Doctor Vikatan: பொதுவாக மாரடைப்பு என்பது 50 வயதைக் கடந்தவர்களுக்கு வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதிலும் பெண்களுக்கு அந்த ரிஸ்க் குறைவு என்றும் சொல்லிக் கேட்டிருக்கிறோம். ஆனால், சமீப காலமாக இளவயதினரும் பெண்களும் மாரடைப்பு பாதித்து உயிரிழக்கும் சம்பவங்களை அதிகம் கேள்விப்படுகிறோம். உண்மையில் அவர்களுக்கு என்னதான் நடக்கிறது...? இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மூத்த இதயநோய் மருத்துவர் சொக்கலிங்கம்.
இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன், இதயத்தின் ரத்தக்குழாய்களின் அமைப்பு, மற்றும் அவற்றில் நடக்கும் மாறுதல்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
இதயத்தின் வலது, இடது பக்கங்களில் 2- 3 மில்லி மீட்டர் அளவில் இரண்டு இதய ரத்தக் குழாய்கள் இருக்கும். ரத்தத்தில் ஆக்ஸிஜன், சர்க்கரை, மிக முக்கியமாக கொலஸ்ட்ரால் ஆகியவை இருக்க வேண்டும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்பது இல்லை என்றால் இதயம், மூளை என எல்லாமே செயலற்றுப் போய், மனிதன் இறந்துவிடுவான்.
மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும்வரைதான் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் இருக்கும். எண்டார்ஃபின் (Endorphin ) என ஒரு ஹார்மோன் நம் உடலில் சுரக்கும். மகிழ்ச்சியாக இருக்கும்போது மட்டுமே சுரக்கக்கூடியது இது. இந்த ஹார்மோன்தான் ரத்தத்தில் கொலஸ்ட்ராலை தக்கவைக்கிறது. ஸ்ட்ரெஸ், கவலை என மனிதன் மகிழ்ச்சியை இழக்கும்போது அட்ரீனலின் (Adrenaline) என்ற ஹார்மோன் சுரக்கிறது. அந்த ஹார்மோன் அதிகம் சுரக்கும்போது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால், ரத்தக் குழாய்களில் படியத் தொடங்கும். அப்படிப் படியும்போது, உங்களைக் காக்கும் கொலஸ்ட்ராலே, உங்களை அழிக்கும் கொலஸ்ட்ராலாக மாறுகிறது.
இப்படி கொலஸ்ட்ரால் படிய குறைந்தது 15-20 வருடங்கள் ஆகும். இதய ரத்தக்குழாயின் உள்ளே உள்ள லைனிங்கானது கண்ணாடிபோல ஸ்மூத்தாக இருக்கும். அப்படி இருக்கும்வரை ரத்தம் தடையின்றி ஓடிக்கொண்டிருக்கும். தீவிர ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாகும்நிலையில் எண்டார்ஃபினுக்கு பதில் அட்ரீனலின் சுரந்து, லைனிங்கில் சின்ன கீறல் விழும். அதனால் அந்த இடத்தில் ரத்தம் உறைந்துவிடும். இதற்கு 'கொரோனரி த்ராம்போசிஸ்' (Coronary Thrombosis) என்று பெயர். ரத்தத்தில் கொழுப்பு படிய 15-20 வருடங்கள் ஆகும் என்றாலும், இந்தக் கீறல் விழ சில நிமிடங்கள் போகும். உடனடியாக சிகிச்சை எடுத்தால் மட்டுமே இந்த நபரை காப்பாற்ற முடியும். சமீப காலத்தில் 20-25 வயதில் ஆண்களும், பெண்களும் மாரடைப்பில் இறப்பதன் பின்னணி இப்போது புரிகிறதா?
இதய ரத்தக் குழாயின் விட்டம் 0 என்பது தான் நார்மல். அதுவே 100 என்ற நிலையை எட்டினால் அது 100 சதவிகித அடைப்பு என்று அர்த்தம். 100 சதவிகித அடைப்பு இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வரும். 70,80 சதவிகித அடைப்பில் எல்லாம் வராது. அது 100-ஐ எட்டியதும் சட்டென வந்துவிடும். பிறகு எப்படி 80, 90 சதவிகித அடைப்பு ஏற்பட்டவர்கள் சட்டென இறக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். 50 வயதுள்ள ஒரு நபருக்கு 70-80 சதவிகித அடைப்பு இருப்பதாக வைத்துக்கொள்வோம். தீவிர ஸட்ரெஸ் காரணமாக அந்த அடைப்பின் மேல் லேசான கீறல் வரும். கீறல் எங்கு விழுந்தாலும் அங்கே ரத்தம் உறைந்துவிடும். உடனடியாக அது 100 சதவிகித அடைப்பாக மாறிவிடும். அது இறப்புக்கும் வழிவகுக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment