Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கால்களில் வீக்கம் ஏற்படுவது ஏன்... அது உடலில் உப்பு சேர்வதன் அடையாளமா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்படுவதா... கால் வீக்கத்துக்கு சிகிச்சைகள் எடுக்க வேண்டுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
கர்ப்பகாலத்தில் கால் வீக்கம் என்பது இயல்பான விஷயம்தான். கருவிலுள்ள குழந்தைக்கு ஆரம்ப நாள்களில் தாயிடமிருந்துதான் ரத்த ஓட்டம் செல்ல வேண்டியிருக்கும். அதனால் ரத்தத்தின் அளவு அதிகமாகும்.
ரத்த ஓட்ட அளவு அதிகரிப்பதன் விளைவாக, கர்ப்பிணிகளுக்கு உடலில், குறிப்பாக கால்களில் அதிக அளவில் நீர் கோத்துக்கொள்ளும். அதனால் கால்களில் வீக்கம் ஏற்படுவதும் இயல்பாகவே நடக்கும். கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் உள்ள பெண்கள், கால்களில் வலி இல்லாதவரை அது குறித்து பயப்படத் தேவையில்லை. கர்ப்பிணிகளுக்கு கர்ப்பத்தின் 12-வது அல்லது 13-வது வாரங்களில் கால்கள் வீங்க ஆரம்பிக்கும். 28 வாரங்களில், அதாவது கர்ப்பத்தின் 7-வது மாதத்தில் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் இருக்கும்.
கர்ப்பத்தில் ஒரு குழந்தைதான் இருக்கிறது, ரத்த அழுத்தம் இல்லை என்ற நிலையில், கால் வீக்கம் இருந்தால், அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அதுவே ஒரு காலில் மட்டும்தான் வீக்கம் இருக்கிறது, இன்னொரு கால் நார்மலாக இருக்கிறது, வீக்கமுள்ள காலில் வலியும் இருக்கிறது என்றால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். வீக்கமுள்ள காலில் ரத்தம் உறைவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ட்வின்ஸ் அல்லது ட்ரிப்லெட்ஸ் என ஒன்றுக்கு மேலான குழந்தைகளைச் சுமக்கும் பெண்களுக்கு கால் வீக்கம் என்பது நார்மலானதுதான். எப்படிப்பட்ட கால் வீக்கமும் ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்படவில்லை என்றால் பொறுத்திருந்து பார்க்கலாம். அதுவே, கர்ப்பிணிக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்தால், அவரது உடலிலிருந்து அதிக அளவிலான புரதச்சத்து வெளியேறுவதாக அர்த்தம். அந்நிலையில் அவர்கள் மருத்துவரை அணுகி, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். வேலை நிமித்தம் நீண்ட நேரம் நின்றுகொண்டே இருக்கும் கர்ப்பிணிகளுக்கும் கால் வீக்கம் வரலாம். அவர்கள் இரவு தூங்கும்போது கால்களுக்கு இரண்டு தலையணைகள் வைத்துக்கொண்டு படுத்தால், வீக்கம் வடியத் தொடங்கும். வேலையிடத்தில் கால்களைத் தொங்கவிட்டபடி அமராமல் சின்ன ஸ்டூல் வைத்து அதில் கால்களை வைத்தபடி உட்கார்ந்தால் வீக்கத்தைத் தவிர்க்கலாம்.
கால் வீக்கமானது கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்தால் பிரச்னையில்லை. திடீரென ஏற்பட்டால்தான் அலெர்ட் ஆக வேண்டும். உடல் முழுவதும் வீங்கினாலோ, முகம் வீங்கினாலோ, உடைகள் டைட் ஆனாலோ அதெல்லாம் அசாதாரண அறிகுறிகள் என உணர வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண் உடலில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும் அது கருவிலுள்ள குழந்தையையும் பாதிக்கும் என்பதால் எந்த அறிகுறியையும் அலட்சியம் செய்யாமல் இருப்பதே பாதுகாப்பானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment