Doctor Vikatan: திருமணமாகாத பெண்களுக்கும், குழந்தை இல்லாத பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய்க்கான அபாயம் அதிகமா... அவர்கள் அந்த ரிஸ்க்கிலிருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த புற்றுநோயியல் மருத்துவர் ரம்யா நடராஜன்.
திருமணமான பெண்களோடு ஒப்பிடும்போது, திருமணமாகாத பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிக்கும் ரிஸ்க் 4 முதல் 5 சதவிகிதம் அதிகம்தான். இதற்கு சில காரணங்கள் உண்டு.
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போதும், தாய்ப்பால் ஊட்டும்போதும் சிலவிதமான ஹார்மோன் மாறுதல்கள் ஏற்படுகின்றன. அதாவது கர்ப்பத்தின் போது ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்ற ஹார்மோன் சுரப்பு குறைந்து, புரொஜெஸ்ட்ரான் (progesterone) என்ற ஹார்மோன் சுரப்பு அதிகமாகிறது.
அதே போல தாய்ப்பால் ஊட்டும்போது புரொலாக்டின் (prolactin) என்ற ஹார்மோன் சுரப்பு அதிகமாகிறது. இந்த ஹார்மோன் மாற்றங்கள் எல்லாம் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் ரிஸ்க்கிலிருந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றும்.
கர்ப்பிணிகளோடு ஒப்பிடும்போது திருமணமாகாத பெண்களுக்கும் குழந்தை பெறாத பெண்களுக்கும் அவர்களது ஆயுள்காலத்தில் மாதவிலக்கு சுழற்சியின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதனால் அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அளவும் அதிகமாக இருக்கும். ஈஸ்ட்ரோஜென் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்போது அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ரிஸ்க்கும் அதிகமாக இருக்கும்.
திருமணமாகி, தாய்மை அடையும் பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கவே கூடாது. திருமணத்தையும் குழந்தைப்பேற்றையும் தவிர்க்கும் பெண்கள், மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனையை குறிப்பிட்ட இடைவெளிகளில் தவறாமல் செய்துகொள்ள வேண்டியது அவசியம். சுய பரிசோதனையும் செய்து பார்க்க வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment