Doctor Vikatan: சிலருக்கு வழக்கத்தைவிட சற்று அதிகம் சாப்பிட்டாலே உடல் எடை ஏறிவிடுகிறது. இன்னும் சிலருக்கோ என்ன சாப்பிட்டாலும் எடை ஏறாமல், ஒல்லியாகவே இருப்பதைப் பார்க்கிறோம். அவர்களுக்கு மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது... இதை எப்படிப் புரிந்துகொள்வது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.
உங்களுக்குத் தெரிந்தவர்களில் சிலர் ஓரிடத்தில் நிற்காமல், உட்காராமல் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவர்களின் இந்தச் செயலை 'நான் -ஆக்டிவிட்டி எக்சர்சைஸ் தெர்மோஜெனசிஸ் ' (non activity exercise thermogenesis ) என்று சொல்கிறோம். இவர்களுக்கு வளர்சிதை மாற்றம் அதிகமாகவே இருக்கும். இவர்கள் ஒல்லியாகவே இருப்பார்கள்.
அடுத்து மரபியல் ரீதியாகவும் சிலர் ஒல்லியான உடல்வாகுடன் இருப்பார்கள். குடும்பத்தில் அத்தனை பேரும் ஒல்லியாகவே இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு தசைகளின் அடர்த்தி ( Muscle mass) அதிகமிருக்கும். தசை என்பது உடல் முழுக்க இருக்கும். அது சும்மாவே இருக்காது. எந்த நேரமும் எனர்ஜி கேட்டுக்கொண்டே இருக்கும். ஒருவரது உடலில் தசை அடர்த்தி அதிகமாக, ஆக, கொழுப்பின் அளவு குறையும். உடலளவில் பலமாகவும் உணர்வோம். எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். இப்படிப்பட்டவர்களின் நடையும், தோரணையும் கம்பீரமாகவே இருக்கும். தசை அடர்த்தி அதிகமிருப்பவர்கள், எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருப்பார்கள். அவர்களுக்கு கொழுப்பும் கம்மியாகவே இருக்கும்.
தைராய்டு ஹார்மோன் அதிகம் சுரக்கும் ஹைப்பர் தைராய்டிசம் பாதிப்புள்ளவர்களும் ஒல்லியாக இருப்பார்கள். இன்னும் ஒரு பிரிவினர், என்னதான் விருப்பமான உணவு கொடுத்தாலும் அளவோடுதான் சாப்பிடுவார்கள். அதனாலேயே ஒல்லியாக இருப்பார்கள். ஒல்லியாக இருப்பவர்கள் எல்லோரும் ஆரோக்கியமானவர்கள் என்று அர்த்தமில்லை. ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால் அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகள் தெரியவரலாம். 'ஃபங்ஷனல் ஃபிட்னெஸ்' (Functional fitness) என்று ஒரு விஷயம் உண்டு. அதாவது கனமான ஒரு பொருளைத் தூக்க முடிகிறதா, முதுகுவலியின்றி மாடிப்படிகளில் ஏறி, இறங்க முடிகிறதா என்றெல்லாம் பார்ப்பது ஃபங்ஷனல் ஃபிட்னெஸ்ஸின் அளவுகோல்.
சிலருக்கு தினமும் இரவில் குறிப்பிட்ட மணிக்கு தூங்கியே ஆக வேண்டும். என்ன வேலை இருந்தாலும், யார் உடனிருந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். எனக்கு என் தூக்கம் முக்கியம் என தூங்கிவிடுவார்கள். அவர்களுக்கு ஹார்மோன் பிரச்னைகள் வராது. உடலில் கொழுப்பு சேராது. அதனால் அவர்களும் ஒல்லியாக இருப்பார்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment