பனை மரங்கள் தமிழ்நாட்டிலும், வங்காளத்திலும்தான் இருக்கின்றன. வங்காளத்தில் கள் தயாரிக்க மட்டுமே பனை பயன்படுகிறது. தமிழ்நாட்டில்தான் பனையை வைத்து கருப்பட்டி காய்ச்சுகிறார்கள். 50 வருடங்களுக்கு முன்னால் மக்கள் தொகையும் பனை மரங்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்திருக்கிறது. இப்போது 2 கோடி மரங்கள் மட்டுமே இருக்கின்றன. பனைத் தொழிலை நம்பி வாழ்ந்துவந்த மக்கள், நகரங்களுக்குக் குடிபெயர்ந்ததற்கு காரணம், பனை மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டதுதான். திருநெல்வேலி மாவட்டத்தின் உடன்குடி என்ற ஊர்தான், கருப்பட்டி தயாரிப்புக்குப் புகழ்பெற்றது என்கிற சித்த மருத்துவர் பி. மைக்கேல் செயராசு, அதன் மருத்துவ பலன்களை விவரிக்கிறார்.
* கருப்பட்டியில் குளுக்கோஸ், சுக்ரோஸ் மட்டுமல்லாமல், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட் ஆகிய சத்துக்களும் இருக்கின்றன.
* நம் உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சம நிலையில் வைக்கும் தன்மை கருப்பட்டிக்கு உண்டு.
* பாலுடன் பனங்கற்கண்டு, மிளகு, மஞ்சள் பொடி சேர்த்துக் குடித்தால் தொண்டைப்புண் குணமாகும். மூலநோய் தவிர்க்கப்படும்.
* மற்ற வெல்லங்களைப்போலக் கருப்பட்டியில் உப்பு சேர்க்க மாட்டார்கள். அதனால், இது வயிற்றுப்புண்களை ஆற்றும்.
* சித்த மருத்துவ லேகியங்களில் கப நோய்கள், சூட்டு நோய்களுக்கான மூலப்பொருள் கருப்பட்டிதான்.
* பதநீரைக் காய்ச்சி கருப்பட்டிக்கான சிரட்டையில் ஊற்றும்போது, அதனுடன் நூல்கண்டு போட்டு விடுவார்கள். அதைப் பிரித்து உதிர்த்தால் கற்கண்டு கிடைக்கும்.
* வெள்ளைச்சீனியில் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள், 'பற்களையும் எலும்பையும் அரிக்கும்' என்று பாரம்பர்ய மருத்துவ நூல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதை உண்மை என்கின்றன இன்றைய ஆய்வுகள்.
* பேக்கரி உணவுகளுக்காக ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் வெள்ளைச்சீனி. இயற்கை மருத்துவர்கள் வெள்ளைச்சீனியை 'வைட்டமின் திருடன்' என்பார்கள். அது உட்கிரக்கப்படுவதற்காக நம் உடலில் இருக்கிற சில வைட்டமின்களை திருடிக்கொள்ளுமாம். இந்தப் பிரச்னை கருப்பட்டியில் கிடையாது.
* கருப்பட்டியை உடைத்து நல்ல வெயிலில் காட்டும்போது மினிமினுப்பு இருந்தால், அது வெள்ளைச்சீனி சேர்த்த கலப்பட கருப்பட்டி. மாவுபோல இருந்தால், ஒரிஜினல் கருப்பட்டி.
Comments
Post a Comment