Doctor Vikatan: என் மனைவிக்கு 55 வயது. அவருக்கு சர்க்கரைநோய் இருக்கிறது. அவரை வீட்டுக்குள்ளும் செருப்பு அணிந்து நடக்கும்படி சிலர் அறிவுறுத்துகிறார்கள். சர்க்கரை நோயாளிகள் எப்போதும் செருப்புடன்தான் நடமாட வேண்டுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.
சர்க்கரைநோய் என்பது நரம்புகளை பாதிக்கக்கூடியது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். சர்க்கரைநோயால் ஏற்படும் எந்த பாதிப்பையும் முன்கூட்டியே தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம். பாதித்துவிட்டால் சரிசெய்வதற்கு வாய்ப்பே இல்லை. பாதித்த பிறகு அதன் தீவிரத்தை வேண்டுமானால் குறைக்கலாம், அவ்வளவுதான்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது இலையை பூச்சி அரிப்பதுபோல நரம்புகளை பாதிக்கும். அதனால் எரிச்சல் உண்டாகும். அந்த எரிச்சல் உணர்வு, உங்கள் நரம்புகள் பலவீனமாகின்றன என்பதற்கான அறிகுறி. நரம்புகள் வேலையே செய்யவில்லை என்பதன் அறிகுறியாக மரத்துப்போகிற உணர்வு ஏற்படும்.
இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள், செருப்பு அணியாமல் வெறும் கால்களுடன் நடக்கும்போது, கொதிக்கும் தரையில் நடந்தால்கூட, பாதி சூட்டையே உணர்வார்கள். அவ்வளவாக சூடு இல்லையே என நடந்துவிடுவார்கள். மறுநாள் காலை, கால் முழுவதும் கொப்புளங்கள் வந்திருக்கும். பாத யாத்திரை என்ற பெயரில் பலரும் இப்படித்தான் வெறுங்கால்களுடன் நடந்து கால்களைப் புண்ணாக்கிக் கொள்கிறார்கள். பக்கத்தில்தானே செல்கிறோம் என்ற அலட்சியத்தில் செருப்பு அணியாமல் நடப்பார்கள். உடனே பாதங்களில் கொப்புளம் வரும். கல்லோ, முள்ளோ குத்தினால்கூட வலி தெரியாது.
சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் நரம்புகள் பாதிக்கப்படாமல் காக்க முடியும். அலட்சியமாக இருந்ததன் விளைவாக, நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையிலும், கால்களில் புண்கள் வராமலாவது தடுக்க முடியும். முதல் விஷயமாக வெறும் கால்களுடன் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, வெயில் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம்.
கோயில் போன்ற இடங்களுக்குச் செல்லும்போதும் வெயில் தணிந்த மாலை நேரத்தில், சாக்ஸ் அணிந்தபடி நடக்கலாம். வீட்டுக்குள் நடப்பதற்கென்று தனியே ஒரு ஜோடி செருப்பு வைத்துக்கொள்வது அவசியம். அடுத்தது, தினமும் இரவில் கால்களைப் பரிசோதிக்க வேண்டும். கால்களைச் சுத்தமாகக் கழுவி, ஏதேனும் புண்களோ, வெட்டுக்காயமோ, நிற மாற்றமோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். விரல் இடுக்குகளைப் பரிசோதிக்க வேண்டும். நகங்களை வெட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சதையோடு சேர்த்து வெட்டிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் நீரிழிவு பாதித்தவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டியவை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment