Doctor Vikatan: சினிமா நட்சத்திங்கள், மாடல்கள், பிரபலங்கள் என பல பெண்களுக்கும் பிரசவத்துக்குப் பிறகும்கூட தொப்பை போடாமல், வயிறு ஃபிளாட்டாக இருப்பதைப் பார்க்கிறோம். அவர்களைப் போலவே உடற்பயிற்சி செய்தாலும் சாமானியர்களுக்கு மட்டும் flat tummy சாத்தியமே ஆவதில்லையே... ஏன்? இதற்கு ஏதேனும் வழிகள் உண்டா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்
நடிகைகளைப் போலவும் மாடல்களை போலவும் கொஞ்சமும் சதைப்பிடிப்பற்ற, தொப்பையில்லாத வயிறு வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. இது சாத்தியமா, இல்லையா என்று பார்ப்பதற்கு முன் ஒரு விஷயத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
தொப்பை மட்டுமல்ல, உடலின் எந்தப் பகுதியிலும் சதை போடாமல் இருக்க வேண்டும் என்றால் அது உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் மட்டுமே சாத்தியம். அதாவது 80 சதவிகிதம் உணவுக்கட்டுப்பாடும், 20 சதவிகிதம் உடற்பயிற்சியும் மட்டுமே அதை சாத்தியப்படுத்தும். உணவுக்கட்டுப்பாடு என்பது பேலன்ஸ்டு உணவாக இருக்க வேண்டியது முக்கியம்.
இதைத்தாண்டி, எடைக்குறைப்பு இலக்கில் வெற்றிபெற விரும்புவோருக்கு சிம்பிளான ஒரு தீர்வு சொல்கிறேன். 30:30 என்ற ஃபார்முலாவை பின்பற்றுங்கள். அதாவது ஒரு நாளில் 30 கிராம் அளவு புரதச்சத்து, 30 கிராம் அளவு நார்ச்சத்துள்ள உணவுகள் எடுத்துக்கொள்வதை உறுதிசெய்யுங்கள். குறிப்பாக, உங்களுடைய முதல் உணவில் முடிந்த அளவுக்கு 30 கிராம் புரதச்சத்து சேர்த்துக்கொள்கிறீர்களா என்று பாருங்கள். அதேபோல 30 கிராம் நார்ச்சத்துக்காக காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.
கொய்யாப்பழம், முருங்கைக்கீரை, வாழைத்தண்டு, வாழைப்பூ, அவரைக்காய் போன்றவை அதிக நார்ச்சத்து உள்ளவை. ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்கு சியா சீட்ஸ் அல்லது ஃபிளாக்ஸ் சீஸட்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றுடன் நிறைய தண்ணீர் குடிப்பதை உறுதிசெய்யுங்கள். அதன் மூலம் மலச்சிக்கல் வராமலிருக்கும். இந்த டிப்ஸை தினமும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் நீங்கள் எதிர்பார்க்கும் எடைக்குறைப்பு சாத்தியமாகும்.
வயிற்றுப்பகுதியில் உள்ள லேசான தொப்பையோ, சதைப்பிடிப்போ ரொம்பவும் நார்மலானதுதான். குறிப்பாக பெண்களுக்கு இப்படி இருப்பது பிரச்னைக்குரியது அல்ல. கர்ப்பப்பை, சினைப்பை போன்ற உள் உறுப்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் அந்த லேசான சதைப்பிடிப்பு அவசியமானதுதான். ஹார்மோன்களின் உற்பத்திக்கும் சிறிதளவு கொழுப்பு அவசியம். எனவே, பெண்கள் எந்த வடிவ உடல் அமைப்பு உள்ளவர்களாக இருந்தாலும், லேசான வயிற்றுச் சதையைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment