Doctor Vikatan: என் வயது 50. வாரத்தில் பல நாள்கள் அதிக களைப்பாகவே உணர்கிறேன். அடிக்கடி கை, கால்களில் வலி ஏற்படுகிறது. என்னுடைய தோழிக்கும் இதே பிரச்னை இருந்ததாகவும், அதற்கு அவள் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டதாகவும் சொன்னாள். நானும் அவற்றை எடுத்துக்கொள்ளலாமா.... யாருக்கெல்லாம் இந்த சப்ளிமென்ட்டுகள் தேவை?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார்
ஆரோக்கிய விஷயத்தில் அடுத்தவர் பின்பற்றும் சிகிச்சைகளை அப்படியே மற்றவர்களும் பின்பற்ற நினைப்பது மிகப் பெரிய தவறு. உங்கள் தோழியின் உடல்நலம், அவருக்கு இருக்கும் பிரச்னைகள், கால்சியம், வைட்டமின் குறைபாடுகள் போன்றவற்றைப் பொறுத்து அவர் சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொண்டிருக்கலாம். அவரும் மருத்துவரின் பரிந்துரையின்றி எடுக்கிறார் என்றால் அது நிச்சயம் தவறுதான். அவரைப் பார்த்து நீங்களும் அதைப் பின்பற்ற நினைக்காதீர்கள்.
எல்லோருக்கும் சப்ளிமென்ட்டுகள் தேவைப்படாது. சாதாரணமாக உணவின் மூலமே நமக்குத் தேவையான கால்சியம் சத்தைப் பெறலாம். கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள், கீரைகள், பால் மற்றும் பால் உணவுகள் போன்றவற்றில் கால்சியம் சத்து அதிகமுள்ளது. வெறும் உணவுகள் மட்டுமே உதவாது. உடற்பயிற்சிகள் செய்தால்தான் உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கால்சியம், எலும்புகளுக்குள் போய்ச் சேரும்.
பாலே குடிக்காத குழந்தைகள், பனீர், சீஸ் என எதுவுமே சாப்பிடாதவர்கள், கால்சியம் குறைபாட்டால் அவர்களுக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்ற நிலையில், குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் கால்சியம் சப்ளிமென்ட்டுகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
வயதானவர்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் போன்றோருக்கு கால்சியம் சப்ளிமென்ட் பரிந்துரைக்கப்படும். எலும்பு முறிவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கும், தேவையின் அடிப்படையில் மருத்துவர்கள் கால்சியம் சப்ளிமென்ட் பரிந்துரைப்பார்கள். அதுவும் குறுகிய காலத்துக்கு மட்டுமே. மற்றபடி களைப்பு, சோர்வு போன்ற பிரச்னைகளுக்கெல்லாம் நீங்களாகவே கால்சியம் சப்ளிமென்ட் எடுக்கக்கூடாது.
நம் உடலானது கால்சியம் சத்தை உட்கிரகித்துக்கொள்ள வைட்டமின் டி சத்து மிக அவசியம். வைட்டமின் டி என்பது சூரிய வெளிச்சத்தின் மூலம் மட்டுமே நமக்குக் கிடைக்கக்கூடியது. வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் வெயில் இருந்தாலும் நம்மில் பலரும் வெயிலில் தலைகாட்டாமல் வாழ்கிறோம், வேலை செய்கிறோம். அதனால் இந்தக் குறைபாடு இன்று அதிகரித்து வருகிறது. நீரிழிவு பாதித்தவர்களுக்கு இந்தக் குறைபாடு அதிகமாக இருக்கிறது.
நீரிழிவு உள்ளவர்களும், நீரிழிவு இல்லாதவர்கள் அடிக்கடி உடல் களைத்துப் போகிறது என்ற நிலையிலும் வைட்டமின் டி அளவை அடிக்கடி சரிபார்க்கவேண்டும். எல்லோருக்கும் வைட்டமின் டி சப்ளிமென்ட் தேவை என அர்த்தமில்லை. சூரிய வெளிச்சத்திலிருந்தே இதை இயற்கையாகப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு வாய்ப்பே இல்லாதவர்களுக்கு வாரம் ஒருமுறை என குறிப்பிட்ட வாரங்களுக்கு எடுத்துக்கொள்ளும் சப்ளிமென்ட் பரிந்துரைக்கப்படும். எந்த மருந்தையும் மருத்துவரின் பரிந்துரையோடு அவர் குறிப்பிடும் நாள்களுக்கு குறிப்பிட்ட டோஸ் மட்டுமே எடுக்க வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment