20 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நடந்த அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் கவனக்குறைவாக ஊசியை தன் வயிற்றினுள் வைத்ததாகக் கூறி பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இழப்பீடு வழங்கச் சொல்லி நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெங்களூரு, ஜெயநகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (52). இவர் 2004-ம் ஆண்டு, தனது 32 வயதில் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.
இதற்காக சிகிச்சை பெற சென்ற தனியார் மருத்துவமனையில், இவருக்குக் குடல் இறக்கப் பிரச்னை இருப்பதாகக்கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
குடல் இறக்க அறுவை சிகிச்சையின்போதே, குடல் வால் (அப்பெண்டிக்ஸ்) பகுதியையும் அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளனர். இந்நிலையில், அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவருக்கு வயிற்று வலி நீடித்துள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகான அசௌகர்யம் என மருத்துவர்கள் அதனை அலட்சியம் செய்துள்னர். அப்பெண், தனக்கு ஏற்பட்ட வயிற்று வலியால் மீண்டும் மீண்டும் மருத்துவமனையை அணுகியபோதும், அவருக்கு வலி நிவாரண மாத்திரைகள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அறுவைசிகிச்சை முடிந்தும் பல ஆண்டுகளாக வயிற்று வலி நீடித்ததால், வேறொரு மருத்துவமனையில் ஸ்கேன் செய்துள்ளார் பத்மாவதி. அவர் வயிற்றுப்பகுதியில் ஏதோ ஒரு வேற்றுப்பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது. வயிற்றுவலிக்கு காரணம் அதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010-ம் ஆண்டு அவருக்கு அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்தபோது, 3.2 செ.மீ அளவுள்ள, அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஊசி (Surgical Needle) அவர் வயிற்றில் இருந்தது கண்டறியப்பட்டது. குடல் இறக்க அறுவை சிகிச்சையின்போது இந்த ஊசி தவறுதலாக அவர் வயிற்றினுள்ளே வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து தனக்கு அறுவை சிகிச்சை செய்த இரண்டு மருத்துவர்களுக்கும் எதிராக கர்நாடக நுகர்வோர் நீதிமன்றத்தில் பத்மாவதி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வந்த நிலையில், சம்பவம் நடந்து 20 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், ’பத்மாவதிக்கு கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் வழக்குச் செலவுக்காக ரூ.50,000 இழப்பீடாகக் கொடுக்க வேண்டும். மேலும், அவர் காப்பீடு செய்திருந்த நிறுவனம் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்’ என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment