Doctor Vikatan: என் வயது 45. சமீபத்தில் ரத்தப் பரிசோதனை செய்தபோது அதில் எனக்கு 'ப்ரீ டயாபட்டீஸ்' (Prediabetes ) என்று வந்திருக்கிறது. இன்னும் மருத்துவரைப் பார்க்கவில்லை. ப்ரீ டயாபட்டீஸ் என்பது நிச்சயம் டயாபட்டீஸாக மாறிவிடுமா... அதைத் தடுக்க ஏதேனும் வழிகள் சொல்லவும்....
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.
நீரிழிவுக்கு முந்தைய நிலை
இந்தியாவில் 13.6 கோடி மக்கள் ப்ரீ டயாபட்டீஸ் (Prediabetes ) எனப்படும் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது அவ்வளவு எளிதாகக் கடந்துசெல்ல வேண்டிய விஷயமல்ல.
ப்ரீ டயாபட்டீஸ் எனப்படும் நீரிழிவுக்கு முந்தைய நிலை இருப்பதை இப்போது ரத்தப் பரிசோதனையில் எளிதாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. அப்படி ப்ரீ டயாபட்டீஸ் என்பது உறுதியானால், அந்த நாளிலிருந்தே அதை ரிவர்ஸ் செய்வதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். ப்ரீ டயாபட்டீஸ் ஸ்டேஜில் இருக்கும் எல்லோருக்கும் உணவியல் தொடர்பான முக்கியமான ஆலோசனை ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன்.
கார்போஹைட்ரேட் தவிருங்கள்...
உங்கள் நாளைத் தொடங்கும்போது, முதல் வேலையாக நிறைய கார்போஹைட்ரேட் எடுத்துக்கொள்வதைத் தவிருங்கள். நிறைய பேருக்கு காலையில் ஜூஸ் குடிக்கும் வழக்கம் இருக்கிறது. காலை உணவுக்கு இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், பூரி போன்றவற்றையே பெரும்பாலும் எடுத்துக்கொள்வதையும் பார்க்கிறோம். ப்ரீ டயாபட்டீஸ் ஸ்டேஜில் உள்ளோருக்கு இதுபோன்ற உணவுகள், ரத்தச் சர்க்கரை அளவை கன்னாபின்னாவென அதிகரிக்கும். எனவே, இந்தப் பழக்கம் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.
நிறைய நார்ச்சத்தும், புரதச்சத்தும் சேருங்கள்...
காலையில் எழுந்ததும் சிறிது நட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். ஒரு டீஸ்பூன் வெர்ஜின் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். ஒரு டீஸ்பூன் சீட்ஸ் கலவை எடுத்துக்கொள்ளலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். இதன் பிறகு காலை உணவு சாப்பிடலாம். அப்படி நீங்கள் எடுத்துக்கொள்ளும் காலை உணவு புரதச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டியது அவசியம். இட்லி, தோசை, பொங்கல் சாப்பிடுவதாக இருந்தாலும் அவற்றுடன் நிறைய காய்கறிகள் சேர்த்த சாம்பார், முட்டை போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளவும்.
கார்போஹைட்ரேட் உடன், நிறைய நார்ச்சத்தும், நிறைய புரதச்சத்தும் சேரும்போது ரத்தச் சர்க்கரை அளவு பேலன்ஸ் செய்யப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது... தவிர, இனிப்பாக ஏதேனும் சாப்பிட வேண்டும் என்ற தேடல் குறையும். இத்தகைய உணவுப்பழக்கத்துடன், உடற்பயிற்சிகளையும் வழக்கப்படுத்திக் கொண்டால், ப்ரீ டயாபட்டீஸ் நிலையை நிச்சயம் ரிவர்ஸ் செய்யலாம். முயற்சி செய்யுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment