Doctor Vikatan: நான் 36 வயதுப் பெண். வேலை பார்க்கிறேன். பகல் வேளைகளில் எப்போதும் களைப்பாக உணர்கிறேன். இரவில் 7 மணி நேரம் தூங்குகிறேன். ஆனாலும், காலையில் எழுந்திருந்த பிறகும் புத்துணர்வாக உணர முடிவதில்லை. என் களைப்பு காரணமாக வேலையிலும் சிரமங்களைச் சந்திக்கிறேன். பணியிடத்தில் தூக்கம் வருகிறது. அதீத களைப்பு என்பது ஏதேனும் பெரிய பிரச்னையின் அறிகுறியாக இருக்குமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்
களைப்பாக உணர ஒவ்வொருவருக்கும் காரணங்கள் வேறுபடலாம். ஒரு நாளைக்கு நமக்குத் தேவையான உணவை சரியானதாகவும் சரியான நேரத்திலும் சாப்பிட வேண்டியது ஆரோக்கியத்துக்கு அடிப்படை. இரவில் வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு, பகலில் பட்டினி கிடப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு பகலில் எனர்ஜி குறைவாக இருக்கும். எனவே, ஒவ்வொரு வேளை உணவுக்கும் சரியான இடைவெளி முக்கியம்.
அடுத்தது உறக்கம். ஆரோக்கியமான நபருக்கு 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் போதுமானது. ஆனால், சிலர் 8 மணி நேரம் தூங்கினாலும் அடுத்தநாள் காலையில் களைப்புடனேயே எழுந்திருப்பார்கள். உடல் பருமனானவர்களுக்கும் ஆழ்ந்த தூக்கம் சாத்தியமாகாமல் போகலாம். அவர்களுக்கு 'ஸ்லீப் ஆப்னியா' (Sleep apnea) என்ற பிரச்னை இருக்கலாம். அதாவது தூங்கும்போதே ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகலாம். குறட்டை விடுவார்கள், திடீரென சுவாசிப்பதை நிறுத்திவிடுவார்கள்.
இப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு 'ஸ்லீப் ஸ்டடி' (Sleep Study) என்ற பரிசோதனையில் தூக்கத்தை ஆய்வுசெய்தால், தூங்கும்போது ஆக்ஸிஜன் குறைவாக இருப்பது தெரியவரும். இவர்களுக்கு சிபாப் (CPAP Machine) என்ற மெஷினை முகத்தில் மாட்டிக்கொண்டு தூங்கச் சொல்வோம். இவர்களுக்கெல்லாம் இதயநோய், மாரடைப்பு போன்றவை வரும் ரிஸ்க் அதிகம். போதுமான அணவு தண்ணீர் குடிக்காதவர்களுக்கும் களைப்பு அதிகமிருக்கலாம். தூக்கத்தோடு சேர்த்து உப்பும் இவர்களுக்குத் தேவையாக இருக்கலாம். இவர்கள் ஓஆர்எஸ் பவுடர், சாதம் வடித்த கஞ்சியில் உப்பு சேர்த்தது, நீர்மோர் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைக் குடித்தால் களைப்பு நீங்கும்.
இந்தியாவில் 50 சதவிகிதத்தினருக்கும் மேல் ரத்தச்சோகை இருக்கிறது. குறிப்பாக, பெண்களில் 10-ல் 6 பேருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பது ஆய்வுகளில் தெரிகிறது. ரத்தச்சோகை இருக்கும் பெண்கள் எப்போதும் களைப்பாக உணர்வார்கள். இவர்கள் எல்லோரும் தினமும் கொத்தமல்லி சட்னியோ, கறிவேப்பிலை சட்னியோ, புதினா சட்னியோ செய்து சாப்பிட வேண்டியது மிக அவசியம். வாரத்தில் 3-4 நாள்களுக்கு கீரை சாப்பிட வேண்டும். வாரம் ஒருநாளாவது அகத்திக்கீரையோ, முருங்கைக்கீரையோ சாப்பிடலாம். இவையெல்லாம் ரத்தச்சோகை வராமல் தடுக்கும்.
ஹைப்போதைராய்டிசம் பாதிப்புள்ள பெண்களுக்கும் எப்போதும் களைப்பு இருக்கலாம். எனவே, நீங்கள் களைப்பாக உணர்வதற்கு மேற்குறிப்பிட்டவற்றில் எந்தக் காரணம் உங்களுக்கு இருக்கக்கூடும் என்பதைப் பார்த்து, அதற்கேற்ப சிகிச்சைகள், உணவுப்பழக்கம், வாழ்வியல் முறைகளை மாற்றிக்கொண்டாலே தானாகச் சரியாகும். மருத்துவரை அணுகி அடிப்படையான பரிசோதனைகளைச் செய்து பாருங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment