அழகாக இருந்தாலும், கண்ணாடியில் மீண்டும் மீண்டும் முகத்தைப் பார்த்துவிட்டு, 'மூக்கு இன்னும் எடுப்பா இருந்திருக்கலாம்', 'பிம்பிள்ஸ் அதிகமாக இருக்கு', 'இதை விட அழகாக இருந்திருக்கலாம்' என தன்னை உடனிருப்பவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தங்களது உடல் அமைப்பின் மீது திருப்தி இல்லாமல் ஏதோ ஒரு குறையை பற்றியே நினைத்துக்கொண்டு சிலர் இருப்பாரகள். இந்த நிலையை, மருத்துவ மொழியில் `பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர்’ (Body Dysmorphic Disorder) என்கிறார்கள்.
இந்தப் பிரச்னை வயது வித்தியாசம், ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும் இருக்கிறது. 'காபி வித் கரண்' நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், தனக்கு இந்தப் பிரச்னை இருப்பதாக 'Kill' படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது தெரிவித்திருந்தார்.
இது குறித்து பேசிய அவர், "எனக்கு எட்டு வயதிலிருந்தே இந்தப் பிரச்னை இருக்கிறது. இதற்காக நிறைய மருத்துவர்களைச் சந்தித்து மருந்து, மாத்திரைகளை எடுத்திருக்கிறேன். இதனால் எனக்கு மனநலப் பிரச்னைகளும் ஏற்பட்டன. அதிலிருந்து மீள மிகவும் கடினமாக முயற்சி செய்தேன். எனது உடலை யாரிடமும் காண்பிக்கக் கூடாது என்பதற்காகவே எப்போதும் பெரிதாக இருக்கும் ஆடைகளை அணிவேன்.
நான் உடல் எடையைக் குறைத்து என் தோற்றத்தை நன்றாக வைத்துக்கொண்டாலும், இந்தப் பிரச்னையுடன் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன்" என்று தெரிவித்தார். டெல்லியில் நடந்த 21-வது உலக மனநல மாநாட்டில் நடிகை இலியானாவும் தனக்கு பாடி டிஸ்மார்பியா இருப்பதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
`பாடி டிஸ்மார்பிக் டிஸாடர்’ என்றால் என்ன என்று விளக்குகிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி. "உடலமைப்பு சார்ந்த இந்த உளவியல் சிக்கலைப் பெரும்பாலும் பெண்களுக்கான பிரச்னையாகவும், உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரச்னையாகவுமே நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில், ஆண் பெண் இருவரையும் சமஅளவில் இது பாதிக்கிறது. உடல் எடை குறைவாக உள்ளவர்கள், முடி வளர்ச்சி குறைவாக இருப்பவர்கள், சரும பாதிப்பு உள்ளவர்கள், வளரிளம் பருவத்தினர், கண் பிரச்னை உள்ளவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
சமூகத்தைக் கண்டு பயப்படும் ‘சோஷியல் போபியா’ (Social phobia) வகையைச் சார்ந்த இப்பிரச்னை, சம்பந்தப்பட்ட நபரை வெளி உலகுக்கு வந்து, மக்களோடு மக்களாகப் பழகவிடாது. ஓர் இடத்துக்குச் சென்றால், ‘நம்மை எப்படியெல்லாம் கிண்டலடிப்பார்கள்’ என்று கற்பனை செய்துகொண்டு, தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளும் மனோபாவம் இவர்களுக்கு நிறையவே இருக்கும்.
மூளையின் செயல்பாடுகளுக்கு உதவிசெய்யும் 'செரட்டோடினின்' (Serotonin) என்ற ஹார்மோனில் குறைபாடுகள் ஏற்படும்போது மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு பிரச்னையைத் தீவிரப்படுத்தும். தகுந்த மனநல ஆலோசனை பெறுவதன் மூலம் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
மேலும், சமூகத்தைப் பொறுத்தவரை இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களிடம் விமர்சனங்களைத் தவிர்ப்பது, அவர்களின் கருத்தைக் காது கொடுத்துக் கேட்பது, அவர்களுக்கு முக்கியத்துவம் தருவது, அவர்களை நம்புவது போன்ற செயல்களின் மூலம், அவர்களுக்கு இந்தப் பிரச்னையிலிருந்து தீர்வு காண உதவ முடியும்" என்று அறிவுறுத்துகிறார்.
Comments
Post a Comment