Doctor Vikatan: எனக்கு எப்போதும் வயிற்றில் ஒருவித 'கடமுடா' சத்தம் வந்துகொண்டே இருக்கிறது. சில நேரங்களில் இந்தச் சத்தம் வெளியில் கேட்கும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா... இதை சரியாக்க என்ன செய்வது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்.
வயிற்றில் கேட்கும் இந்தச் சத்தம் இருவிதங்களில் உணரப்படலாம். ஏதேனும் வேலை செய்துகொண்டிருக்கும்போதோ, சும்மா இருக்கும்போதோ வயிற்றில் அசைவுகளும், கடமுடா என்ற சத்தமும் கேட்கும். சிலர் இதை அவர்கள் மட்டும் உணர்வார்கள். இன்னும் சிலருக்கு இது வெளியிலும் கேட்கும்.
மருத்துவரிடம் இந்தப் பிரச்னையுடன் வரும்போது ஸ்டெதஸ்கோப் இல்லாமலேயே வெளியிலும் அந்தச் சத்தம் கேட்கும். குடலின் அசைவுகள் அதிகரிக்கும்போது (increased intestine movements) இது போன்ற சத்தம் கேட்கும். சிலருக்கு வெறும் சத்தம் மட்டுமே கேட்கும். இன்னும் சிலருக்கு வயிற்றுப்போக்குடன் சேர்ந்து இந்தச் சத்தமும் வெளிப்படும். உணவு எடுத்துக்கொள்ளப் பிடிக்காமல் வாந்தி, வயிற்றுவலி போன்றவையும் ஏற்படலாம். வெறும் சத்தம் மட்டும் வருகிறது என்றால் அந்தப் பிரச்னையை சற்று கவனிக்க வேண்டியிருக்கும். அடிக்கடி வருகிறது என்றால் மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம்.
வயிற்றில் வாய்வு அதிகம் உருவாகும்போதும், சாப்பிடும்போதும் இப்படி வரும் வாய்ப்புகள் அதிகம். சிலவகை தொற்றுகளின் காரணமாக குடல் இயக்கங்கள் அதிகரிக்கலாம். கிருமித்தொற்றின் காரணமாக வயிற்றில் சத்தமும் கூடவே வயிற்றுப்போக்கும் வரக்கூடும். சில வகை ஒவ்வாமை மற்றும் 'இரிட்டபுள் பவல் டிசீஸ்' (Irritable Bowel Disease) போன்றவற்றின் காரணமாகவும், குடல் இயக்கம் அதிகரித்து, இந்தப் பிரச்னை வரலாம். எனவே, உங்கள் விஷயத்தில் வெறும் வயிற்றுச் சத்தம்தான் பிரச்னை... மற்றபடி வயிற்றுவலியோ, வாந்தியோ, வயிற்றுப்போக்கோ, எடை இழப்போ இல்லை என்கிற பட்சத்தில் சற்று பொறுத்திருந்து பார்க்கலாம். அதுவே அறிகுறிகள் இருந்தால் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment