Doctor Vikatan: சமீபத்தில் நடிகை ஒருவர், தான் அணிந்திருந்த கான்டாக்ட் லென்ஸால், தனக்கு கண்களில் பிரச்னை ஏற்பட்டதாகவும், பார்வை சரியாகத் தெரியாமல் போனதாகவும், சிகிச்சையில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இன்று சாமானியர்களிடம் கான்டாக்ட் லென்ஸ் அணிகிற வழக்கம் அதிகரித்து வரும் நிலையில், நடிகை பகிர்ந்திருந்த விஷயம் அதிர்ச்சியளிக்கிறது. அப்படியானால் பார்வையை பாதிக்கும் அளவுக்கு அவை ஆபத்தானவையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.
கண்ணாடி அணிய விரும்பாதவர்களுக்கும், கண்ணாடியைத் தவிர்க்க நினைப்போருக்கும் கான்டாக்ட் லென்ஸ் மிகச் சிறந்த ஆப்ஷன் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், அதில் சில மைனஸ் விஷயங்களும் உள்ளதை மறுப்பதற்கில்லை.
கான்டாக்ட் லென்ஸ் அணிவது என முடிவு செய்துவிட்டால், அடிப்படையான சில விஷயங்களை அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். லென்ஸை மிகச் சரியாக அணிய வேண்டும். உபயோகித்துக் கழற்றியதும் அவற்றுக்குண்டான பிரத்யேக திரவத்தில்தான் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
லென்ஸை அதற்குரிய கேஸில் (டப்பாவில்) தான் பத்திரப்படுத்த வேண்டும். அந்த பாக்ஸானது முறையாகச் சுத்தப்படுத்தப்பட வேண்டும். இவற்றில் எதைச் செய்யத் தவறினாலும் இன்ஃபெக்ஷன் வரலாம். அந்த இன்ஃபெக்ஷனானது கண்கள் முழுவதும் பரவலாம்.
கான்டாக்ட் லென்ஸ் அணிவதில் உள்ள மிக முக்கியமான மைனஸ், அதனால் ஏற்படும் 'ஹைப்பாக்ஸியா' ( Hypoxia) பிரச்னை. ஹைப்பாக்ஸியா என்பது ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்துகிற நிலை. லென்ஸ் அணிவதால் கண்களுக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகலாம். இதன் விளைவாக, பார்வை மங்குதல், வலி, கண்களில் நீர் வடிதல், சிவந்துபோவது போன்ற பிரச்னைகள் வரக்கூடும். கான்டாக்ட் லென்ஸ் அணிவோரில் ஆண்களைவிட பெண்களே அதிகம். அதனால், இந்தப் பிரச்னைகளையும் அவர்களே அதிகம் சந்திக்கிறார்கள். கான்டாக்ட் லென்ஸை அவசரமாகப் போட்டுக்கொள்ளும்போது, அவர்களின் கருவிழிகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு.
கார்னியா எனப்படும் கருவிழி எபித்தீலியம் (Epithelium) , போமன்ஸ் லேயர் (Bowman's layer), ஸ்ட்ரோமா (Stroma), டெஸ்மெட் மெம்ப்ரேன் (Descemet's membrane) மற்றும் எண்டோதீலியம் (Endothelium) என ஐந்து லேயர்களை கொண்டது. வெளியில் உள்ள எப்பிதீலீயம் என்கிற லேயரில், விரல் நகம் பட்டு பாதிக்கப்படலாம். எபித்தீலியம் பாதிப்பாலும் பார்வை மங்குதல், சிவந்துபோவது, கண்களில் நீர்வடிதல் போன்ற பிரச்னைகள் வரலாம். இதற்கு கண் மருத்துவரால்தான் சிகிச்சை அளிக்க முடியும். கண்களைப் பரிசோதித்துவிட்டு, மருத்துவர் ஆன்டிபயாடிக் ஆயின்மென்ட், டிராப்ஸ் உள்ளிட்டவற்றை 24 மணி நேரத்துக்குப் பரிந்துரைப்பார். ஒருவேளை இதில் பிரச்னை குணமாகவில்லை என்றால், அடுத்தகட்ட சிகிச்சை என்ன என்று சொல்வார்.
எனவே, கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதில் தவறில்லை. அதைச் சரியாகப் பயன்படுத்தி, பாதுகாப்பாக இருந்தால் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம். லென்ஸ் அணிவதால் மேற்குறிப்பிட்ட அறிகுறிகளை உணர்ந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment