கணவர்கள் எப்படி நடந்துகொண்டால் மனைவிகளுக்கு மிகவும் பிடிக்கும்..? கணவர்கள் தங்களை எப்படி நடத்தினால் பெண்களுக்குப் பிடிக்கும்..? தாம்பத்திய உறவில் எப்படிப்பட்ட ஆண்களை பெண்கள் விரும்புகிறார்கள்..? இந்த மூன்று கேள்விகளுக்குமான பதில்களை, காமசூத்ரா மற்றும் சில ஆய்வுகளின் அடிப்படையில் 10 பாயின்ட்டுகளாக பாலியல் மருத்துவர் காமராஜ் இங்கே பகிர்ந்து கொள்கிறார்.
1. தாம்பத்திய உறவில் நிதானமாகச் செயல்படுகிற கணவனை, மனைவிக்கு ரொம்பவே பிடிக்கும். ஏனென்றால், ஆணின் தாம்பத்திய ஈடுபாடு என்பது பல்ப் போல... ஸ்விட்ச் போடவும் எரிவதுபோல உணர்வு, உறவு, உடனடியாக தூக்கம் என்று இருப்பார்கள்.
ஆனால், பெண்கள் அயர்ன் பாக்ஸ்போல... உணர்வு, உறவு இரண்டுமே மெதுவாகத்தான் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். தவிர, ஸ்விட்ச்சை ஆஃப் செய்த பிறகும் அயர்ன் பாக்ஸ் சிறிது நேரம் சூடாக இருப்பதுபோல உறவுக்குப் பிறகும் கணவரின் அருகாமையை விரும்புவார்கள். அதனால்தான், தாம்பத்திய உறவில் நிதானமாக, ஜென்டிலாக ஈடுபடுகிற கணவனை, மனைவிக்கு மிகவும் பிடிக்கும்.
2. உறவின்போது ஆண்கள் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். ஆனால், பெண்கள் அந்த நேரத்தில் கணவன் தன் உடலை பாராட்ட வேண்டுமென்று விரும்புவார்கள். ஆனால், இதை பெரும்பாலான ஆண்கள் செய்வதே இல்லை.
3. அமெரிக்காவில் நடந்த ஆய்வு ஒன்றில் மென்மையுடனும் காதலுடனும் நீண்ட நேரம் முத்தமிடுகிற ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். கணவர்கள் இந்த பாயின்ட்டையும் மனதில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
4. கூந்தலைத் தடவிக்கொடுக்கிற கணவரை மனைவிக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இதைப் பெரும்பான்மை ஆண்கள் செய்வதே இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.
5. தன்னை அழகாக உணரச் செய்கிற ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். 'நீ எனக்கு முக்கியமானவள்' என்பதை வார்த்தைகளாலோ அல்லது செயல்களாலோ உணரச் செய்கிற கணவர்களும் பெண்களுக்குப் பிடித்தமானவர்களே...
6. காதலிக்கும்போது 24 மணி நேரமும் காதலித்துக் கொண்டிருக்கிற ஆண்கள், திருமணம் முடிந்தவுடன் முதலில் தொலைப்பது அதைத்தான். 24 மணி நேரம் ஒரே வீட்டுக்குள், ஒரே அறைக்குள் இருக்கும்போது இணையின் குற்றம், குறைகளைச் சொல்லிக்காட்டாமல் இருக்க முடியாதுதான். அதையும் மீறி திருமணத்துக்குப் பிறகும் தன்னை காதலிக்கிற கணவர்களை மனைவிகளுக்கு மிகவும் பிடிக்கும்.
7. ஒரு விருந்தினரை நடத்துவதுபோல, தன்னை மரியாதையாக நடத்துகிற கணவரை, பெண்ணுக்கு மிகவும் பிடிக்கும்.
8. பெண்ணின் உடலையறிந்து அவளை உச்சக்கட்டம் அடைய வைக்கிற ஆணையும், படுக்கையறைக்கு உள்ளே எப்படிக் கொண்டாடுகிறானோ, அதைப்போலவே வெளியேயும் தன்னை அன்பாக நடத்துகிற கணவர்களை மனைவிகளுக்கு மிக மிகப் பிடிக்கும்.
9. காதலிக்கும்போது காதலர்களாக இருக்கிற ஆண்கள், திருமணம் முடிந்தவுடன் மேனேஜர் ஆகி விடுகிறார்கள். ஒரு மேனேஜர் தன் கீழ் வேலைபார்க்கும் கிளார்க்கிடம் உத்தரவிடுவதுபோல மனைவிக்கு உத்தரவிட ஆரம்பித்து விடுகிறார்கள். உத்தரவிடுவது காதலை அழித்து விடும். இப்படி உத்தரவிடுகிற கணவர்களை பெண்களுக்குப் பிடிப்பதேயில்லை என்பதுதான் நிஜம்.
10. உடல் சுத்தமின்மை, வாய் சுத்தமின்மை, அழுக்கு ஆடைகள், தொப்பை... இப்படியிருக்கிற கணவர்களை தாம்பத்திய உறவின்போது பெண்கள் வெறுக்கவே செய்வார்கள்.
Comments
Post a Comment