விருப்பப்பட்டோ, தேடிப்போய் பார்க்க வேண்டிய தொலைவிலோ இன்றைக்கு ஆபாசப்படங்கள் இல்லை. அவை நம் கைகளில் இருக்கின்றன. நம் குழந்தைகளின் கைகளிலும் ஸ்மார்ட்போனாக தவழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால், என்னென்ன பிரச்னைகள் வரலாம் என்பதுபற்றி பாலியல் மருத்துவர் காமராஜ் விளக்குகிறார்.
``ஆபாசப்படங்கள் பார்ப்பதை பாலியல் பிறழ்வுகளில் ஒன்று என்றுதான் 1990-களில் சொல்லிக் கொண்டிருந்தோம். அதிலிருந்து மீண்டு வருவதற்கு சிகிச்சையும் அளித்துக் கொண்டிருந்தோம். ஆனால், இன்றைக்கு ஆபாசப்படங்கள் பார்க்காதவர்கள் கிட்டத்தட்ட யாருமே கிடையாது என்பதால், இதைத் தவறு என்று சொல்வதையும், பாலியல் பிறழ்வு என்று சொல்வதையும் நிறுத்திவிட்டோம். ஆனால், தொடர்ந்து ஆபாசப்படங்கள் பார்ப்பது, அவற்றைப் பார்க்காமல் இருக்க முடியாதது, அந்தப் படங்களுக்கு அடிமையாவது போன்றவற்றால் ஆண்களுக்கு வரக்கூடிய பிரச்னைகளும், இந்த ஆண்களால் பெண்கள் சந்திக்கின்ற பிரச்னைகளும் ஏராளம்.
டீன் ஏஜின் ஆரம்பத்திலேயே இந்தக் கால குழந்தைகளுக்கு, ஆபாசப்படங்களைப் பார்ப்பதற்கான வாய்ப்பு சுலபமாகி விட்டது. பள்ளிக்கூடத்தில் ஒரு சிறுவன் கையில் ஸ்மார்ட்போன் இருந்தால், கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களுமே ஆபாசப்படங்கள் பார்ப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. ஸ்மார்ட்போன் வருவதற்கு முன்பு வரை பெரும்பாலும் வளர்ந்த ஆண்கள் மட்டுமே ஆபாசப்படங்கள் பார்ப்பதற்கான வாய்ப்புகள் இருந்தன. சிறுவர்களும் பார்த்தார்கள் என்றாலும், அவர்கள் வெகுசிலர் மட்டுமே!
கொஞ்சம் உற்று கவனித்தால், நிர்பயா பாலியல் வன்கொடுமையிலும், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமையிலும் டீன் ஏஜ் பிள்ளைகளும் ஈடுபட்டிருப்பதும், அதற்குக் காரணம் அவர்களால் சுலபமாகப் பார்க்க முடிந்த ஆபாசப்படங்களும்தான் காரணம் என்பது புரியும்.
உண்மையில் ஆபாசப்படங்கள் பார்ப்பதென்பது, போதை மாத்திரைகள் சாப்பிடுவதைப் போன்றே ஆபத்தானது. ஆரம்பத்தில் ஒரு மாத்திரையில் போதையை எட்டுபவர்கள், நாள்பட நாள்பட ஒரு மாத்திரையில் போதையை அடைய முடியாமல் மாத்திரையின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவார்கள்.
மது, கஞ்சா போன்றவற்றிலும் இதே நிலைமைதான். இந்த நிலைமை ஆபாசப்படங்கள் பார்ப்பவர்களுக்கும் பொருந்தும். தவிர, ஆபாசப்படங்களும் விதவிதமான கதைகளுடன் எடுக்கப்படுவதால், அதில் கிடைக்கும் த்ரில்லுக்காக இப்படிப்பட்ட படங்களைப் பார்ப்பதற்கு ஆண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். விளைவு, கணவன், மனைவிக்கிடையே நிகழும் தாம்பத்திய உறவின்மீது ஆர்வம் குறையும் அல்லது சுத்தமாக ஆர்வமே இல்லாமலும் போகலாம்.
இவற்றையெல்லாம்விட மிக மோசமான விளைவுகளும் இருக்கின்றன. வேலைக்குக்கூடச் செல்லாமல் ஆபாசப்படங்கள் பார்ப்பது, பெண்களை சமமாக நடத்தாதது, அவர்களை செக்ஸுவல் பொருளாகப் பார்ப்பது, குழந்தைகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்வது என அவற்றின் பட்டியல் நீளமானது. ஆபாசப்படங்களைத் தவிர்ப்பதே நல்லது'' என முடிக்கிறார் டாக்டர் காமராஜ்.
Comments
Post a Comment