'உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு' என்று பலர் சொல்லிக் கேட்டிருப்போம். கேட்பது மட்டும் இல்லை, நமக்கே நடந்திருக்கும். ஆம். வயிறுமுட்ட உண்டுவிட்டு, சிறிது நேரம் அமர்ந்திருந்தாலே கண்கள் சுழற்றிக்கொண்டு வரும். அப்படியே ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்தால், ஆஹா... அது தான் சொர்க்கம்.
சாப்பிட்ட பிறகு வரும் இந்தக் குட்டி தூக்கத்திற்கு பெயர் 'ஃபுட் கோமா'வாம் (Food Coma). 'இது என்னடா புதுசா இருக்கு?' என்று இது பற்றிய சந்தேகத்தை பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்க, அவர் விளக்குகிறார்...
"சும்மா சாப்பிட்டாலே ஃபுட் கோமா ஏற்பட்டு விடாது. அளவுக்கு மீறி அதிகமாக உண்ணும்போது தான் ஃபுட் கோமா ஏற்படுகிறது. 'கோமா' என்றதும் 'நினைவுகள் மறந்துவிடும். பேச முடியாது. சுற்றி நடக்கும் எதுவும் தெரியாது' என்று பொருள் கொள்ள வேண்டாம். ஃபுட் கோமா என்னும் வார்த்தையில் வரும் 'கோமா' தூக்கம், சோம்பல், எனர்ஜி குறைபாடு, கவனமின்மை (Low Concentration) ஆகியவற்றைக் குறிக்கிறது.
எதனால் ஏற்படுகிறது?
தேவைக்கு அதிகமாகச் சாப்பிடும்போது உணவில் இருக்கும் மாவுச்சத்து ஒருவகை மயக்கநிலைக்கு கொண்டு செல்லும். அதாவது மாவுச்சத்தில் உள்ள குளுக்கோஸ் ரத்தத்தில் கலக்கும். இந்த ரத்தம் மூளைக்குச் செல்லும்போது நமக்கு தூக்கம், சோம்பல் போன்றவை ஏற்படுகின்றன.
இன்னும் சில நேரங்களில் தைராய்டு போன்ற பிரச்னைகள், அலர்ஜி, சத்துக் குறைபாடு ஆகியவற்றாலும் இப்படி ஏற்படலாம்.
இது ஒரு நோயா?
ஃபுட் கோமா நிச்சயம் நோய் அல்ல. அதிகமாகச் சாப்பிடும்போது ஏற்படும் ஒருவித நிலை. அவ்வளவே.
எப்படித் தடுக்கலாம்?
-
சரியான அளவு உணவு மட்டும் எடுக்க வேண்டும். அளவுக்கு மீறி உண்ணக் கூடாது.
-
எல்லா சத்துகளும் சரியான அளவு கிடைக்கும்படியான உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
-
புகைப்பழக்கம், மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். -
இரவில் நல்ல தூக்கம் வேண்டும்.
-
'பளிச்' என்று இருக்கும் விளக்குகளைப் பயன்படுத்தலாம். வெளிச்சமான இடத்தில் இருக்கலாம்.
-
மதிய வேளையில் குட்டித் தூக்கம் போடலாம்.
Comments
Post a Comment