காய்கறிகளை முறையாகச் சுத்தம் செய்து உபயோகிப்பது கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும். சமையலின் கொதிநிலையில் கிருமிகள் போய்விடும் என்ற பொதுக்கருத்து நிலவினாலும், நீரில் நன்கு சுத்தம் செய்து சமையலில் பயன்படுத்துவது தான் சுகாதாரமானதும் ஆரோக்கியமானதும். இதைப் பற்றி விளக்குகிறார், ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம் விநோத்.
``ஒரு நபர் தினசரி உணவுகளில் 3 கப் அளவுக்கு காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும். வேகவைத்தோ, பச்சையாகவோ, பச்சடியாகவோ சாப்பிடலாம். எந்தக் காய்கறியையும் பழத்தையும் சமைக்கவோ சாப்பிடவோ எடுத்துக்கொள்ளும் முன் ஒருமுறைக்கு இரண்டுமுறை நன்கு கழுவிச் சுத்தம் செய்துவிட வேண்டும்.
காய்கறிகள், பழங்களைக் கையாள்வதற்கு முன்பும், பணிகள் முடிந்த பின்பும் கைகளைக் கிருமி நாசினியாலோ சோப்பினாலோ நன்கு கழுவிவிடுதல் அவசியம்.
காய்கறி, பழங்களைக் கழுவுவதில் இரண்டு முறைகள் உண்டு. கண்ணுக்குத் தெரிந்த தூசுகளை நீக்குவது. அடுத்தது, கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை நீக்குவது.
காய்கறிகளும் பழங்களும் வெளித்தூசுகளில் கிடந்து வந்திருப்பவை. எனவே, அவற்றை முதலில் சுத்தமான நீரில் நன்கு கழுவிவிட வேண்டும்.
அடுத்து, வெந்நீரால் கழுவ வேண்டும். சாதாரண நீரைவிட வெந்நீரால் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அதிகமாகவும் விரைவாகவும் அழியும். ஒருமுறை கழுவியதும் வெந்நீரை கீழே ஊற்றிவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் மீண்டும் அந்த நீரைப் பயன்படுத்தக்கூடாது.
இரண்டு முறையிலும் சில விநாடிகளுக்கு நிதானமாகவும் பொறுமையாகவும் கழுவ வேண்டும். காய்கறிகளைக் கழுவுவதில் அவசரம் கூடாது.
எக்காரணம் கொண்டும் எந்தச் சூழலிலும், காய்கறி பழங்களை ஒருமுறை கழுவிய நீரை மறுமுறை கழுவுவதற்குப் பயன்படுத்தவே கூடாது.
தண்ணீரை, ஊற்றித்தான் கழுவ வேண்டும், பாத்திரத்தில் பிடித்து வைத்து பழம் காய்கறிகளைக் கழுவக் கூடாது. ஓடுகிற தண்ணீரிலேயே கிருமிகள் அழியும்.
கீரைவகைகளை சுத்தம் செய்வதில் கூடுதல் சிரத்தை அவசியம். உப்பு, மஞ்சள்தூள் கலந்த நீரில் அலசலாம். இது நல்லதொரு கிருமிநாசினி முறை.
கேரட், வெள்ளரி உள்ளிட்ட காய்கறிகளையும் ஆப்பிள் போன்ற பழங்களையும் தோலுரித்துச் சாப்பிடுகின்றனர். இது முழுக்கவே தவறானது. தோலில்தான் நிறையச் சத்துகள் நிரம்பியிருக்கும். தோலை உரித்துக் கீழே எறிவது, சத்துக்களைத் தூக்கிப் போடுவதற்குச் சமம். ஆகவே தோலோடு அவற்றைக் கழுவி சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்.’’
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
Comments
Post a Comment