நம்மில் சிலருக்கு ஏற்படும் சரும பாதிப்புகளில் முக்கியமானது தோல் வறட்சி (Dry skin). தோற்றத்தில் மாற்றத்தோடு, மன வாட்டத்தையும் கொடுக்கக்கூடிய பிரச்சனை இது.
தோல் வறட்சி என்பது பொதுவாக எல்லா வயதினரையும் பாதிக்கலாம் என்றாலும், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.பெண்கள் சற்று அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்னை, பொதுவாக குளிர்காலத்தில் அதிகம் ஏற்படும்.
நோயின் இயல்பு என்ன?
-
தோலில் ஈரப்பதம் மற்றும் இயற்கை எண்ணெய் சுரப்பு இல்லாததால், நெய்ப்புப் பசை இல்லாமல் தோல் வறட்சியாதல்
-
தோலில் மெல்லிய வெள்ளை நிறக் கோடுகள் ஏற்படுதல்
-
அரிப்பு (Itching)
-
சொறிந்த இடங்கள் கரடு முரடாக மாறி விடுதல்
-
ஈரப்பதத்தை அதிகம் இழந்து, தோல் உரிதல்
-
தோல் கடினமாதல்
-
வறண்ட சருமம் சுருங்கி, வெடிப்புகள், விரிசல்கள் ஏற்படுதல், இந்த விரிசல்கள் ஆழமாகி, ரத்தம் வரல்
-
சிலவேளை சிரங்கு ஏற்படுதல்
இவ்வகைத் தோல் வறட்சி எண்ணெய் முழுக்கின் பின் குறையும். ஆனால், பின் மீண்டும் பழைய நிலையைக் காட்டும். வயது, தோலின் நிறம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் குறிகுணங்கள் மாறுபடலாம்.
எதனால் வரலாம்?
-
பொதுவாக சருமத்தின் மேல் அடுக்கில் ஈரப்பதம் போதுமானதாக இல்லாவிட்டால், பாதுகாப்பு எண்ணெய்கள் குறைந்து சரும வறட்சியை உண்டாக்கலாம்.
-
காலநிலை
-
போதுமான அளவு நீர் அருந்தாமை
-
வைட்டமின்கள் D, A மற்றும் E, இரும்புச்சத்து- போன்ற சத்துகளின் குறைபாடு
-
ஹார்மோன் சமநிலையின்மை (Hormonal imbalance)
-
சில நோய்நிலைகள்
-
சமையல், சிகை அலங்காரம், கட்டுமானம், மரவேலை, ரப்பர் தொழில் போன்ற சில தொழில்களில் ஈடுபடுதல்
-
சோப் மற்றும் சானிட்டைஸரை மிக அதிகமாகப் பயன்படுத்துதல்
-
மன அழுத்தம் மற்றும் பதற்றம்.
எப்படித் தடுக்கலாம்?
-
மா, நெல்லி, எலுமிச்சை - இலைகள், வெட்டிவேர், விலாமிச்சைவேர் - இவற்றுள் ஏதேனும் ஒன்று, ஊறிய நீரில் குளித்தல்
-
சோப்புக்கு பதிலாக, கடலை மாவு, பாசிப்பயறு மாவு, திரிபலா சூரணம், நலங்குமா போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துதல்
-
பெண்கள் மஞ்சள் பூசிக் குளித்தல்
-
வாரம் ஒரு முறை எண்ணெய்க் குளியல் எடுத்தல்
-
அதிகப்படியான வியர்வையைத் தவிர்க்கும், தளர்வான பருத்தி ஆடைகளை அணிதல்
-
போதுமான அளவு தண்ணீர் குடித்தல்
-
வெப்பத்தைக் குறைக்கும் உணவு வகைகள் மற்றும் பானங்களை அதிகம் எடுத்துக் கொள்ளுதல்.
மருத்துவம்
சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், வறண்ட சருமத்தினால், கடுமையான அரிப்பு, ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சுய பாதுகாப்பு மற்றும் தேவையான மருத்துவச் சிகிச்சையும் மிகவும் அவசியம்.
உடல் வெப்பத்தைக் குறைக்கவும், தோல் வறட்சியைப் போக்கவும் சித்த மருத்துவத்தில் அநேக உள் மற்றும் வெளி மருந்துகள் உள்ளன. தகுந்த சித்த மருத்துவரின் ஆலோசனையின் படி, அவற்றை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
எளிய மருத்துவக் குறிப்புகள்:
-
கொழுப்புச் சத்துள்ள பொருள்கள், பால், தயிர், வெண்ணெய், கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, பீன்ஸ்
-
நுங்கு, தர்பூசணி, பதநீர், இளநீர், மோர், பழச்சாறு போன்ற பானங்கள்
-
எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழ வகைகள்
-
மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, பசலைக்கீரை போன்ற வெப்பம் மற்றும் வறட்சியைக் குறைக்கும் கீரை வகைகள்
-
எள், ஆளி விதை
இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வெளிப்பிரயோகமாக
கற்றாழை ஜெல்லை தடவலாம்.
மஞ்சளை நீர் சேர்த்து அரைத்துத் தடவலாம்.
சந்தனத்தைத் தடவலாம்.
மருதாணி இலைகளை அரைத்து, பெருவிரல்களில் வைக்க, உடல் சூடு தணியும்.
மல்லிகைப் பூவை அரைத்து, முகத்தில் தடவி விட்டு,10 நிமிடங்கள் கழித்துக் கழுவ, முக வறட்சி நீங்கும்.
தேங்காய் எண்ணெய்
அறுகன் தைலம்
திரிபலா தைலம்.
அரக்குத் தைலம்
இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேய்த்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்கத் தோல் வறட்சி நீங்கும்.
எதில் கவனம் வேண்டும்?
வறட்சி நீங்க, தலைக்கு எண்ணெய் தேய்த்தல் வேண்டும்.
வெதுவெதுப்பான நீரில் குளித்தல் நல்லது.
வாரம் இருமுறை அல்லது ஒரு முறையாவது எண்ணெய் முழுக்கு அவசியம்.
வெயிலில் அலைவதைக் கூடுமானவரை தவிர்த்தல் வேண்டும்.
அதிக சூடான பானங்கள், உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
ஏசியின் உபயோகத்தைக் குறைத்துக் கொள்ளுதல் நல்லது.
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
தவறாமல் யோகாசனப் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
நல்ல தூக்கம் மிகவும் அவசியம்.
Comments
Post a Comment