குழந்தைகள் இரவு நேரத்தில் படுக்கையில் சிறுநீர் கழிப்பது என்பது மிகச் சாதாரணமான ஒன்று. அறிந்தோ அறியாமலோ அவர்களுக்குள் நடக்கும் இந்தச் செயல்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மாற வேண்டும். அது 10, 15 வயதைக் கடந்த பிறகும் தொடர்ந்தால் கவனத்தில்கொள்ள வேண்டும்.
இது எதனால் ஏற்படுகிறது; இது சரி செய்யக்கூடியதா என்று நரம்பியல் மருத்துவர் பெ.வெங்கடேஷிடம் கேட்டோம்.
''குழந்தைகள் இரவு நேரத்தில் தூக்கத்தின்போது சிறுநீர் கழிப்பதை `நாக்டர்னல் என்யூரிசிஸ்' (Nocturnal enuresis) என்பார்கள். இந்தப் பிரச்னை மரபுரீதியாகவும் வரலாம். தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பிரச்னையை `பிரைமரி பெட் வெட்டிங்' (Primary Bedwetting), `செகண்டரி பெட் வெட்டிங்' (Secondary Bedwetting) என இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம். 'பிரைமரி பெட்வெட்டிங்' என்பது நரம்பு தொடர்பான பிரச்னையால் வரலாம். சிறுநீர்த்தொற்று காரணமாகவோ, கால்சியத்தின் அளவு அதிகரிப்பதாலோ, சர்க்கரை நோய் பாதிப்பதாலோ ஏற்படுவது `செகண்டரி பெட் வெட்டிங்'.
செகண்டரி பெட் வெட்டிங் இல்லையென்றால் அவர்களுக்கு பிரைமரி பெட் வெட்டிங் ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிவோம். பெரும்பாலும் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்துவோம். உதாரணத்துக்கு, அந்தக் குழந்தைகளை இரவு 7 மணிக்கு மேல் நீர் அருந்தவோ, டீ, காபி அருந்தவோ கூடாது என்போம். மேலும் இரவில் அவர்களுக்கு இனிப்புப் பண்டங்களைக் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்துவோம். தூங்கச் செல்வதற்கு முன்பும், தூங்கி ஒரு மணி நேரம் கழித்தும் அவர்களை எழுப்பி சிறுநீர் கழிக்கப் பழக்கச் சொல்வோம். இதனை `நைட் லிஃப்டிங்' (Nigth Lifting) என்பார்கள். இதன்மூலம் அவர்களை இரவில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுவிப்போம்'' என்கிறார் டாக்டர் வெங்கடேஷ்.
சித்த மருத்துவம் சொல்வதென்ன?
சித்த மருத்துவத்திலும் இந்தப் பிரச்னைக்கு மிக எளிதாகத் தீர்வு காணலாம் என்கிறார் சித்த மருத்துவர் ஜி.ராஜாசங்கர்.
"ஐந்து வயது நிறைந்த 20 சதவிகிதக் குழந்தைகள் இரவு நேரங்களில் தங்களையும் அறியாமல் படுக்கையில் சிறுநீர் கழிப்பார்கள். ஏழு வயது வரையிலான குழந்தைகளில் 10 சதவிகிதம் பேரும், 12 முதல் 14 வயது வரையான குழந்தைகளில் மூன்று சதவிகிதம் பேரும் படுக்கையில் சிறுநீர் கழிப்பார்கள். நான்கு வயது வரையிலான குழந்தைகள் இரவு படுக்கையில் சிறுநீர் கழிப்பது இயற்கையே. இந்த விஷயத்தில் ஏழு வயது வரை அச்சப்பட ஒன்றுமில்லை. படுக்கையில் சிறுநீர் கழிப்பது குழந்தைகளுக்கு நரம்பு வளர்ச்சியின்போது ஏற்படக்கூடிய இயல்பான ஒரு விஷயம்.
சிறுநீர்ப்பை நிறைந்துவிட்டது என்ற உணர்வைக் கொடுத்ததும் உடனே சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தரும் மூளையின் சிக்னல் குழந்தைகளை ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுப்பும். ஆனால், அந்த நிகழ்வு நடக்காமல்போகும்போது அவர்கள் படுக்கையில் சிறுநீர் கழித்துவிடுவார்கள். இரவில் சிறுநீரின் அளவைக் கட்டுப்படுத்தும் `வாசோப்ரெசின்' (Vasopressin) என்ற ஹார்மோனின் செயல்பாடு சமச்சீராக இல்லாததும் இதற்கு முக்கியக் காரணமாகும். தூக்கத்தில் உண்டாகும் மூச்சுத்திணறலின்போதும் கூட, அதாவது சுவாசப் பைக்குத் தடையின்றி செல்லும் உயிர்காற்று குறைபாட்டாலும்கூட இது ஏற்படலாம். சிலருக்குக் குறட்டை (Sleep apnea) வரும்போது இப்படி ஏற்படலாம். குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் மற்றும் அடினாய்டு அழற்சியினாலும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவதாலும் படுக்கையில் சிறுநீர் கழிக்கலாம். குழந்தைகளுக்கு உண்டாகும் கவனச்சிதறல் நோயினாலும் (ஏடிஎச்டி - ADHD - Attention Deficit Hyperactive Disorder) இந்தப் பிரச்னை ஏற்படலாம்.
பரம்பரையாக வருமா?
கவனச்சிதறல் உள்ள குழந்தைகளுக்குச் சுட்டித்தனம் அதிகம் இருப்பதுடன் அவர்கள் பொறுமையிழந்து காணப்படுவார்கள். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அவர்களுக்கும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் தன்மை அதிகமாக இருக்கும். இதற்குப் பரபரப்பும் பதற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். தினமும் ஒழுங்காக மலம் கழிக்காத குழந்தைகளுக்கு மலக்குடல் சிறுநீர்ப்பையை அழுத்தும்போது அவர்கள் தன்னையும் அறியாமல் சிறுநீர் கழிக்கலாம்.
இவை தவிர ஒரே நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழிவது சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்குப் பரம்பரையும் மிக முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. பெற்றோரில் ஒருவருக்குச் சிறுவயதில் இந்தப் பிரச்னை இருந்திருந்தால் 40 சதவிகிதமும், இருவருக்கும் இருந்தால் 70 சதவிகிதமும் பரம்பரையாக இந்த பாதிப்பு ஏற்படலாம். வீட்டில் இரண்டாவது குழந்தை பிறப்பதாலும், பள்ளி மாறுவதாலும், பெற்றோரிடையே உண்டாகும் சிறு பிணக்குகளாலும்கூட குழந்தையின் மனம் பாதிப்புக்குள்ளாகி இந்நிலை உண்டாகலாம்.
பெற்றோர்களின் பொறுப்பு
மருந்துகளைவிடச் சரியான வாழ்வியல் முறைகளே இதற்கான தீர்வு. திரவ உணவுகளை மாலை ஆறு மணிக்கு மேல் கொடுக்கக்கூடாது. இரவு தூங்கச் செல்வதற்கு முன் தினமும் சிறுநீர் கழிக்கச் செய்ய வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் இதைச் செய்து பின்னர் படுக்கைக்குச் செல்வது நல்லது. இது ஒரு பிரச்னையே அல்ல சரி செய்து விடலாம் என்ற முற்போக்கு சிந்தனையைக் குழந்தைகளுக்கு உண்டாக்க வேண்டும். இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்காத அடுத்த நாள் காலை நோபல் பரிசு கிடைத்த உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதைவிடப் பெரிய மருந்துகள் எதுவும் இல்லை. பெற்றோர் மிகவும் பொறுமையாக இதைக் கையாள வேண்டும். மற்றவர்கள் முன் எக்காரணம் கொண்டும் இதைப்பற்றி விமர்சித்தோ கேலி செய்தோ பேசக்கூடாது.
`கஃபைன்' (caffeine) கலந்த உணவுகள் கொடுப்பதைக் குறைக்க வேண்டும். குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட்டுகளில் கஃபைன் உள்ளதால் அதைத் தவிர்ப்பது நல்லது. உடல் எடை அதிகரிக்கும்போது வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகள் சிறுநீர்ப்பையை அழுத்துவதாலும் இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்கலாம்.
ஃபோலிக் ஆசிட் (Folic acid) நிறைந்த உணவுகளான பச்சைக் காய்கறிகள், கீரைகள், வாழைப்பழம், பப்பாளி, ஆரஞ்சுப் பழங்கள், பாதாம், பிஸ்தா போன்ற உலர் பழங்கள் சாப்பிட்டால் படுக்கையில் சிறுநீர் கழித்தல் பிரச்னையிலிருந்து விடுபடலாம். பி-12 சத்து நிறைந்த புலால் உணவுகளை வாரம் ஒருமுறை கொடுக்கலாம். ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி-12 உணவுகள் மூளையின் நடுவே உள்ள நரம்பு தொடர்பைப் பலப்படுத்தி இரவில் சிறுநீர் பிரிவதைத் தடுக்கும். ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களும் மிகவும் நல்லது. முளைக்கட்டிய தானியங்களில் ஃபோலேட் சத்து அதிகமுள்ளது என்பதால் அவற்றைச் சாப்பிடலாம்.
குழந்தைகளுக்கு இரவில் பால் கொடுக்கலாமா?
நெல்லிக்காயில் உள்ள தாவரக்கூறுகள் சிறுநீர்ப்பையின் தசைகளைப் பலப்படுத்தும் என்பதால், அவற்றைத் தேனுடன் சேர்த்தோ தனியாகவோ கொடுக்கலாம். பெருஞ்சீரகத்தைப் பொடியாக்கி அரை டீஸ்பூன் வெந்நீரில் கலந்து குடித்தால் நோய் குணமாகும் என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
பாலும் பால் பொருள்களும் உடலில் கால்சியம் சத்தை அதிகரித்து இரவில் சிறுநீர் வெளியேறுவதைத் தூண்டுவதால் குழந்தைகளுக்கு இரவில் பால் கொடுப்பதைத் தவிர்க்கவும். சர்க்கரையும் மைதாவும் சேர்ந்த பொருள்கள் சிறுநீர்ப்பையின் அழற்சியை அதிகமாக்கும் என்பதால் அவற்றையும் தவிர்ப்பது நல்லது.
சித்த மருத்துவப் புரிதலின்படி வாதத்தைக் கட்டுப்படுத்துவதே இதற்கான முழுத் தீர்வு. மலம் அல்லது சிறுநீர் அதிகரித்தாலும் அளவில் குறைந்தாலும் வாதம் அதிகரித்திருக்கிறது என்பதன் அறிகுறியாகும். மனதின் பரபரப்பும் ஒரு முக்கியக் காரணமாகும். எனவே, சித்த மருத்துவரை அணுகி காலத்துக்கேற்றபடி நல்லெண்ணெய்க் குளியல், பேதி மருந்துகள், கிருமிக்கான மருந்துகள் மற்றும் ஊட்டம் நிறைந்த உணவுகள் பற்றிய அறிவுரைகளைப் பெற்று குழந்தைகளுக்கான இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கலாம்" என்கிறார் மருத்துவர் ராஜாசங்கர்.
Comments
Post a Comment