Doctor Vikatan: என் மகள் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறாள். அவளுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 7 ஆகக் குறைந்திருக்கிறது. இதனால் எப்போதும் களைப்பாக இருக்கிறாள். எதிலும் கவனம் செலுத்த முடியாமல் மந்தமாக இருக்கிறாள். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உணவுகள் போதுமா அல்லது அவளுக்கு சப்ளிமென்ட் உள்ளிட்ட சிகிச்சைகள் அவசியமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
உங்கள் மகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னை இருக்கிறது என்று கேள்விப்படும்போது அவருக்கு ஹார்மோனல் இம்பேலன்ஸ் இருக்கக்கூடும் என்று தெரிகிறது. ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்களின் அளவுகள் சரியாக இல்லாமலிருக்கலாம். அதற்கு காரணம் சினைப்பைகளின் முறையற்ற இயக்கம். பாலிசிஸ்டிக் ஓவரீஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருக்கலாம். உங்கள் மகளின் லைஃப்ஸ்டைல் சரியில்லாமல், அதாவது ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் சாப்பிடுபவராக இருக்கலாம். அடிக்கடி வெளியில் சாப்பிடுபவராக இருக்கலாம். பருமன் பிரச்னை அல்லது தைராய்டு பிரச்னை இருக்கலாம்.
அவருக்கு ப்ளீடிங் டிஸ்ஆர்டர் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். பல் தேய்க்கும்போது ஈறுகளில் ரத்தக் கசிவு, எங்கேயாவது அடிபட்டால் அந்தக் காயம் ஆறுவதற்கு நேரமெடுப்பது போன்றவை இருந்தால் ரத்தப் பரிசோதனைகளின் மூலம் அதை உறுதி செய்யலாம்.
உடல் பருமன் அதிகமிருந்தால் எடையைக் குறைக்க வேண்டும். உங்கள் மகளுக்கு ஹீமோகுளோபின் அளவு 7 என்றிருப்பதால் ப்ளீடிங்கும் அதிகமிருக்கும். இது ஒரு சுழற்சி மாதிரி. இதை ஏதோ ஓரிடத்தில் நாம் நிறுத்த வேண்டும். அதற்கு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு பெண் வயதுக்கு வரும்போது அவளின் மாதவிடாய் சுழற்சி முறையற்று இருக்கும். அதாவது தொடர்ந்து 20 நாள்கள்வரை ரத்தப் போக்கு இருக்கலாம் அல்லது இரண்டு, இரண்டரை மாதங்களுக்கொரு முறை பீரியட்ஸ் வரலாம். சிலருக்கு அதிக ரத்தப்போக்கு இருக்கலாம். சினைப்பையிலிருந்து சுரக்கும் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்களும், மூளையிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி ஆகிய எல்லாம் ஒரே அலைவரிசைக்கு வரும். இவை எல்லாம் ஒழுங்கானால்தான் அந்தப் பெண்ணுக்கு மாதந்தோறும் பீரியட்ஸ் முறையாக வரும். சரியான நாளில் வரும். சினைப்பையிலிருந்து கருமுட்டையும் வெளியே வரும். ஒரு பெண் வயதுக்கு வந்து, அடுத்த ஒன்றிரண்டு வருடங்களில் இவையெல்லாம் ஒழுங்குக்கு வரும்.
இந்த நாள்களில் ஒரு பெண்ணுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து அனீமியா எனப்படும் ரத்தச்சோகை வராமலிருக்க நல்ல சத்துள்ள ஆகாரங்களைக் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரும்புச்சத்து சப்ளிமென்ட்டுகளையும் கொடுக்கலாம்.
உங்கள் மகளை உடற்பயிற்சிகள் செய்யச் சொல்லுங்கள். மூன்று வேளைகளும் வீட்டில் சமைக்கிற சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என சத்தாகச் சாப்பிட வையுங்கள். பருமனாக இருந்தால்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றில்லை. எல்லோருமே ஆரோக்கியத்துக்காக அதைப் பின்பற்றலாம்.
பூப்பெய்திய புதிதில் அனீமியா பாதிப்புக்கு உள்ளாகிற பெண் குழந்தைகளுக்கு படிப்பில் கவனச் சிதறல், மந்தநிலை, களைப்பு போன்றவை இருக்கும் பட்சத்தில் மருத்துவரின் ஆலோசனையோடு சப்ளிமென்ட் கொடுக்கலாம். மருத்துவர் உங்கள் மகளின் எடைக்கேற்ப அதைப் பரிந்துரைப்பார்.
ஹீமோகுளோபின் அளவானது 7-ஆக இருக்கும் வரை சப்ளிமென்ட்டுகளால் சமாளிக்கலாம். அதற்கும் கீழே குறையும் போது ரத்தம் ஏற்ற வேண்டிய தேவை ஏற்படும். தீவிர அனீமியா பாதிப்பானது இதயச் செயலிழப்புக்குக்கூட காரணமாகும் என்பதால் இந்தப் பிரச்னையை அலட்சியமாக கையாளாமல் சரியான நேரத்தில் சரியான சிகிச்சை மூலம் குணப்படுத்துவதுதான் பாதுகாப்பானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment