Doctor Vikatan: என் வயது 38. நான் உடல் எடையைக் குறைப்பதற்காக கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஜிம்மில் சேர்ந்தேன். முதல் சில மாதங்களில் எடை குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அது அப்படியே நின்றுவிட்டது. எடை அதிகரிக்கவும் இல்லை, குறையவும் இல்லை. அதே உடற்பயிற்சிகளையும் உணவுப்பழக்கத்தையும்தான் பின்பற்றி வருகிறேன். ஆனாலும், திடீரென எடைக்குறைப்பு நின்று போனது ஏன்... மீண்டும் எடை குறையச் செய்ய என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.
எடைக்குறைப்பு முயற்சியில் இறங்கியவர்களுக்கு முதல் சில மாதங்களில் உடல் எடை நன்கு குறையும். திடீரென ஒரு கட்டத்தில் அது கூடவோ, குறையவோ செய்யாமல் அப்படியே நின்றுவிடும். 'அதே வொர்க் அவுட்டையும் டயட்டையும் ஃபாலோ பண்றேன்... ஆனாலும், வெயிட் குறையாம அப்படியே நிக்குதே...' என்று புலம்புவார்கள். இதை 'வெயிட்லாஸ் ப்ளாட்டோ' ( Weight loss plateau ) என்று சொல்கிறோம்.
வெயிட்லாஸ் ப்ளாட்டோ நிலையை எப்படித் தகர்ப்பது என்பது வெயிட்லாஸ் முயற்சியில் உள்ள பலரின் கவலையாகவும் சவாலாகவும் இருக்கும். முதல் வேலையாக, ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டை சேர்த்துக்கொள்ளுங்கள். வேகவைத்த கார்ன், வேகவைத்த உருளைக்கிழங்கு, வேக வைத்த சன்னா அல்லது ராஜ்மா, ஒரு கப் வேகவைத்த கேரட் அல்லது பீட்ரூட் அல்லது பட்டாணி, வீட்டிலேயே தயாரித்த பிரியாணி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை முதல் 3-4 நாள்களுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளையும் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளையும் சேர்த்துச் சாப்பிடும்போது உங்கள் உடல் எடையில் மாற்றத்தைப் பார்ப்பீர்கள். 3 - 4 நாள்களுக்கு எண்ணெயே இல்லாத உணவுகளைச் சாப்பிடலாம். ஆவியில் வேகவைத்த காய்கறிகள், ஃப்ரெஷ் பழங்கள், மோர், இளநீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இப்படிப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது எண்ணெய், உப்பு, மசாலா என எல்லாமே தவிர்க்கப்படும். அதன் விளைவாக உங்கள் வெயிட்லாஸ் பிளாட்டோ நிலை தகரும்.
காலை, மதியம் மற்றும் இரவு உணவுக்கு நிறைய பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். இடைப்பட்ட நேரத்தில் பசியெடுக்கும்போது மோர் குடிக்கலாம். தயிரில் புதினா- கொத்தமல்லி சட்னி கலந்து சாப்பிடலாம். தயிர் பச்சடி சாப்பிடலாம். இவற்றையெல்லாம் பின்பற்றிப் பாருங்கள். குறையாமல் அப்படியே இருந்த உடல் எடை, நிச்சயம் குறையத் தொடங்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment