Doctor Vikatan: PCOD பிரச்னை உள்ளவர்கள் ஜூஸ் குடிக்கக்கூடாது என்பது உண்மையா...? இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கான உணவுப்பட்டியல் எப்படி இருக்க வேண்டும்? எதைத் தவிர்க்க வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
பிசிஓடி (PCOD) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு உள்ள பெண்களுக்கு காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை பிரதானமாக எடுத்துக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்துவோம். சிம்பிள் கார்போஹைட்ரேட்டாக எடுக்கும் போது சீக்கிரமே பசி எடுத்து விடும். உடனே ஏதாவது சாப்பிடத் தோன்றும். அதன் விளைவாக கலோரி அதிகரிக்கும், எடையும் கூடும்.
கார்போஹைட்ரேட்டில் சிம்பிள் கார்போஹைட்ரேட், காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் என இருவகை உண்டு. இவற்றில் சிம்பிள் கார்போஹைட்ரேட் உணவுகள், மிக விரைவாக செரிமானமாகி, ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிப்பவை. அதுவே, காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் உணவுகள் சற்று தாமதமாக செரிமானமாகக்கூடியவை.
சாதாரணமாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் அரிசி மற்றும் கோதுமை உணவுகளுடன் நிறைய காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இவை தவிர உங்கள் உணவில் புரதச்சத்து போதுமான அளவு இருக்க வேண்டும். இதற்கு நிறைய பருப்பு, சன்னா, பயறு வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
பிசிஓடி உள்ளவர்கள் ஸ்பிலிட் மீல் பிளான் (split meal plan) என்பதைப் பின்பற்ற வேண்டும் அதாவது மூன்று வேளைகள் சாப்பிடுவதற்கு பதிலாக அதையே ஆறு வேளைகளாகப் பிரித்துச் சாப்பிடுவது தான் ஸ்பிலிட் மீல் பிளான். வழக்கமாக நீங்கள் சாப்பிடும் அளவை பாதியாகக் குறைத்து அதையே இன்னொரு வேளைக்குச் சாப்பிடும்படி பேலன்ஸ் செய்து கொள்ளலாம்.
பிசிஓடி உள்ளவர்கள் பழங்களை அறவே தவிர்க்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. எல்லா பழங்களையும் அளவோடு சாப்பிடலாம். ஆனால், பழங்களை ஜூஸாக மாற்றி எடுத்துக் கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஜூஸாக மாற்றும்போது அதில் சர்க்கரை, பால் போன்றவற்றைச் சேர்ப்போம். அது கலோரி அளவை அதிகரிக்கும். தவிர, ரத்தச் சர்க்கரை அளவையும் அதிகப்படுத்தும். அதற்கு பதிலாக பழங்களாக எடுத்துக் கொள்வதுதான் ஆரோக்கியமானது.
கொழுப்பில்லாத புரதச்சத்து (லீன் புரோட்டீன்) இவர்களுக்கு மிகவும் முக்கியம். டோஃபு, மீன் போன்றவை இந்த வகை கொழுப்பில் அடங்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை இவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். சிப்ஸ், சாட் உணவுகள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். அதிக சர்க்கரை சேர்த்த குளிர்பானங்கள், ஜூஸ் போன்றவற்றையும் இவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment