''மனதை மயக்கும் மல்லிகைப்பூவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. இதன் வாசனை, மருந்தாகவும் பலன் தருகிறது என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மல்லிகைப் பூ, உடலுக்குப் புத்துணர்ச்சியையும், மனதுக்கு மகிழ்ச்சியையும் தருவதுடன், சருமத்தை பளபளப்பாகவும், தலைமுடியை பாதுகாப்பாகவும் வைத்திருக்கும்'' என்கிற இயற்கை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி, மல்லிகையின் மகத்துவத்தை மேலும் விவரிக்கிறார்.

அரைத்த சந்தனத்தை, மல்லிகைச்சாறுடன் கலந்து கண்ணுக்குக் கீழ் கருமைப் படர்ந்த இடத்தில் தினமும் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். கருவளையம் காணாமல்போகும். பெண்கள், இதனுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து கலந்து பூசலாம்.
கண்களுக்கு அதிக வேலை தரும்போது, கண்களில் இருந்து நீர் அதிகம் வெளியேறும். இதற்கு மல்லிகைப் பூவை நீரில் கொதிக்கவிட்டு, ஆறியபின் அந்த நீரைக்கொண்டு கண்களைக் கழுவுங்கள். சோர்வும் நீங்கும். கண்களும் பளிச்சென தெரியும்.
மல்லிகைப் பூ உலர்ந்துவிட்டதே என்று தூக்கி எறியாமல், உலர்ந்த மல்லிகைப் பூ ஒரு கப் எடுத்து, அதனுடன் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, நான்கு துண்டு ஆப்பிள் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளுங்கள். இதைக்கொண்டு முகத்துக்குப் பேக் போடுங்கள். சிறிது நீரைக் கொதிக்கவைத்து அதில் ஃபிரெஷ் மல்லிகைப்பூவைப் போட்டு அதைக்கொண்டு முகத்தைக் கழுவுங்கள். உடலிலும் பூசிக் கொள்ளலாம். இதனால், தோலில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். சோர்வு மறைந்து ரெட்டிப்பு பளபளப்பை தருவதுடன் குளிர்ச்சியையும் கொடுக்கும்.

40 கிராம் மல்லிகைப் பூவுடன் மனோரஞ்சிதம், மகிழம் பூ, ஆவாரம் பூ இவை தலா 20 கிராம் சேர்த்து கலந்து, அரை கிலோ தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சவேண்டும். இரண்டு நாள்களில் பூக்களின் சாறு எண்ணெயுடன் கலந்து அடியில் தங்கிவிடும். இந்த எண்ணெயை தினமும் உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவி 10 நிமிடம் ஊறவேண்டும். பிறகு, பயத்தமாவால் நன்றாக அலசவேண்டும். இதனால், தோலில் உள்ள சுருக்கம் மறைந்து, பொன்னிறமாக ஜொலிக்கும்; கூந்தலும் நறுமணம் வீசும்.
மல்லிகைப் பூவை உலர்த்தி அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடர் இரண்டு டீஸ்பூனுடன், இரண்டு டீஸ்பூன் வெந்தயப் பொடியைக் கலந்து, தலைக்கு பேக் போட்டு, அரைமணி நேரம் கழித்து அலசுங்கள். வாரம் இருமுறை இந்த பேக் போட்டு அலச, பிசுக்கு போய், கூந்தல் பளபளக்கும். செழிப்பாக வளரும். வாசமும் வீசும்.

உலர்ந்த மல்லிகைப் பூ - 100 கிராம், மரிக்கொழுந்து, புங்கங்காய் தோல் - தலா 50 கிராம், ரோஜா இதழ் - 20 கிராம், ஓமம் - 10 கிராம் இவற்றை மெஷினில் கொடுத்து நன்றாக பொடித்துக்கொள்ளுங்கள். வாரம் இரண்டு நாள்கள் இந்தப் பொடியை உடல் முழுவதும் தேய்த்துக் குளியுங்கள். சரும பிரச்னைகள் நீங்கும். அந்த நாள் முழுவதும் உடலில் சுகந்த மனம் வீசிக்கொண்டேயிருக்கும்.
இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு மஸ்லின் துணியில் மல்லிகைப் பூவை வைத்து தலையணைக்குள் வைத்துவிடுங்கள். அறை முழுவதும் வாசம் வீசுவதுடன், தூக்கம் கண்களைத் தழுவும். காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்க முடியும்.
Vikatan Play
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/ParthibanKanavuAudioBook

Comments
Post a Comment