Doctor Vikatan: சிலர் எத்தனை வயதானாலும் பேபி சோப், பேபி ஷாம்பூ, பேபி பவுடர் என குழந்தைகளுக்கான பொருள்களை உபயோகிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அது சரியா.... பெரியவர்கள் பேபி புராடக்ட்ஸ் பயன்படுத்தலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா
நிறைய பேர் இந்த விஷயத்தைப் பின்பற்றுவதைப் பார்க்கலாம். குழந்தைகளுக்கான சருமப் பராமரிப்பு மற்றும் கூந்தல் பராமரிப்புக்கான பொருள்களை பெரியவர்கள் உபயோகிப்பது சரியான விஷயமே இல்லை.
குழந்தைகளுக்கான சருமப் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு பொருள்களின் தயாரிப்பே முற்றிலும் வித்தியாசமானது. குழந்தைகளின் சருமம் மற்றும் கூந்தலின் தன்மை, அவர்களது பிஹெச் அளவு, அவர்களது சருமம் சுரக்கும் எண்ணெய்ப்பசையின் தன்மை என பல விஷயங்களைக் கருத்தில் கொண்டே அவர்களுக்கான பொருள்கள் தயாரிக்கப்படும். மிக முக்கியமாக, குழந்தைகளுக்கான பொருள்கள் அவர்களுக்கு கண்ணீரை வரவழைக்காதவையாக இருக்கும்படியும் பார்த்தே தயாரிக்கப்படும். அப்படிப்பட்ட பொருள்கள் பெரியவர்களின் சருமத்துக்கும் கூந்தலுக்கும் போதுமானவையாக இருக்காது.
குழந்தைகளின் சருமம் மிக மென்மையாக இருக்கும். பெரியவர்களைப் போல அவர்களுக்கு அதீத சுத்தப்படுத்துதல் தேவைப்படாது. சுற்றுப்புற சூழல் மாசு தாக்கும் வாய்ப்புகளும் அவர்களுக்கு குறைவு. ஆனால், பெரியவர்களுக்கு சற்றே அதிகமான கிளென்சிங் தன்மை கொண்ட பொருள்கள் தேவைப்படும். அவை சற்று ஸ்ட்ராங்காக இருக்கலாம்.
உதாரணத்துக்கு, குழந்தைகளுக்கான ஷாம்பூவை (Baby Shampoo) எடுத்துக்கொள்வோம்... கண்ணீரை வரவழைக்காமலிருக்க அதில் பிஹெச் அளவானது சற்று குறைவாகவே இருக்கும். அதனால் முடியானது சற்று வறட்சியாக மாறலாம். பெரியவர்கள் பேபி ஷாம்பூவை உபயோகித்துக் குளித்த பிறகு கூந்தல் வறண்டு போய்விடுவதை கவனிக்கலாம். அதற்கு இதுதான் காரணம். அதுவே பேபி பவுடர் என்பது குழந்தைகளுக்கே உபயோகிக்கக்கூடாதது. அதாவது குழந்தைகளுக்கு பவுடரே போடக்கூடாது. அதிலுள்ள டால்க் மற்றும் சிலிகா துகள்கள் குழந்தைகளின் சுவாசப் பாதையை பாதிக்கும். நுரையீரல் முழுமையாக வளர்ச்சியடையாத நிலையில், அவர்களுக்கு பவுடர் போடுவது நுரையீரலை பாதிக்கும்.
எனவே, குழந்தைகளுக்கான தயாரிப்புகள் மைல்டானவை என்றாலும் அவை பெரியவர்களுக்குப் பொருத்தமானவை என நினைத்து உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment