சாப்பிட்டு முடித்த பின்பு சிறிது தூரத்திற்கு குறுநடை மேற்கொள்ளச் சொல்கிறது சித்த மருத்துவம். `சாப்பிட்டு முடித்ததும் உடனடியாக நடக்கலாமா… அப்படி நடப்பதால் செரிமானம் பாதிக்கப்படுமா… அல்லது செரிமானத் திறன் அதிகரிக்குமா…' - சொல்கிறார் சித்த மருத்துவர் விக்ரம் குமார்.
அதென்ன குறுநடை என்கிறீர்களா? எவ்வித அவசரமோ பதற்றமோ இன்றி சுமார் பத்து பதினைந்து நிமிடங்களுக்கு, மிகக் குறைந்த வேகத்தில் நடப்பதுதான் அது.
நீண்ட காலத்திற்கு செரிமானம் சிக்கலின்றி நடைபெற வேண்டும் என்றால் சில உணவியல் ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். அதில் உண்டபிறகு குறுநடை மேற்கொள்வது முக்கியமானதோர் ஒழுக்கம்!
அலுவல் நிமித்தமாக காலையிலும் மதிய வேளையிலும் சாப்பிட்டவுடன் குறுநடை போட யாருக்கும் வாய்ப்பில்லை. ஆனால், இரவு உணவை சாப்பிட்டு முடித்த பிறகாவது, வீட்டுத் தெருக்களில் அல்லது வீட்டு மாடியில் ரிலாக்ஸாக குடும்பத்தோடு குறுநடை போடலாமே!
சாப்பிட்டவுடன் மெதுவான நடை பயில்வதால், செரிமானப் பகுதியில் சேர்ந்த உணவுக் கூழ்மங்களின் நகரும் தன்மை (Gastric emptying) அதிகரிக்கிறதாம்! செரிமான மண்டலத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் அதிகரித்து மலச்சிக்கல், உணவு எதுக்களித்தல், வயிற்றுப் புண் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
நீரிழிவு நோயாளர்களின் ரத்தச் சர்க்கரை அளவு குறைவதாக ஆரம்ப நிலை ஆய்வுகள் நம்பிக்கை அளிக்கின்றன. நீரிழிவு நோயாளர்கள் காலை எடுக்கும் விரை நடையோடு இரவு உணவுக்குப் பிறகு மெது நடையையும் வழக்கமாக்கிடுங்கள்.
இடையூறு அற்ற உறக்கத்தைத் தேடுபவர்கள் குறுநடை போகலாம்.
மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரித்து உங்களுக்குள் மகிழ்ச்சி பிறக்கும். மொத்தத்தில் உண்ட பிறகு நாம் போட வேண்டியது வீறு நடை அல்ல, குறுநடை…
Comments
Post a Comment