Doctor Vikatan: பொட்டுக்கடலை சாப்பிட்டால் அதீத ரத்தப்போக்கு (excessive bleeding) கட்டுப்படுமா... அதிகப்படியான ப்ளீடிங்கை குறைக்க இயற்கை வழிகள் சொல்லவும்.
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி.
உங்கள் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன், உங்களுக்கு அதிகப்படியான ப்ளீடிங் இருப்பதற்கான காரணத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஹார்மோன் குறைபாடுகள், கருப்பையில் உள்ள பிரச்னைகள் (Fibroids), அல்லது தைராய்டு கோளாறுகள் போன்ற காரணங்களைக் கண்டறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சை மற்றும் உணவுமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
உணவின் மூலமும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணலாம். பொட்டுக்கடலை அதிகப்படியான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஆனால், அது ஒரேயடியாக ப்ளீடிங்கை நிறுத்தாது. சிலருக்கு அடிக்கடி நாப்கின் மாற்றும் அளவுக்கு ப்ளீடிங் இருக்கும். சிலருக்கு கட்டிகளாக ரத்தம் வெளியேறும். அவர்களுக்கு இது உதவும்.
ஒன்று அல்லது இரண்டு டேபிள்ஸ்பூன் அளவுக்கு பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். அதனுடன் தயிர் அல்லது தண்ணீர் சேர்த்து லஸ்ஸிபோல அடித்துப் பருகலாம். வேலைக்குச் செல்பவர்கள் இந்தப் பொடியைச் செய்து வைத்துக்கொண்டு, அவ்வப்போது வெறும் வாயில் போட்டுச் சாப்பிட்டு வரலாம். இது அதிகப்படியான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்.
அதிகப்படியான ரத்தப் போக்கை தமிழில் 'பெரும்பாடு' என்றும் சொல்வார்கள். அந்தப் பிரச்னைக்கு வாழைப்பூ மிகச் சிறந்த மருந்தாகும். அதிகப்படியான ரத்தம் வெளியேறுவதால் ஏற்படும் களைப்பையும் இது போக்கும். வாழைப்பூவின் மேல் தோலை நீக்கிவிட்டு, உள்ளே இருக்கும் பூக்களில் உள்ள கசப்புத் தன்மையுள்ள நரம்புகளை நீக்கிவிடவும். ஒரு கைப்பிடி அளவு பூவை மிக்ஸியில் அரைத்து, சுமார் 30 மில்லி சாறு எடுக்கவும். மாதவிடாய் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இதைக் குடிக்கத் தொடங்கினால், 3 முதல் 4 நாள்களுக்குள் ரத்தப்போக்கு கட்டுப்படும்.
பீரியட்ஸ் நின்ற பிறகும், அடுத்த 2-3 வாரங்களுக்கு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதைக் குடித்து வரலாம். இது கருப்பையைச் சுருங்கச் செய்ய உதவும். மெனோபாஸ் மற்றும் பெரிமெனோபாஸ் எனப்படும் மெனோபாஸுக்கு முந்தைய கட்டத்தில் இருப்போருக்கும் இது மிகச் சிறந்த மருந்தாக வேலை செய்யும்.
ஐந்து இதழ்கள் கொண்ட நாட்டுச் செம்பரத்தம் பூவும் இந்த நோய்க்கு மிகச்சிறந்த மருந்து. ஐந்து செம்பரத்தம் பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து (காம்பு மற்றும் மகரந்தம் நீக்கி), தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து கஷாயமாகத் தயாரிக்கவும். இந்த இளஞ்சிவப்பு நிற கஷாயத்தை, தொடர்ந்து 48 நாள்கள் குடித்து வந்தால், அதிகப்படியான ரத்தப்போக்கு முழுமையாகச் சரியாகும்.
ஆடாதொடை இலைகளும் இந்தப் பிரச்னைக்கான முக்கிய மருந்து. 3 முதல் 5 ஆடாதொடை இலைகளை நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். தினமும் 30 மில்லி சாற்றை இரண்டு வேளை வீதம் 5 நாள்களுக்கோ அல்லது ரத்தப்போக்கு நிற்கும் வரையிலோ குடிக்கலாம்.
சாறாக எடுக்க முடியாவிட்டால், இலைகளை விழுதாக அரைத்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டு வரலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment