மூன்று வருடங்களுக்கு முன்னால் எனக்கு புராஸ்டேட் கேன்சர் இருந்தது. அதன் காரணமாக பயாப்ஸி ஆபரேஷன் செய்யப்பட்டது. இதற்காக நான் தினமும் உறங்கப்போவதற்கு முன் 'Pradif' என்ற மாத்திரையைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். தற்போது என்னுடைய பிரச்னை என்னவென்றால், இந்த மாத்திரையை நான் சாப்பிட ஆரம்பித்ததில் இருந்து நான் பல்வேறு பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு வருகிறேன். குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு விறைப்புத்தன்மை இல்லை. நான் என்ன செய்வது? வாசகரின் இந்தக் கேள்விக்கு மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி பதில் சொல்கிறார்.
''உங்கள் விறைப்பின்மை பிரச்னைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. `நமக்கு புராஸ்டேட் கேன்சர் வந்து விட்டதே' என்கிற பயமும் மன உளைச்சலும்தான் முக்கிய காரணங்கள். புராஸ்டேட் கேன்சரின் பக்க விளைவுகளாலும் விறைப்புத்தன்மையில் கோளாறு வரலாம்.
புராஸ்டேட் பயாப்ஸி செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், அறுவை சிகிச்சை செய்து புராஸ்ட்டேட் சுரப்பியை நீக்கி விட்டார்களா என்பது பற்றிச் சொல்லவில்லை. அப்படி நீக்கியிருந்தாலும், சிலருக்கு விறைப்புத்தன்மை ஏற்படுவதில் பிரச்னை வரலாம்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள மாத்திரை. பொதுவாக, உங்களுடைய பிரச்னைக்கு tamsulosin + dutasteride என்ற காம்பினேஷன் மருந்தைத்தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். நீங்கள் எடுத்து வருகிற மாத்திரையும் அந்த வகையைச் சேர்ந்ததுதான். இந்த மருந்து ஆண் ஹார்மோனின் செயல்பாட்டைத் தடுக்கும். இதனால் விறைப்புத்தன்மை குறையும். விளைவு, தாம்பத்திய உறவிலும் ஆர்வம் குறையும். உங்கள் பிரச்னைக்கு மேலே சொல்லப்பட்டுள்ளவற்றில் எது காரணம் என்பதைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் மருத்துவரை நேரில் சந்தித்துப் பேசுங்கள். நிச்சயம் தீர்வு கிடைக்கும். பயப்படாதீர்கள்'' என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.
Comments
Post a Comment