Doctor Vikatan: என் 10 வயது மகன் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்படவே, மருத்துவரிடம் அழைத்துச்சென்றோம். மருத்துவர் அவனைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, அல்சர் பாதிப்பாக இருக்கலாம் என மருந்துகள் கொடுத்தார். அல்சர் என்பது குழந்தைகளையுமா பாதிக்குமா... அதற்கு நீண்டகாலம் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்
அல்சர் (Ulcer) என்பதை உணவுக்குழாய் புண் அல்லது இரைப்பை புண் என்று சொல்லலாம். குதம்வரை செல்லும் உணவுக்குழாயில் நான்கு லேயர்கள் இருக்கும். இதில் மூன்றாவது லேயரில் ஏற்படும் புண்ணை இரைப்பை புண் அல்லது அல்சர் என்கிறோம்.
நாம் சாப்பிடுகிற உணவு எதுவானாலும், எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதைக் கூழாக்கும் தன்மை கொண்டது இரைப்பை. உணவுகளில் உள்ள சத்துகளைப் பிரித்தெடுத்து ரத்தத்தின் வழியே உடல் உறுப்புகளுக்கு அனுப்புபவை ஜீரண சுரப்பிகள். இந்தச் செயலுக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலமும், கேஸ்ட்ரிக் ஜூஸ் எனப்படும் இரைப்பை அமிலமும் தேவை.
புரதத்தை ஜீரணிக்க ஒன்று, கொழுப்பை ஜீரணிக்க ஒன்று என நிறைய இரைப்பை அமிலங்களின் தேவை இதில் உண்டு. 70 சதவிகித செரிமானம் இரைப்பையில் நடந்துவிடும். மீதமுள்ள 30 சதவிகித செரிமானமானது குடலில் நடக்கும்.
உணவானது 2 மணி நேரத்துக்கு இரைப்பையில்தான் இருக்கும். அதன் பிறகுதான் அது இரைப்பையை விட்டு வெளியே வரும். இந்த இரண்டு மணி நேரத்துக்குள்தான் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் இரைப்பை அமிலங்களும் உணவைக் கூழாக்கி, சத்துகளை கிரகித்து அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பும் வேலைகளைச் செய்கின்றன. இந்த அமிலங்கள் சரியான நேரத்துக்குச் சுரந்துவிடும். அதன் பிறகுதான் நமக்குப் பசி உணர்வே ஏற்படும்.
சரியான நேரத்துக்குச் சாப்பிடாதபோது அமிலச் சுரப்பானது உங்கள் இரைப்பையை புண்ணாக்கும். இது மட்டுமன்றி, அதிக காரம், புளிப்பு, எண்ணெய் சேர்த்த உணவுகள், அதீத ஸ்ட்ரெஸ், அதீத கோபம், அதீத அழுகை, சோகம் போன்றவையும் இந்த அமிலச் சுரப்பை அதிகப்படுத்தும். சரியாகத் தூங்காவிட்டாலும் இது நிகழும்.
அல்சர் பாதிப்புக்கு வயது பிரச்னையல்ல... மேற்குறிப்பிட்ட விஷயங்களில் அலட்சியமாக இருக்கும் எந்த வயதினரையும் அது பாதிக்கலாம். சமீப காலமாக குழந்தைகள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவதை அதிகம் பார்க்கிறோம். காரணம், அவர்களது உணவுப்பழக்கம். பெரும்பாலும் வெளி உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். சிப்ஸ், அப்பளம், சாட் வகைகள் என காரம், மசாலா, எண்ணெய் அதிகமான உணவுகளைச் சாப்பிடுவதுதான் காரணம்.
சிலர், சொல்லிவைத்தாற்போல தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு வயிற்றுவலி வருவதாகச் சொல்வார்கள். அப்படி அலாரம் வைத்தது போல வரும் வலியானது அல்சரின் அறிகுறியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அல்சர் பாதிப்புள்ளவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உணவு உண்ணத் தாமதம் ஏற்படும் என்றால் இடையில் பிஸ்கட், வாழைப்பழம் என ஏதேனும் உணவை சிறிய அளவிலாவது எடுத்துக்கொள்ள வேண்டும். அல்சர் பாதிப்பைத் தூண்டும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். அல்சருக்கு அதிகபட்சமாக 3 வாரங்கள் மருந்துகள் எடுக்க வேண்டியிருக்கும். அந்த மருந்துகளை பாதியோடு நிறுத்தாமல் முழுமையாக எடுத்து முடிக்க வேண்டும். உங்கள் குழந்தையின் உணவுப்பழக்கத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டியதும் முக்கியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment