உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வும், டயட் பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்துவிட்டது. அதே நேரம், பலரும் எடையைக் குறைக்க லோ கார்ப் டயட், நோ கார்ப் டயட் என்கிற இந்த இரண்டு டயட்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். உண்மையிலேயே இவ்விரு டயட்டும் உடல் பருமனை பாதுகாப்பான முறையில் குறைக்குமா, இவற்றை ஃபாலோ செய்யும்போது எவற்றிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் அவர்களிடம் கேட்டோம்.
''லோ கார்ப் டயட் (Low Carb Diet)
எடை குறைக்க விரும்புவர்களுக்கு நல்ல தேர்வு இந்த டயட் தான். மாவுச்சத்துக்கு நம் உணவில் முக்கியமான இடம் இருக்கிறது. நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு மட்டுமல்ல, தினசரி செயல்பாட்டுக்கே மாவுச்சத்து அவசியம் தேவை. நாம் மாவுச்சத்தை சாப்பிடும்போது, நம் உடல் அதை உடைத்து கல்லீரலில் சேமித்து வைக்கிறது. பிறகு, அது நம்முடைய தினசரி செயல்பாடுகளுக்கு செலவழிக்கப்படுகிறது. வேலைகுறைவான வாழ்க்கைமுறை, சொகுசான வாழ்க்கைமுறை, உடலுழைப்பு குறைவான வாழ்க்கைமுறையால், இப்படி சேமித்து வைக்கப்பட்ட மாவுச்சத்து பயன்படுத்தப்படாமல் போகும். அதை நம் உடல் கொழுப்பாக மாற்றி உடலின் பல பாகங்களில், குறிப்பாக வயிற்றுப்பகுதியில் சேகரித்து வைக்கும். விளைவு... உடல் பருமன். இவர்களுக்கு மாவுச்சத்து குறைவான 'லோ கார்ப் டயட்' மிகவும் உதவும்.
மாவுச்சத்தைக் குறைக்கும்போது, வேறு வழியில்லாமல் மைதாவால் தயாரிக்கப்பட்ட உடலுக்கு கெடுதல் செய்யும் மாவுப்பொருள்களை சுத்தமாக தவிர்க்க வேண்டி வரும். கூடவே, முறுக்கு, பஜ்ஜி என எண்ணெயில் பொரித்த உணவுகளையும்... இதனால் உடல் எடை குறைவதோடு, ஆரோக்கியமும் மேம்படும்.
லோ கார்ப் டயட் - கவனத்தில் கொள்ள வேண்டியவை
இந்த டயட்டை பொறுத்தவரை மாவுச்சத்தைக் குறைப்பதால், புரதச்சத்து மிகுந்த உணவுகளைக் கூட்டி, கூடவே தேவையான கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும் டயட்டில் சேர்த்தால், உடல் பருமன் குறையும். அதே நேரம் புரதச்சத்துள்ள உணவுகளையும், கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும் சற்று கூடுதலாகச் சாப்பிடும்போது, அவற்றை செரிமானம் செய்வதற்கு நார்ச்சத்து மிகுந்த காய்கறி, பழங்கள், கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து குறையும்பட்சத்தில், உடலால் கழிவை வெளியேற்றுவது கடினம். விளைவு, வயிறு உப்புசம், மந்தம், வாயுத்தொல்லை என வயிறு தொடர்பான பிரச்னைகள் வரும், கவனம்.
மாவுச்சத்து இல்லாத 'நோ கார்ப் டயட்' ( No Carb Diet)
நம் ஊரில் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை, குறிப்பாக, அரிசி உணவுகளை நிறைய சேர்த்துக்கொள்கிறோம். அதனால், அவற்றை திடீரென முழுமையாகத் தவிர்த்தாலோ அல்லது பெருமளவில் தவிர்த்தாலோ உடல் எடை குறைகிறது. இந்த டயட்டை எடுப்பவர்களுக்கு நீரிழிவு இருந்தால், அது கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இதேபோல், கொலஸ்ட்ரால் பிரச்னை இருந்தாலும் கட்டுப்படுகிறது. நூறு கிலோவுக்கு மேல் உடல் எடை கொண்டவர்களுக்கு வரப்பிரசாதம் இந்த டயட்.
நோ கார்ப் டயட் - கவனத்தில் கொள்ள வேண்டியவை
எழுந்து நடப்பதற்கே சிரமமாக இருக்கும் அளவுக்கு உடல் பருமன் கொண்டவர்கள், திடீரென சில கிலோ எடை குறையும்போது புத்துணர்ச்சியாக உணர்வார்கள். 'நம்மாலும் வெயிட் லாஸ் செய்ய முடியும்' என்று நம்பிக்கையாக உணர்வார்கள். இதெல்லாம் நன்மைகள்... ஆனால், மாவுச்சத்து உடம்பின் தினசரி செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் என்பதால், இந்த டயட்டை ஃபாலோ செய்வதற்கு முன்னால் டயட்டீஷியனை சந்தித்து அவருடைய ஆலோசனையைக் கேட்பது நல்லது. அதுதான் உங்கள் ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பும்கூட'' என்கிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்.
Comments
Post a Comment