Doctor Vikatan: காலை உணவுக்கு இட்லி, தோசை போன்ற வழக்கமான உணவுகளைச் சமைக்க முடியாதபோது, அவசரத்துக்குக் கைகொடுப்பவை கார்ன் ஃப்ளேக்ஸும், ஓட்ஸும்தான். இவை உண்மையிலேயே ஆரோக்கியமான உணவுகள்தானா... தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ரேச்சல் தீப்தி

தவிர்க்க முடியாதபோது, என்றோ ஒன்றிரண்டு நாள்களுக்கு ஓட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ் போன்றவற்றைச் சாப்பிடுவதில் தவறில்லை. அப்படி சாப்பிடும்போது ஆரோக்கியமான சில விஷயங்களைப் பின்பற்றலாம். உதாரணத்துக்கு, இன்ஸ்டன்ட் ஓட்ஸுக்கு பதில் ஸ்டீல் கட் ஓட்ஸ் பயன்படுத்தலாம். அதில் நார்ச்சத்து அதிகம். அதிகமாகப் பதப்படுத்தப்பட்டிருக்காது.
ஓட்ஸை வெறும் கஞ்சியாகச் செய்து சாப்பிடுவதற்குப் பதில் அதில் நிறைய காய்கறிகள் சேர்த்து உப்புமாவாகவோ, கடலைமாவு, ஓட்ஸ், காய்கறிகள் சேர்த்த தோசை, இட்லி, கட்லெட்டாகவோ செய்து சாப்பிடலாம். ஓட்ஸில் உள்ள பீட்டா குளுக்கன் எனும் ஒருவகையான நார்ச்சத்து, ரத்தச்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, எடைக் குறைப்புக்கும் உதவும். ஓட்ஸில் குளூட்டன் உள்ளது, இல்லாதது என இரண்டும் கிடைக்கிறது. எனவே, குளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் இதைப் பார்த்து வாங்கிப் பயன்படுத்தலாம்.
நமக்கு அதிகம் பழக்கமில்லாத இத்தகைய உணவுகளை வாங்கும்போது, அவற்றில் என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளன என லேபிளை படிக்கவும். ப்ரிசர்வேட்டிவ்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனவா எனக் கவனிக்கவும். ப்ரிசர்வேட்டிவ்ஸ், கெமிக்கல்ஸ் போன்றவை நம் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும்.

பெரும்பாலான இன்ஸ்டன்ட் உணவுகளில் அதிக சர்க்கரை, அதிக உப்பு அல்லது கொழுப்பு சேர்த்துத் தயாரிக்கப்பட்டிருக்கும். எனவே, எப்போது பாக்கெட் உணவை வாங்கினாலும் லேபிளை பார்த்து அதை உறுதிசெய்துகொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளவும்.
கார்ன்ஃப்ளேக்ஸும் பதப்படுத்தப்பட்ட உணவுதான். கார்ன்ஃப்ளேக்ஸுக்குப் பதில் ராகி அவல், நெல் பொரி, சிறுதானிய அவல் போன்றவற்றைப் பால், பழங்கள், டிரை ஃப்ரூட்ஸ் போன்றவைச் சேர்த்துச் சாப்பிடலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. கொலஸ்ட்ராலும் அதிகரிக்கும்.
எனவே, எப்போதாவது ஒரு மாறுதலுக்கு இந்த உணவுகளைச் சாப்பிடலாம். மற்றபடி, எளிமையாகவும், ஆரோக்கியமாகவும் செய்து சாப்பிடும்படியான பாரம்பர்ய உணவுகள் எத்தனையோ உள்ளன. அவற்றைத் தெரிந்துகொண்டு உங்கள் ஆரோக்கியத்தையும் மீட்டெடுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel
Comments
Post a Comment