Doctor Vikatan: பீரியட்ஸ் ஆனதும் தலைக்குக் குளிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுவது ஏன்... அதற்கு மருத்துவ காரணம் ஏதாவது உண்டா.... உடற்பயிற்சிகள் செய்தால், குறிப்பாக ஸ்கிப்பிங் பயிற்சியால் வழக்கத்தைவிட பீரியட்ஸ் முன்னரே வரும் என்பது உண்மையா... பீரியட்ஸின் போது உடற்பயிற்சிகள் செய்யலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
பீரியட்ஸ் நாள்களில் தலைக்குக் குளிப்பது அவசியம் என்றெல்லாம் இல்லை. சில குடும்பங்களில் அது காலங்காலமாக ஒரு வழக்கமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. குளித்தால் உடல் ரிலாக்ஸ் ஆகும் என்பதும், ஒருவித புத்துணர்வை உணர்வோம் என்பதும் நாம் அறிந்ததே. பீரியட்ஸ் நாள்களில் ஏற்கெனவே உடல், மன ரீதியாக சற்று மந்தமாக உணர்வார்கள் பெண்கள். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்யும். மனநிலையை சற்று மாற்றும். அதற்காக குளிக்கலாம், தவறில்லை. மற்றபடி அது கட்டாயமெல்லாம் இல்லை.
பீரியட்ஸ் என்பது ஹார்மோன்களின் தூண்டுதலால் வருவது. மூளையிலிருந்து வரும் எஃப்.எஸ்.ஹெச் (FSH) மற்றும் சினைப்பைகளிலிருந்து சுரக்கப்படும் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்களுக்கு இதில் முக்கியப் பங்கு உண்டு. இது மாதந்தோறும் நிகழக்கூடிய ஒன்று.
ஸ்கிப்பிங் செய்வது, சைக்கிள் ஓட்டுவது, அதிகம் விளையாடுவது போன்றவற்றால் எல்லாம் பீரியட்ஸ் வந்துவிடாது. பீரியட்ஸ் வரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கலாம்... அந்த நேரத்தில் ஒரு பெண் விளையாட்டிலோ, ஸ்கிப்பிங் பயிற்சி போன்ற வேறு உடல் இயக்கச் செயல்பாட்டிலோ ஈடுபட்டிருக்கலாம். அதையடுத்து பீரியட்ஸும் வந்திருக்கலாம். அதற்காக, விளையாட்டால்தான் பீரியட்ஸ் வந்தது என அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது.
பீரியட்ஸின்போது பெண்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்தக் காலத்தில் பெண்களை எந்த வேலையும் செய்யவிடாமல் ஒதுக்கிவைத்தார்கள். இன்றைய வாழ்க்கையில் அது சாத்தியமில்லை. ஓய்வு தேவையா என்பதும் சம்பந்தப்பட்ட பெண்ணின் விருப்பம். வலியும் ப்ளீடிங்கும் அதிகமாக இருக்கும் பெண்கள் ஓய்வெடுக்கலாம். ஆனால், அது எல்லோருக்குமான பொது விதி இல்லை என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் உடல்நிலையைப் பொறுத்து கடினமான வேலைகளைச் செய்யாமல் இருக்கலாம். சைக்கிள், பைக் ஓட்டுவது, குதிரை ஓட்டுவது போன்றவற்றை எப்போதும்போல செய்யலாம். ஜிம்மில் கடினமான வொர்க் அவுட் செய்வதைத் தவிர்க்கலாம். ப்ளீடிங் ஆவதால் உடல் பலவீனமாக இருக்கும் என்பதுதான் காரணம். இடுப்புக்கும் வயிற்றுக்கும் அழுத்தம் தராத, வலியை அதிகரிக்காத மிதமான பயிற்சிகள் செய்யலாம், தவறில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment