Doctor Vikatan: முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, தன் மனைவிக்கு மார்பகப் புற்றுநோய் இருந்ததாகவும், நான்காவது ஸ்டேஜில் இருந்த புற்றுநோயை குணப்படுத்த வாய்ப்பில்லை என மருத்துவர்கள் சொன்னதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதையடுத்து தன் மனைவிக்கு மஞ்சள், வேப்பிலை போன்றவற்றைக் கொடுத்து குணமாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியம்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயன் செல்வராஜ்.
இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி, நவீன மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளால்தான் குணமடைந்திருக்கிறார். நவ்ஜோத் குறிப்பிட்டுள்ளபடி இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பது, எலுமிச்சை நீர், மஞ்சள், வேப்பிலை போன்றவற்றை எடுத்துக்கொள்வதன் மூலமெல்லாம் புற்றுநோய்க் கட்டிகள் குணமாகாது.
புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவர்கள் எல்லாம் கீமோதெரபி மற்றும் நவீன மருத்துவ சிகிச்சைகளின் மூலம்தான் குணமடைகிறார்கள். இவர்கள் ஒரு பிரிவினர். இன்னொரு பிரிவினரும் கீமோதெரபி மற்றும் நவீன மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு, கூடவே இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங், எலுமிச்சை நீர், மஞ்சள் தூள், ஆப்பிள் சைடர் வினிகர், வேப்பிலை, துளசி போன்றவற்றையும் எடுத்துக்கொள்பவர்கள். அவர்களிலும் பெரும்பாலானவர்கள் குணமடைகிறார்கள்.
இன்னொரு பிரிவினர் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை பின்பற்றுவது, எலுமிச்சை நீர், மஞ்சள் தூள், ஆப்பிள் சைடர் வினிகர், வேப்பிலை, துளசி எடுத்துக்கொள்வது போன்றவற்றை மட்டும் பின்பற்றுபவர்கள். அவர்களில் ஒருவர்கூட உயிர் பிழைப்பதில்லை. அத்தனை பேரும் உயிரிழக்கிறார்கள். நான்காவது பிரிவினர், இவற்றில் எதையுமே பின்பற்றாதவர்கள். அவர்களும் உயிர் பிழைப்பதில்லை.
அந்த வகையில் கீமோதெரபி, அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி போன்றவற்றை எடுத்துக்கொள்பவர்களும், இதே சிகிச்சைகளோடு கூடவே இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங், எலுமிச்சை நீர், மஞ்சள் தூள், ஆப்பிள் சைடர் வினிகர், வேப்பிலை, துளசி போன்றவற்றையும் எடுத்துக்கொள்பவர்களும் புற்றுநோயிலிருந்து மீள்கிறார்கள். வெறும் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் மட்டுமோ, அல்லது எலுமிச்சை நீர், மஞ்சள் தூள், ஆப்பிள் சைடர் வினிகர், வேப்பிலை, துளசி போன்றவை மட்டுமோ புற்றுநோயை நிச்சயம் குணப்படுத்தாது.
நவ்ஜோத் சிங் குறிப்பிட்டுள்ளபடி இத்தகைய தவறான செய்திகளைக் கேள்விப்படுகிற மக்கள், புற்றுநோய் பாதிக்கும் பட்சத்தில் அதற்கான நவீன மருத்துவ சிகிச்சைகளை நாடாமல், எலுமிச்சை நீர், மஞ்சள் தூள் போன்ற விஷயங்களை நாடிச் செல்ல வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற தவறான பரப்புரைகள் தவிர்க்கப்பட வேண்டும். இத்தகைய தவறான தகவல்களை நம்பி, புற்றுநோயாளிகள் சிகிச்சையை தாமதிக்கும் பட்சத்தில் அவர்களின் வாழ்நாள் குறையும் என்பதை மறக்கக்கூடாது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment