Doctor Vikatan: நடிகை நயன்தாரா சமீபத்தில் சோஷியல் மீடியாவில் செம்பருத்தி டீ குறித்த பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், செம்பருத்தி டீ அருந்துவதால் நீரிழிவும் ரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று சொல்லியிருந்தார். அலோபதி மருத்துவர் ஒருவர் அது குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார். செம்பரத்தை டீ என்பது உண்மையில் ஆரோக்கியமானதா... எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா... அது BP, Sugar அளவுகளைக் குறைக்கும் என்பது உண்மையா?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்.
இதற்கான விளக்கத்தைக் கொடுப்பதற்கு முன் இன்னொரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நம்மில் பலரும் செம்பருத்தி என்றே உச்சரிக்கிறோம். செம்பருத்தி என்பது பருத்திச் செடியைக் குறிக்கும். மலராக நாம் குறிப்பிடுவதை செம்பரத்தை என்று சொல்வதுதான் சரி. செம்பரத்தைக்கு (hibiscus) மருத்துவ குணங்கள் உண்டு என்பது உண்மைதான். அதற்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை உள்ளது என்று சித்த மருத்துவத்தில் ஒரு பாடல் குறிப்பு உள்ளது. அதாவது, ரத்த, பித்த பேதம் அகற்றும் என அகத்தியர் பாடல் குறிப்பு சொல்கிறது.
செம்பரத்தை (செம்பருத்தி) குறித்து நிறைய ஆய்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சீரகம் சாப்பிட்டால் கூட ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று சொல்வோரும் இருக்கிறார்கள். அந்த வகையில் செம்பரத்தை சாப்பிட்டால் கல்லீரல் பாதிக்கும், குழந்தையின்மைக்கு காரணமாகும் என்றெல்லாம் சொல்லப்படுபவை தவறான தகவல்கள். எனவே, எல்லோருமே செம்பரத்தை டீ எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை. அதே சமயம், இதை மட்டுமே எடுத்துக் கொண்டால் போதும், சர்க்கரை அளவும், ரத்த அழுத்தமும் குறையும் என்பது போல சில இன்ஃப்ளுயென்சர்கள் சொல்வது நிச்சயம் தவறான விஷயமே.
சித்த மருத்துவத்தில் மணப்பாகு என்பது மிகவும் பிரபலம். செம்பரத்ரதைப் பூக்களிலும் குடிநீர் தயாரித்து அதில் பனைவெல்லம் சேர்த்து மணப்பாகு தயாரிக்கப்படுகிறது. இதற்கு உடல் சூட்டையும், உடல் எரிச்சலையும் குறைக்கும் தன்மை உண்டு. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதையும் ஒரு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். பீரியட்ஸ பிரச்னை உள்ளவர்களுக்கும் இது உதவும்.
ஒற்றை செம்பரத்தையின் இதழை பால் சேர்த்து எடுத்துக் கொண்டால் ரத்த நாளங்கள் உறுதியாகும். இவை குறித்தெல்லாம் கிளினிகல் ஸ்டடி நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். பாரம்பர்யமாகப் பின்பற்றப்படும் இது போன்ற விஷயங்கள் தொடர்பாக ஆய்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.
அஞ்சறைப் பெட்டியில் உள்ள சீரகம், சோம்பு என ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு நாள் குடிநீராகத் தயாரித்து அருந்துவது போல செம்பரத்தையையும் ஒரு நாள் பயன்படுத்தலாம். அதில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதேசமயம் நடிகை நயன்தாரா சொல்லிவிட்டார் என்பதற்காக செம்பரத்தை டீ மட்டுமே சர்க்கரை அளவையோ ரத்த அழுத்தத்தையோ குறைத்து விடும் என்று நம்பி அதை மட்டுமே சிகிச்சையாகப் பின்பற்றுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment