Doctor Vikatan: வருடந்தோறும் பட்டாசு வெடிக்கும்போது ஏதேனும் ஒரு காயம் படுவதைத் தவிர்க்க முடியாதுதான். மற்ற காயங்கள் ஒன்றிரண்டு நாள்களில் குணமாகிவிடும். கண்களில் ஏற்படும் காயங்கள்தான் பயமுறுத்துகின்றன. பட்டாசுப் புகையோ, துகளோ கண்களில் படுவது என்பது அவ்வளவு பெரிய பிரச்னையை ஏற்படுத்துமா... இதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.
மற்ற எந்த நாள்களைவிடவும் தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் அடுத்தடுத்த நாள்களில் கண் மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை சற்று அதிகமிருக்கும். பட்டாசு வெடித்ததால் கண்களில் காயம்பட்டதாகச் சொல்லிக்கொண்டு வருவார்கள். சாதாரணமாக கண்கள் சிவப்பதில் தொடங்கி, விழித்திரை பாதிப்பு வரை இதன் விளைவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
பட்டாசு, வெடிகளை வெடிப்பதற்கு முன் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்களை, விபத்துகளைத் தவிர்க்கும் வழிகளை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். காலங்காலமாகச் சொல்லப்படுகிற அறிவுரைகள்தான் என்றாலும், ஒவ்வொரு வருடமும் அந்த அறிவுரைகள் தேவையாக இருக்கின்றன. முதல் விஷயம், எந்தப் பட்டாசை வெடிப்பதாக, கொளுத்துவதாக இருந்தாலும் மிக அருகில் நின்று கொளுத்தாதீர்கள். நீளமான வத்தி பயன்படுத்தி பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்றி பட்டாசு வெடிப்பதை உறுதிபடுத்துங்கள்.
கண்ணாடி அணிபவரோ, அணியாதவரோ, பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்புக்காக கண்ணாடி அணிவதை வழக்கமாக வைத்துக்கொள்ளலாம். தீப்பொறி, பட்டாசுத் துகள் போன்றவை உங்கள் கண்களில் விழுவதிலிருந்து இது உங்களைப் பாதுகாக்கும். கான்டாக்ட் லென்ஸ் அணியும் வழக்கம் உள்ளவர்கள், பட்டாசு வெடிக்கும்போது அதைத் தவிர்த்துவிடுங்கள். லென்ஸை கழற்றிவைத்துவிடுங்கள். லென்ஸ் அணிந்திருக்கும் நிலையில் கண்களில் பட்டாசுப் புகையோ, துகளோ, தீப்பொறியோ பட்டால் கண்கள் சிவப்பது, எரிச்சல் என பிரச்னை இன்னும் தீவிரமாகலாம்.
குழந்தைகளைத் தனியே பட்டாசு வெடிக்க அனுமதிக்காமல் பெரியவர்கள் யாராவது அருகில் இருப்பது பாதுகாப்பானது. இவற்றையெல்லாம் பின்பற்றியும் எதிர்பாராத விதமாக கண்களில் பட்டாசு வெடித்துக் காயம் பட்டால், கண்களைக் கசக்குவது, அழுத்துவது போன்றவற்றைச் செய்யாதீர்கள். உடனடியாக கண் மருத்துவரை அணுகுங்கள். எப்படிப்பட்ட பாதிப்பு என்பதை அவர் சரியாகப் பார்த்து சிகிச்சை வழங்குவார்.
கண்களில் பட்டாசுக் காயம் ஏற்படுவதை அலட்சியமாக நினைக்காதீர்கள். பட்டாசுத்துகள் கண்களுக்குள் போவதால், கருவிழிகள் புண்ணாவது முதல் விழித்திரை பாதிப்புவரை பல பிரச்னைகள் வரலாம் என்பதால் கவனமாக இருங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment