Doctor Vikatan: என் குழந்தைக்கு 2 வயதாகப் போகிறது. குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது. ஒன்றேகால் வயதில் ஒருமுறை யூரினரி இன்ஃபெக்ஷன் வந்து, மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். ஆன்டிபயாட்டிக் கொடுத்து சரியானது. ஆனாலும் அடிக்கடி காய்ச்சல் வருகிறது. நாங்களும் ஆன்டிபயாட்டிக் கொடுக்கிறோம். ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் காய்ச்சல் திரும்பத் திரும்ப வருகிறது. இதற்கு என்ன காரணம், என்ன தீர்வு?
- சுகந்தி, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி

குழந்தையின் வயதைக் குறிப்பிட்ட நீங்கள், ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று குறிப்பிடவில்லை. ஒன்றேகால் வயதில் யூரினரி இன்ஃபெக்ஷன் வந்ததாகச் சொல்லியிருப்பதால், ஒருவேளை பெண் குழந்தையாக இருப்பின், அந்த இன்ஃபெக்ஷன் மீண்டும் மீண்டும் வருகிறதா என்று பார்க்க வேண்டியிருக்கும்.
பொதுவாகவே, ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு யூரினரி இன்ஃபெக்ஷன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆண் குழந்தையாக இருந்தால், சிறுநீர் வெளியேறும் பாதையில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்று பார்க்க வேண்டியிருக்கும். குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது, ஆன்டிபயாட்டிக் கொடுக்கிறோம் என்று நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்க்கும்போத, உங்கள் குழந்தைக்கு மருத்துவ ஆலோசனையின்றி நீங்களாக சிகிச்சை கொடுக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. அப்படிச் செய்கிறீர்கள் என்றால் அது மிக மிகத் தவறு.

முதலில் குழந்தைகள்நல மருத்துவரிடம் உங்கள் குழந்தையைக் காட்டி ஆலோசனை பெறுங்கள். ரத்தப் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை, தேவைப்பட்டால் பிளட் ஸ்மியர் பரிசோதனை போன்றவற்றைச் செய்து பார்க்க வேண்டியிருக்கும். குழந்தைக்கு அடிக்கடி இன்ஃபெக்ஷனும் காய்ச்சலும் வருவதற்கான காரணங்களை அதில் தெரிந்துகொள்ளலாம். அதற்கேற்ப சிகிச்சை கொடுத்தால்தான் இந்தப் பிரச்னையிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும்.
அதைத் தவிர்த்து நீங்களாக ஆன்டிபயாட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தால், ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ் (antibiotic resistance) எனப்படும் ஆன்டிபயாட்டிக் எதிர்ப்புத்தன்மை வந்துவிடும். அதன் பிறகு எந்த ஆன்டிபயாட்டிக் மருந்தும் வேலை செய்யாத நிலை வரும். எனவே, பிரச்னையை மேலும் சிக்கலாக்காமல், உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

Comments
Post a Comment