிய ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் வெகுவாகக் குறைந்துவிடும். அதனால் 50 ப்ளஸ் வயதில் எலும்புகளின் வலிமை குறைய ஆரம்பிக்கும்.
எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு ஒருநாளைக்கு ஒரு பெண்ணுக்கு 500 முதல் 1000 மில்லிகிராம் கால்சியம் தேவை. சிலருக்கு அவர்களது உடல்நிலையைப் பொறுத்து இது 2,000 மில்லிகிராம்கூட தேவைப்படலாம். உணவின் மூலம் இந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாது என்பதால் சப்ளிமென்ட் எடுக்க வேண்டும்.
கால்சியம் மாத்திரைகளோடு சிலருக்கு வைட்டமின் டி சப்ளிமென்ட்டும் தேவைப்படும். நம் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
வைட்டமின் டி குறையாமலிருந்தால், கால்சியம் உட்கிரகிக்கப்படுவதும் சிறப்பாக இருக்கும். வைட்டமின் டி சப்ளிமென்ட்டை மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்கு, பரிந்துரைக்கும் நாள்களுக்கு மட்டும் எடுத்துக்கொண்டால் போதும்.
ஈவ்னிங் ப்ரிம்ரோஸ் ஆயில் (evening primrose oil) என்பது நட்ஸில் அதிகமுள்ளது. மெனோபாஸ் வயதில் மனநிலையில் தடுமாற்றங்கள் இருந்தால் இந்தச் சப்ளிமென்ட்டைப் பரிந்துரைப்போம். ஒருநாளைக்கு 500 முதல் 1000 மில்லிகிராம் அளவு போதுமானது. இது எல்லோருக்கும் தேவையில்லை.
பீரியட்ஸுக்கு முன்பான 'ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம்' அவதிகளால் பாதிக்கப்படுவோருக்கும், மெனோபாஸ் ஆன பெண்களுக்கும் தேவை. ஹாட் ஃபிளாஷஸ் எனப்படும் திடீர் வியர்வை பிரச்னைக்கும் இந்த மாத்திரை உதவும்.
ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் (Omega-3 fatty acids) என்பது இதயநலனுக்குச் சிறந்தது என்ற கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுவும் சப்ளிமென்ட்டாகக் கிடைக்கிறது. 1000 மில்லிகிராம் அளவுக்கு தினமும் எடுத்துக்கொள்ளலாம். இது மீன் எண்ணெய், ஃபிளாக்ஸ் சீட்ஸ் ஆயில் போன்றவற்றில் அதிகமுள்ளது. இது உடல் வீக்கத்தைக் குறைக்கும். மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் எரிச்சல் மனநிலை, தடுமாற்றம், கோபம் போன்றவற்றை சமாளிக்க இந்தச் சப்ளிமென்ட் உதவும்.
ஆனால், இவற்றில் மருத்துவரின் பரிந்துரையின்றி நீங்களாக எந்தச் சப்ளிமென்ட்டையும் எடுத்துக்கொள்ளவே கூடாது. இந்தச் சப்ளிமென்ட்டுகள் எல்லாம் மருந்துகள் என்ற பிரிவில் வராமல் நியூட்ராசூட்டிகல்ஸ் (nutraceuticals) என்ற பிரிவின்கீழ் வரும். ஆனாலும், மருத்துவரின் பரிந்துரையோடுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment