Skip to main content

Plastic: `இதயத்தைப் பாதிக்கும் ஷாம்பூ பாட்டில்'- அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு; விரிவான தகவல்கள்!

உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகள் மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் சந்தேகத்துக்கு உட்படுத்துகிறது இந்த ஆய்வு.

நம் இதயத்தை பலவீனமடைய செய்து மரணத்துக்கு வழிவகுக்கும் வில்லன், ஒரு வேதிப்பொருள், நாம் விரும்பி பயன்படுத்தும் ஷாம்பூவிலும், ஆசையாக போடும் மேக்கப்பிலும், சமையலறையில் இருக்கும் டப்பா அல்லது பிற பொருட்களிலோ இருக்கலாம் என அந்த ஆய்வு கூறுகிறது.

நீண்டநாட்களாக நம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாக நாம் அச்சம் கொள்ளும் பிளாஸ்டிக், நம் உடலிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கண்டறிந்துள்ள ஆய்வு, eBiomedicine இதழில் வெளியாகியிருக்கிறது. 

பித்தலேட்டுகள் எனப்படும் சிந்தடிக் வேதிப்பொருட்கள் நம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் இருக்கின்றன. இவை இதய நோய்களால் மரணம் ஏற்படுவதை அதிகரிக்கின்றன.

plastic food package
plastic food package

2018ம் ஆண்டு உலகம் முழுவதும் 55-64 வயதினருக்கு இதய நோய்களால் ஏற்பட்ட இறப்புகளில் 13.5% மரணங்களுக்கு இந்த வேதிப்பொருட்கள் காரணமாயிருந்திருப்பதாக ஆய்வில் கூறுகின்றனர். 

பிளாஸ்டிக்குகளை மென்மையானதாகவும், நீண்டநாள் உழைப்பதாகவும், நெகிழ்வானதாகவும் வைத்திருக்க பித்தலேட்டுகள் சேர்க்கப்படுகின்றன. இவை இதய தமனிகளில் (கரோனரி) வீக்கத்தை ஏற்படுத்தி இதய நோயால் மரணம் ஏற்பட காரணமாகின்றன.

 பித்தலேட்டுகள் இதற்கு முன்னரே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களாக எச்சரிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஆண்களின் இனப்பெருக்கத் திறனை குறைக்கும் எனக் கூறப்பட்டு வந்தது. இவை விந்தணுக்கள் எண்ணிக்கையையும் டெஸ்டோஸ்டிரோன் அளவையும் குறைத்து பிறப்புறுப்பில் குறைபாட்டை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. 

மேலும் இது ஆஸ்துமா, குழந்தைகள் உடல்பருமன் மற்றும் புற்றுநோயுடனும் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

இதய நோய்களை தீவிரப்படுத்தி மரணத்தை ஏற்படுத்துவதில் டை(2-எத்தில்ஹெக்சைல்) என்ற குறிபிட்ட பித்தலேட் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனை DEHP என்று அழைக்கின்றனர்.

பித்தலேட்டுகள் பரவல் உலகம் முழுவதும் உள்ளது. 2018ம் ஆண்டு கிட்டத்தட்ட 200 நாடுகளில் 3.5 லட்சம் மரணங்களுக்கு பித்தலேட்டுகள் காரணமாக இருந்துள்ளன. இவற்றில் தெற்காசியா, மத்திய கிழக்கு, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் அதிக மரணங்கள் ஏற்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

Plastic in Production
Plastic in Production

ஆபிரிக்காவில் இதய பாதிப்பால் ஏற்பட்ட மரணங்களில் 30% பித்தலேட்டுகளுடன் தொடர்புள்ளவை. மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் இது 25% ஆக உள்ளது.

இதய நோயால் அதிக மரணங்கள் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே  நமக்கு இந்த வேதிப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு அவசியம்.

நியூயார்க்கில் நடத்தப்பட்ட ஆய்வு

நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மருத்துவர் லியனார்டோ ட்ரசாண்டே மற்றும் அவரது குழுவினர் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். DEHP என்ற வேதிப்பொருளாலின் தாக்கத்தினால் உலகம் முழுவதும் எத்தனை இதய நோயாளிகள் மரணமடைந்துள்ளனர் என்பதைக் கண்டறிவதே அவர்களது ஆய்வின் நோக்கமாக இருந்தது. 

இதன் மூலம் DEHP தாக்கம் எத்தனை வலிமையாக இருக்கிறது என்பதை அறிய முடியும். இதற்காக 2018ம் ஆண்டில் இதய நோயால் மரணமடைந்த 55 முதல் 64 வயதுக்கு இடைப்பட்டோரின் தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கியிருக்கின்றனர். 

இதய நோயால் இறப்பவர்களின் தரவுகளை IHME நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளனர். மக்கள் எந்த அளவு DEHP வேதிப்பொருளுக்கு வெளிப்படுகின்றனர் என்ற தரவுகளையும் மக்கள் தொகை பற்றிய தரவுகளையும் சேகரித்துள்ளனர்.  முந்தைய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு DEHP எவ்வளவு ஆபத்தானது என்பதை கணக்கிட்டுள்ளனர். 

2008ம் ஆண்டு DEHP பாதிப்பு எந்த அளவில் இருந்துள்ளது என்பதை கண்டறிய உடலில் உள்ள ரசாயனங்களை அளவிடும் ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்புகளைப் பயன்படுத்தியுள்ளனர். 2018ம் அந்த பாதிப்பால் நிலைமை எந்த அளவு மோசமாகியிருக்கிறது என்பதையும் அளவிட்டுள்ளனர்.  உடலில் உள்ள DEHP அளவுக்கும் அது இதய நோயாளிகளில் மரணத்தை ஏற்படுத்துவதற்குமான விகிதத்தைக் கணக்கிட்டிருக்கின்றனர்.

நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மருத்துவர் லியனார்டோ ட்ரசாண்டே

ஆய்வின் முடிவில் நம் உடலில்  DEHP வேதிப்பொருள் இருப்புக்கு 98% நெகிழி (Plastic) பயன்பாடுதான் காரணம் என்பதைக் கண்டறிந்துள்ளனர். இந்தியா, சீனா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் அதிக மக்கள் தொகை மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.

2018ம் ஆண்டு இந்தியாவில் 103,587 மரணங்களுக்கு DEHP காரணமாக இருந்திருக்கிறது. இந்த வேதிப்பொருளால் அதிகபட்ச உயிரிழப்பை சந்தித்துள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. மக்கள் தொகையைக் கடந்து அதிகப்படியான பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மோசமான பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை இதற்கு காரணம் என்கின்றனர்.

DEHP என்பது என்ன?

எல்லா பித்தலேட்டுகளும் பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கக் கூடிய நாப்தலீன் அல்லது ஓ-சைலீனில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன. DEHP (di-2-ethylhexyl phthalate) நெகிழ்வானதாகவும் கொழுப்பில் கரையக்கூடியதாகவும் இருக்க, புரோப்பிலீன் போன்ற பெட்ரோலியத்திலிருந்தே கிடைக்கக் கூடிய ஆல்ஹால் சேர்க்கப்படுகிறது. 

பெரும்பாலும் பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்களே இதைத் தயாரிக்கின்றன. இயற்கையில் இந்த வேதிப்பொருளே கிடையாது. 

பிவிசி உள்ளிட்ட மென்மையான வெகுமக்கள் பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக்குகளில் இது பயன்படுத்தப்படுகிறது. கட்டுமானப் பொருட்கள், உணவு பேக்கேஜிங், மருத்துவ உபகரணங்கள், நுகர்வு பொருட்களில் DEHP உள்ளது.

இந்த வேதிப்பொருள் முன்னரே கூறியதுபோல பிளாஸ்டிக்குக்கு நெகிழ்வுத் தன்மையும் மென்மையும் நீண்டநாள் உழைக்கும் தன்மையும் வழங்கினாலும், இது பிளாஸ்டிக்குடன் வேதியல் பிணைப்பைக் கொண்டிருப்பதில்லை. 

அதாவது பிளாஸ்டிக் மூலக்கூறுகளுடன் ஒட்டியிருக்காமல், சப்பாத்திக்கு மாவில் எண்ணெய் கலப்பதுபோல, பிளாஸ்டிக்குடன் கலக்கப்படுகிறது. இதனால் இது பிளாஸ்டிக்கில் இருந்து பிரிந்து நம் உடலுக்குள் செல்வது எளிமையாகிறது. குறிப்பாக உணவு டப்பாளில் எண்ணெய்ப்பாங்கான பொருட்கள் இருந்தால் எளிதாக அதில் கலந்துவிடும். 

Plastic
Plastic

நீண்டநாட்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படாமல் இருந்தாலும் அதிலிருந்து கசிந்தோ, காற்றுடன் கலந்தோ, மற்ற பொருட்கள் தேய்த்தோ DEHP வெளியேறிவிடும். ஆனாலும் பிளாஸ்டிக்குக்கு குறைந்த செலவில் நெகிழ்வுத்தன்மையைக் கொடுக்கும் இந்த வேதிப்பொருளைச் சேர்ப்பதுதான் லாபகரமானதென்பதால் நிறுவனங்கள் இதைப் பயன்படுத்துகின்றன. 

மருத்துவர் சொல்வது என்ன?

DEHP உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விளக்குகிறார் பொது மருத்துவர் பா.கவின், "டி.எச்.இ.பி என்பது நெகிழிப் பொருள்களுக்கு மென்மையூட்டியாக பயன்படுத்தப்படுகின்றது. இப்பொருள் நம் அன்றாட வாழ்வில் சுற்றுச்சூழல் காரணியாக நம் உடலை ஏதோ ஒரு வகையில் வந்தடைகின்றது.

பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ், பாட்டில், உணவைப் பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள், வீட்டு டைல்ஸ், வயர், கேபிள், அழகுப் பொருட்கள், சில ஷாம்பூ என்று பல காரணிகள் உள்ளன. நாளமில்லா சுரப்பிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த டி.எச்.இ.பி நம் உடலை மூன்று வகையில் அணுகுகின்றது: சுவாசப் பாதை மூலமாகவும், வாய் வழியாகவும் மற்றும் தோல் வழியாகவும்.

உடலுக்குள் DEHP அப்படியே இருப்பதில்லை, வளர்சிதை மாற்றம் மூலம் MEHP, MEHHP, MEOHP, MECPP ஆகிய உயிரினக்கழிவுகளாக (metabolites) மாறுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இந்த வேதிப்பொருட்களின் அளவை வைத்தே ஒருவரின் உடல் எந்தளவுக்கு DEHP -க்கு வெளிப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிவார்கள். 

Blood Streem
Blood

சீனாவில் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகளின் உடல் பருமனுக்கு ஒரு காரணியாகவும் இந்த டி.எச்.இ.பி அமைகின்றது. இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை (oxidative stress) ஏற்படுத்தி DNA-வைப் பாதித்து 'P53' என்று கூறப்படும் புற்றுநோயைத் தடுக்கும் ஜீனில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. NHANES என்ற அமைப்பு 2011 முதல் 2018 வரை நடத்திய ஆய்வில் பல புற்றுநோயாளிகளின் உடலில் இந்த வேதிப்பொருள் அதிகமாக உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

எலிகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வில் இது கருவுற்றிருக்கும் தாய் மூலம் குழந்தைகளுக்கும் இந்த வேதிப்பொருள் சென்று பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆண் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகள் உருவாவதில் பிரச்னையை விதைப்பை, விந்தணுக்களில் பிரச்னையும், பெண்களுக்குக் கருமுட்டை வளர்ச்சியில் பிரச்னை என்று பாதிப்பை ஏற்படுத்துகின்றது." என்றார்.

மேலும், "விலங்குகளில் ஏற்படுத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் விதைப்புற்று, மார்பகப்புற்று, பிராஸ்டேட் புற்று ஆகியவற்றிற்கு காரணியாக இந்த டீஹெச்இபி அமைந்துள்ளது. கருக்குழந்தைகள் கருவில் இருக்கும் வேளையில் இந்த வேதிப்பொருள் அவர்களைப் பாதித்தால், பிற்கால வாழ்வில் புற்று வருவது விலங்குகளில் கண்டறியப்பட்டுள்ளது.

தைராய்டு சுரப்பிகளின் சுரப்பைப் பாதிக்கின்றது. மனிதர்களுக்கு லூயி பாடி டிமென்ஷியா என்ற ஞாபக மறதி நோய் உள்ளவர்களின் மூளை தண்டுவள நீரில் (cerebro spinal fluid) டிஹெச்இபி-யின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதய தசைகள், செல்கள், ரத்த நாளங்கள் ஆகியவற்றிற்கும் பாதிப்பை ஏற்படுத்தி, பல இதய கோளாறுகளுக்கு ஒரு அடித்தளமாக இது அமைகின்றது.

சில மணிநேரங்கள் முதல் ஒன்றிரண்டு  நாட்கள் வரை உடலில் இருக்கும் DEHP-ல் இருந்து வரும் தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப்பொருட்கள், சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும். ஆனால் அதனால் ஏற்பட்ட பாதிப்பு நீண்ட நாட்களுக்கு இருக்கும். தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் DEHP-உடன் தொடர்புகொள்வதுதான் தீவிர பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. 

பொது மருத்துவர் பா.கவின்
பொது மருத்துவர் பா.கவின்

இன்டர்நேஷனல் ஏஜென்சி ஆஃப் ரிசர்ச் ஆன் கேன்சர் IARC இந்த டிஹெச்இபி-யை கிளாஸ் 3 காரணியாகக் கூறுகின்றது. அதாவது விலங்குகளில் இது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியதாகவும், மனிதர்களுக்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அது கூறுகின்றது. ஆனால் பல ஆராய்ச்சியாளர்கள் இந்த டிஹெச்இபி மனித இனத்திற்கு கேடு விளைவிப்பதாக அறிவிக்க வேண்டும் என்ற கூற்றை முன்வைக்கின்றனர். நாம் நம் அன்றாட வாழ்வில் எப்படி இந்த டிஹெச்இபி-யைத் தவிர்ப்பது என்று பார்த்தால், பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும்.

இது 1958 ஆம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வேதிப்பொருளாக இருந்தாலும், இது குறித்த ஆராய்ச்சிகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன." என்றார்.

எந்தெந்த பொருட்களில் DEHP அபாயம் அதிகம்?

மருத்துவத்துறையில் பயன்படுத்தக் கூடிய டியூப்கள், பைகள் மூலம் DEHP உடலில் எளிதாக நுழைய முடியும். இதய நோயாளிகளுக்கு இந்த பொருட்களைப் பயன்படுத்துவது அபாயத்தை அதிகரிக்கிறது. 

உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைப்பது, பிளாஸ்டிக் கவரில் ( PVC cling wrap) சுற்றி வைப்பது, உணவு பரிமாற பயன்படுத்தும், உணவு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் உணவில் இந்த வேதிப்பொருள் கலக்கிறது. குறிப்பாக கொழுப்பு நிறைந்த, சூடான உணவுப்பொருட்கள் மூலம் எளிதாக உடலுக்குள் நுழைகிறது. 

Plastic Toys
Plastic Toys

அன்றாடம் பயன்படுத்தும் ஒப்பனைப் பொருட்கள், ஷாம்பு, லோஷன், வாசனைப் பொருட்கள், தரையில் ஒட்டும் ஃப்ளோரிங் ஸ்டிக்கர்கள், காரில் இருக்கும் சீட் கவர்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகளும் கூட இந்த வேதிப்பொருளைக் கொண்டிருக்கின்றன. 

அபாயத்தை தவிர்ப்பது எப்படி?

  • பிவிசி பிளாஸ்டிக்குகளைத் தவிர்ப்பது அவசியம். இதனை மறுசுழற்சி குறியீடு எண் 3 என இருப்பதைக் கொண்டு அறியலாம்.

  • குழந்தைகள் இதனால் எளிதாக பாதிக்கப்படலாம் என்பதால், குழந்தைகளுக்கு மர விளையாட்டு சாமான்களைக் கொடுக்கலாம்.

  • தண்ணீர் பாட்டில்கள், உணவு டப்பாக்களுக்கு பிளாஸ்டிக் அல்லாத பொருட்களைப் பயன்படுத்தலாம். 

  • பிளாஸ்டிக்குக்கு மாற்றாக செராமிக், கண்ணாடி பொருட்களைப் பயன்படுத்தலாம். குறிப்பாக மைக்ரோவேவில் சூடுபடுத்தும்போது பிளாஸ்டிக் கூடவே கூடாது. 

  • லோஷன்கள், சலவைப் பொருட்கள், சுத்தப்படுத்தும் பொருட்களில் மணமற்றவற்றைத் தேர்வு செய்யலாம். 

  • உணவுப் பொருட்களை வைக்க கண்ணாடி, செராமிக், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், மர பெட்டகங்களைப் பயன்படுத்தலாம். 

  • பெட்டிகளில் அடைக்கப்பட்ட பழங்கள், காய்கறிகளுக்கு பதிலாக ஃப்ரெஷ்ஷானவற்றை வாங்கலாம்.

  • கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

  • Air Freshener -களைத் தவிர்க்க வேண்டும்.

  • வீட்டை சுத்தமாக வைத்திருப்பது பிளாஸ்டிக் மாசு உடலுக்குள் நுழைவதைத் தடுக்கும்.

  • மறுசுழற்சி குறியீடு எண் 6 மற்றும் 7 என இருக்கும் பிளாஸ்டிக்குகளையும் தவிர்க்க வேண்டும். 

  • மருத்துவமனைகளில் DEHP-free உபகரணங்கள் இருக்கிறதா எனக் கேட்கலாம்.

  • ஷாம்பு, லோஷன், வாசனை திரவியம், நெயில் பாலிஷ்களில் வாசனை இல்லாத, பித்தலேட்டுகள் இல்லாத தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம்.

  • குழந்தைகள், கர்பிணி பெண்கள் மற்றும் முதியோர்களை அதிக கனவத்துடன் கவனித்துக்கொள்ளலாம்.

  • உலகளாவிய அரசுகள் பித்தலேட்டுகள் தயாரிப்பை தடை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் பிளாஸ்டிக் ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் இந்த ஆய்வு முன்மொழியப்படும் எனக் கூறப்படுகிறது.

சுருக்கமாக பிளாஸ்டிக்கில் கலக்கப்படும் செயற்கையான DEHP வேதிப்பொருள், நாம் நெகிழிப்பொருட்களைப் பயன்படுத்தும்போதெல்லாம் நம் உடலுக்குள் நுழைந்து ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கிறது. ஒரு நாளில் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும் இதன் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த, தினசரி எல்லாவற்றுக்கும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...