'விந்துப் பரிசோதனையில், விந்தணுக்கள் அசையாமல் இருக்கிறது...' இப்படியொரு அதிர்ச்சியான ரிப்போர்ட்டை இன்றைக்கு சில ஆண்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய அச்சமும், அவர்களுடைய வாழ்க்கைத்துணையின் ஏக்கமும், 'எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்குமா' என்பதாகவே இருக்கும். அசையாத விந்தணுக்கள் கொண்டவருக்கும் குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறதா..? மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி அவர்களிடம் கேட்டோம்.
''தரமான விந்தணுக்களை 3 வழிகளில் தெரிந்துகொள்ளலாம். ஒன்று உயிரணுக்களின் எண்ணிக்கை. ஆசிய நாடுகளில் ஒரு மில்லி லிட்டர் விந்தில், விந்தணுக்கள் குறைந்தபட்சம் 15 மில்லியனாவது இருக்க வேண்டும். இரண்டாவது, அதில் 4 சதவிகிதம் விந்தணுக்களாவது சரியான அமைப்புடன் இருக்க வேண்டும். மூன்றாவதாக, அதில் 25 சதவிகித விந்தணுக்களாவது ஆக்டிவ்வாக இருக்க வேண்டும். பெண்ணுறுப்பில் விடப்படும் விந்துவானது அங்கிருந்து நீச்சலடித்தபடி கருக்குழாய்களுக்குள் சென்று, அங்கிருந்து கருப்பைக்குள் செல்லும். இதற்கு 25 சதவிகித விந்தணுக்களாவது ஆக்டிவ்வாக இருக்க வேண்டும்.
இந்த மூன்றில் எது குறைந்தாலும் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு குறைந்துவிடும். இந்த மூன்றும் சரியாக இருந்தாலும் விந்தணுக்களின் தலையில் இருக்கிற டி.என்.ஏ 25 சதவிகிதத்துக்கும் மேல் சேதாரமாகியிருந்தாலும் குழந்தைப்பேறு கடினம்தான்.
விந்தணுக்களில் சில அசைவின்றி இருந்தாலே குழந்தைப் பேற்றுக்கு வாய்ப்பில்லை என்று அர்த்தமில்லை. மருத்துவரை சந்தித்தால், மாத்திரை மூலமோ, தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை மூலமோ அவர் உங்கள் பிரச்னையை சரி செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. பிரச்னை சரியாகவில்லை என்றால், செயற்கை கருத்தரிப்புக்கு முயற்சி செய்யலாம்" என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.
Comments
Post a Comment