Doctor Vikatan: என் வயது 32. இரண்டு குழந்தைகளைப் பெற்றநிலையில், இப்போது மூன்றாவதாக குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். முதல் இரண்டு பிரசவங்களுமே சிசேரியன்தான். மூன்றாவதும் பெரும்பாலும் சிசேரியனாகவே இருக்கும் என்றுபலரும் சொல்கிறார்களே.... அது பாதுகாப்பானதா....? எனக்கு முதல் இரண்டு கர்ப்பங்களின் போதும் யூரினரி இன்ஃபெக்ஷன் வந்தது. மூன்றாவது முறையும் அப்படி வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
உங்களுக்கு இரண்டு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கும்பட்சத்தில், மூன்றாவது குழந்தைக்குத் திட்டமிடுவதைத் தவிர்ப்பதுதான் சிறந்தது. ஏனெனில் மூன்றாவது முறையாக நீங்கள் கருத்தரிக்க முயலும்போது உங்களுக்கு நஞ்சானது ( Adherent placenta ) சிசேரியன் செய்த தழும்போடு ஒட்டியிருப்பது அல்லது நஞ்சு கீழே இருக்கக்கூடிய பிளசென்ட்டா ப்ரீவியா ( Placenta previa ) என்ற பிரச்னை வருவது, கர்ப்பத்தின் 9வது மாதத்தில், ஏற்கெனவே போடப்பட்ட தையல் விட்டுப்போவது போன்ற பிரச்னைகள் மூன்றாவது முறை சிசேரியன் செய்யும்போது அதிகம் பாதிக்க வாய்ப்புகள் உண்டு. எனவே, இரண்டு சிசேரியன் பிரசவங்களுக்குப் பிறகு மூன்றாவது கர்ப்பத்தைத் தவிர்ப்பதே சிறந்தது.
ஒருவேளை இரண்டு குழந்தைகளில் ஒன்று ஆரோக்கியமாக இல்லாதது போன்ற வேறு காரணங்களுக்காக நீங்கள் மூன்றாவது முறை குழந்தைபெற்றுக்கொள்ள நினைத்தால், அதை அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனையில் வைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி செக்கப்புக்கு செல்ல வேண்டும். அனீமியா இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
முதல் இரண்டு கர்ப்பங்களிலும் யூரினரி இன்ஃபெக்ஷன் வந்ததைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அது மீண்டும் வராமலிக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் உடலில் நிறைய மாற்றங்கள் நிகழ்வதால் பெண்களுக்கு யூரினரி டிராக்ட் இன்ஃபெக்ஷன் வருவது மிகவும் சகஜம். சிறுநீரை அடக்கவே கூடாது. மாதந்தோறும் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் யூரின் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும். சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலும் யூரினரி இன்ஃபெக்ஷன் இருக்கலாம். அதனால் குறைப்பிரசவம் நிகழவும் வாய்ப்பு உண்டு.
வெஜைனாவை சுத்தப்படுத்தும்போது முன்பக்கத்திலிருந்து பின்பக்கமாகத்தான் சுத்தப்படுத்த வேண்டும். அதன் மூலம் கிருமித்தொற்று பாதிக்காமல் தடுக்க முடியும். வெஜைனாவை சுத்தப்படுத்த வாசனையான மற்றும் ஸ்ட்ராங்கான பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம். தவிர, ஒரு அல்ட்ரா சவுண்ட் சோதனையின் மூலம் உங்களுக்கு அடிக்கடி இந்தத் தொற்று வருவதற்கான காரணத்தையும் தெரிந்துகொண்டு சிகிச்சை எடுப்பது பாதுகாப்பானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment