Doctor Vikatan: எனக்கு சமீபகாலமாக எதைச் சாப்பிட்டாலும் வயிற்றில் ஒருவித உறுமல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அது வெளியே கேட்கும் அளவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. நான் கிழங்கு, கொண்டைக்கடலை போன்ற வாயு ஏற்படுத்தும் உணவுகளை உண்பதில்லை. ஆனாலும் இந்த வயிற்றுப் பொருமல் ஏன் வருகிறது... இதற்கு உடனடி நிவாரணம் என்ன?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த வயிற்றுப் பொருமல் பிரச்னைக்கு அசிடிட்டி பாதிப்பு தான் காரணமாக இருக்கும். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி சிறிது சிறிதாக ஏதேனும் சாப்பிட வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு, மொச்சைக்கொட்டை, கொண்டைக்கடலை, முட்டை போன்றவற்றைத் தவிர்ப்பது சிறந்தது. தவிர்க்க முடியாத போது, இவற்றில் நிறைய இஞ்சி-பூண்டு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட்டால் இந்தப் பிரச்னை ஓரளவு கட்டுப்படும்.
அதேபோல நீங்கள் காரம் அதிகமான உணவுகளையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும். காரமான உணவுகள் இந்தப் பிரச்னையைத் தீவிரமாக்கும். வயிற்றில் பொருமல் சத்தம் வந்து தர்மசங்கடப்படுத்தும்.
நீண்ட நேரம் சாப்பிடாமலேயே இருந்துவிட்டு, திடீரென சாப்பிடும்போதும் இந்தப் பிரச்னை வரும். உதாரணத்துக்கு காலை உணவைத் தவிர்த்து விட்டு, மதியம் தாமதமாக உணவு சாப்பிடுவது போன்ற வழக்கங்கள் இந்தப் பிரச்னையைத் தீவிரமாக்கும்.எனவே, இரண்டு மணி நேரத்துக்கொரு முறை, 2 பிஸ்கட், ஒரு பழம், நீர்மோர், தண்ணீர் என ஏதேனும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை எல்லாவற்றையும் செய்த பிறகும் இந்தப் பிரச்னை தொடர்ந்தால், மருத்துவ ஆலோசனை அவசியம். ஏனெனில், இந்த அசிடிட்டி பிரச்னைக்கு அல்சர் கூட காரணமாக இருக்கலாம். அப்படி இருந்தால், மிதமான சிகிச்சை தேவைப்படும். அதன் பிறகு உணவுப்பழக்கம், வாழ்வியல் முறை மாற்றங்களின் மூலம் இதை சரிசெய்யலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment