Doctor Vikatan: அடிக்கடி முருங்கைக்கீரையை எடுத்துக்கொள்ள முடியாதவர்கள், முருங்கைக்கீரை பொடியை வைத்துச் செய்யப்படுகிற மாத்திரைகளை, கேப்ஸ்யூலை எடுத்துக்கொள்ளலாம் என விளம்பரப்படுத்தப்படுகிறதே... அது எந்த அளவுக்கு நம்பகமானது...? அவ்வளவு சிறிய மாத்திரையில் முருங்கைக்கீரையில் உள்ள சத்து முழுமையாகக் கிடைத்துவிடுமா?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்
கீரை வகைகளைப் பொறுத்தவரை எப்போதும் ஃப்ரெஷ்ஷாக சமைத்துச் சாப்பிடுவதுதான் சிறந்தது. முருங்கைக்கீரைக்கு மட்டுமல்ல, எல்லா கீரை, காய்கறிகளுக்கும் இது பொருந்தும்.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள், அடிக்கடி கீரைகளை வாங்கிச் சமைத்துச் சாப்பிட முடியாதவர்கள், கீரைகளை உலரவைத்துச் செய்த பொடியை எடுத்துக்கொள்ளலாம். மாத்திரைகளாக, கேப்ஸ்யூலாக எடுக்கும்போது அது உடலில் கரைவதில் பிரச்னையிருக்காது. ஆனாலும், கீரைகளை ஃப்ரெஷ்ஷாக சாப்பிடுவதுதான் சிறந்தது.
கீரைகளைப் பொடிகளாகப் பயன்படுத்தும்போது அதன் நம்பகத்தன்மை மிகவும் முக்கியம். முருங்கைக்கீரையைப் பொறுத்தவரை அந்தக் கீரை கிடைப்பதில் பிரச்னையில்லை என்பதால் பெரும்பாலும் அதைத்தான் கலந்திருப்பார்கள். இருந்தாலும் அவை விற்பனை செய்யப்படுகிற இடம், அந்தப் பொருளின் தரம் போன்றவற்றையும் பார்க்க வேண்டியது அவசியம். முருங்கைக்கீரையைப் போலவே மற்ற கீரைகளின் பொடிகளையோ, வேறு மூலிகைகளையோ இப்படி வாங்கும்போது அவற்றில் மலிவான மாற்றுப்பொருள்களைக் கலக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும்.
சைவ உணவுக்காரர்கள் வற்றல் பயன்படுத்துவது போல, அசைவ உணவுக்காரர்கள் மீன்கள் கிடைக்காத சீசனில் கருவாடு போன்ற வடிவத்தில் எடுத்துக்கொள்வதுபோலத்தான் கீரைகளைப் பொடியாகப் பயன்படுத்துவதும். காலத்துக்கேற்றபடி எப்போதாவது பயன்படுத்துவதில் தவறில்லை. மற்றபடி முருங்கைக்கீரையை சூப்பாகவோ, பருப்பு சேர்த்துக் கடைந்தோ சாப்பிடுவதுதான் சிறந்த பலன்களைத் தரும். இது எல்லாக் கீரைகளுக்கும் பொருந்தும். பொடியாகவோ, கேப்ஸ்யூலாகவோ எடுத்துக்கொள்ளும்போது முழுமையான பலன் கிடைக்காது.
'கீரைகள், காய்கறிகள் எடுத்துக்கொள்ளும்போது அவற்றின் பலன் முழுமையாகக் கிடைக்காது, அதனால் அதே பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளை, கேப்ஸ்யூல்களையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்' என்ற கருத்தும் பலருக்கு உண்டு. நீங்கள் எடுத்துக்கொள்கிற காய்கறி, கீரைகளிலிருந்து அவற்றின் சத்துகள் நிச்சயம் கிடைக்கும். அளவோடு எடுத்துக்கொள்ளும்போது அதனதன் பலன் நிச்சயம் உடலில் சேரும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment