ஆரோக்கியம் தொடர்பான எத்தனையோ நம்பிக்கைகளை உண்மையா, பொய்யா என்றே தெரியாமல் பின்பற்றுகிறோம். அவற்றில் ஒன்றுதான் '5 செகண்ட் ரூல்' (5-Second Rule). அதாவது ஏதேனும் உணவுப்பொருளை தரையில் போட்டுவிட்டோம் என்றால், 5 நொடிகளுக்குள் அதை எடுத்துச் சாப்பிட்டால், தொற்று பரவாதாம்...
இது எந்த அளவுக்கு உண்மை?
சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் விளக்குகிறார்.
உணவைப் பொறுத்தது...
''இதில் குறிப்பிடப்படுகிற 5 செகண்ட் (5-Second) என்பது முற்றிலும் ஏற்புடையதல்ல... அதே சமயம், முற்றிலும் தவறானதும் அல்ல. '5 செகண்ட் ரூல்' என்பதில் இரண்டு விஷயங்கள் மிக முக்கியம். கீழே விழுகிற பொருளில் முதலில் கிருமி உட்கார வேண்டும். அப்படியே உட்கார்ந்தாலும், அது நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றலைத் தாண்டி, உள்ளே போக வேண்டும். இதில் உடல் எதிர்ப்பாற்றல் என்ற விஷயத்தைத் தவிர்த்துவிட்டு கிருமித் தொற்று குறித்து யோசிப்போம்.
அது நாம் கீழே போடுகிற பொருளையும், அது கீழே விழுகிற இடத்தையும் பொறுத்தது. உதாரணத்துக்கு, பிஸ்கட், சப்பாத்தி மாதிரியான உணவுகள் ஒட்டும் தன்மை அற்றவை. அவற்றைக் கீழே போட்டாலும், உடனே கிருமி அதில் ஒட்டிக்கொள்ளப் போவதில்லை. எனவே, அந்த உணவை எடுத்துச் சாப்பிடுவதால் பிரச்னை வராமல் இருக்கலாம். அதுவே, பொங்கல், கேசரி, பழத்துண்டு போன்றவற்றைக் கீழே போடுகிறோம் என்றால், அவற்றின் ஒட்டும் தன்மை காரணமாக, தரையிலுள்ள அழுக்கு, கிருமி போன்றவை ஒட்டிக் கொள்ளலாம். இந்த உணவுகளைச் சாப்பிடும்போது, அதில் நிறைய கிருமிகள் ஒட்டியிருக்கும் நிலையில் அது உடனே இன்ஃபெக்ஷனை ஏற்படுத்தலாம்.
எனவே, ஒட்டும் தன்மையுள்ள உணவுப்பொருள்களைக் கீழே போட்டால் அவற்றை எடுத்துச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே சரியானது. அதற்காக ஒட்டும் தன்மையற்ற பொருளை கீழே போட்டு, எடுத்துச் சாப்பிடுவது சரி என அர்த்தமல்ல... முன்னதைவிட, இதில் ரிஸ்க் குறைவு என்பதுதான் விஷயமே.
எல்லோருக்கும் ஏற்றதல்ல...
'5 செகண்ட் ரூல்' விஷயத்தில் வயதானவர்கள், இணை நோய்கள் உள்ளவர்கள், புற்றுநோயாளிகள், குழந்தைகள் போன்றோர் ரிஸ்க் எடுக்க வேண்டாம். குழந்தைகள் பொதுவாகவே, எந்தப் பொருள் கீழே இருந்தாலும் அதை எடுத்து வாயில். போட்டுக் கொள்வார்கள். அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி முழுமையாக உருவாகி இருக்காது என்பதால், கீழே விழும் எதையும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ள அனுமதிக்கக் கூடாது. அதுவே, ப்ளே ஸ்கூல், பள்ளிக்கூடங்களில் பொம்மைகளை வாயில் வைத்து விளையாட விளையாடத்தான் அவர்களது எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனால், கீழே விழும் உணவு விஷயத்தில் அதைப் பின்பற்ற வேண்டாம்.
இன்ஃபெக்ஷன் ஆனதை உணர்த்துமா உடல்?
கீழிருந்து ஒரு பொருளை எடுத்துச் சாப்பிட்ட உடனேயே அது தொற்றை ஏற்படுத்தியிருக்கிறதா, இல்லையா என்பது தெரியாது. 'இன்குபேஷன் பீரியட்' (incubation period) என ஒன்று உண்டு. அதாவது தொற்றுக்குள்ளானதிலிருந்து அதற்கான அறிகுறிகளை உணர்கிற வரையிலான காலம் இது.
கீழே விழுந்த உணவில், ஒருவேளை கிருமி இருந்தாலும், உமிழ்நீரில் உள்ள ரசாயனங்கள், அந்தக் கிருமியைக் கொன்றுவிடலாம். அதையும் தாண்டி, உணவுப்பைக்குள் போனால், வயிற்றுக்குள் இருக்கும் ஸ்ட்ராங்கான கெமிக்கல், அந்தக் கிருமியைச் செயலிழக்கச் செய்துவிடும். இந்த இரண்டையும் தாண்டி, சிறுகுடல், பெருங்குடலில் போய், ரத்தத்தில் சேரும்போதுதான் அது இன்ஃபெக்ஷனாகவே மாறும்.
சில கிருமிகள், ரத்தத்தினுள் போகாமல், சிறுகுடல், பெருங்குடலிலேயே பெருகி, பேதியாக வெளிப்படும். இதை 'ஃபுட் பாய்சன்' (food poison) என்று பொதுவாகச் சொல்வோம். தரையில் விழுந்த உணவால் வருவதைவிடவும், ஓர் உணவுப்பொருளை நீண்ட நேரம் வெளியே வைத்திருந்து சாப்பிடுவதால்தான் இந்தப் பிரச்னை அதிகம் வரும். வெளியிடங்களில் சாப்பிடும்போது இது அதிகம் ஏற்படும். ஃபுட் பாய்சன் என்பது வாந்தியாகவோ, பேதியாகவோ வெளிப்படலாம். வாந்தியும் பேதியும் ஓரிரு நாள்களில் தானாகச் சரியாகிவிடும். இந்த இரண்டுக்குமே நிறைய நீராகாரம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த இரண்டையும் தாண்டி, சிலருக்கு காய்ச்சலாகவும் வெளிப்படலாம்.
டேக் ஹோம் மெசேஜ்....
கண்ணுக்குத் தெரியும்படி அழுக்கு உள்ள எந்த உணவையும் சாப்பிடக்கூடாது. தரையில் விழுந்த உணவில் மண் ஒட்டினால் சாப்பிட வேண்டாம். அது கிருமித் தொற்றை ஏற்படுத்தாவிட்டாலும், ஆரோக்கியமற்றதுதான்.
தோலை நீக்கிவிட்டு சாப்பிடக்கூடிய பழமாக இருந்தால் நன்கு கழுவி, தோல் நீக்கிவிட்டு சாப்பிடலாம்.
சமையலறை மேடைகளை ஆன்டிசெப்டிக் திரவம் பயன்படுத்தி சுத்தப்படுத்துவதை (surface cleaning) மருத்துவர்கள் அறிவுறுத்துவதில்லை. சோப் அல்லது டிடெர்ஜென்ட்டும் தண்ணீருமே போதுமானவை. இவற்றால் சுத்தப்படுத்தியதும் ஈரத்தை நன்கு துடைத்துவிட்டு, அந்த மேடையை காய்கறிகள், பழங்களை நறுக்கப் பயன்படுத்தலாம்'' என்கிறார் டாக்டர் விஜயலட்சுமி.
இந்தக் கட்டுரை குறித்த உங்கள் சந்தேகங்கள், ஆலோசனைகள், தனிப்பட்ட கேள்விகளை dvdigital@vikatan.com என்ற மெயில் ஐடிக்கு அனுப்பவும்.
Comments
Post a Comment