Doctor Vikatan: நான் மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்க்கிறேன். பொதுவாக இரவில் படுத்த உடனே தூங்கிவிடுவேன். ஆனால், மாதத்தில் சில நாள்கள் மட்டும் இரவில் முழுவதும் தூக்கம் வராமல் தவிக்கிறேன். அடுத்தநாள் பகலில் தூங்கி ஓய்வெடுக்கவும் என் வேலைச்சூழல் இடம் தராது. இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்.... தூக்கமின்மையை எப்படிச் சமாளிப்பது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
பிறர் பொறாமைப்படும் அளவுக்கு நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த ஒரு நபருக்கு, திடீரென தூக்கம் பாதிக்கலாம். மாதத்தில் சில நாள்கள் இப்படி தூக்கமே இல்லாமல் போகலாம். காரணம் தெரியாவிட்டாலும் இந்தப் பிரச்னையைக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும்.
முதல்நாள் இரவு முழுவதும் தூக்கமில்லை என்பதற்காக அடுத்தநாள் பகல் முழுவதும் தூங்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒருநாள் இரவு தூக்கமில்லாதது ஒன்றும் அவ்வளவு சீரியஸான பிரச்னை அல்ல. பைலட்டுகள், ஓட்டுநர்கள், மருத்துவர்கள் என எத்தனையோ பேர் அப்படி தூக்கமில்லாமல் இருக்கிறார்கள். ஒருநாள் தொடங்கி, நான்கைந்து நாள்கள்வரை தூக்கமில்லாதது என்பது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. தூக்கமின்மை குறித்து பதற்றமோ, பயமோ கொள்ளத் தேவையில்லை.
முதல்நாள் இரவு தூக்கமில்லாத பட்சத்தில், அடுத்த நாள் பகலில் குட்டித்தூக்கம் போடலாமே தவிர, அது இரவு அளவுக்கு நீண்ட தூக்கமாக இருக்கக்கூடாது. காலையில் சூரியன் உதயமாகும்போது எழுந்திருக்கவும், இரவில் சரியான நேரத்துக்குத் தூங்கவும் பழக வேண்டும். இரவு தூங்கச் செல்வதற்கு முன் வெளிச்சமான விளக்குகளை, திரைகளைப் பார்ப்பதைத் தவிருங்கள். த்ரில்லர் படங்கள், காட்சிகளைப் பார்க்காதீர்கள். அடுத்தநாள் ஏதோ ஒரு முக்கியமான நிகழ்வு, விசேஷம் போன்றவை இருந்தால், அது குறித்த சிந்தனை காரணமாக முந்தைய இரவு தூக்கம் தடைப்படலாம். அதுவும் இயல்பானதே.
மனதை அமைதிப்படுத்தினால் தூக்கம் தானாக வரும். அதற்கு ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி பெரிதும் உதவும். புதிய இடம், புதிய சூழல் போன்றவையும் தூக்கமின்மைக்கு காரணமாகலாம். மெனோபாஸ், ஆண்களுக்கு ஏற்படும் ஆண்ட்ரோபாஸ், தைராய்டு பாதிப்பு, வைரஸ் தொற்று, மனப்பதற்றம் என தூக்கமின்மைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் தசைகளைத் தளர்த்தும் பயிற்சிகளைப் பழக வேண்டும். சிலருக்கு படுத்த உடனேயே கால்களில் ஒருவித குடைச்சல், அசௌகர்யம் தோன்றும். புரண்டு புரண்டு படுத்துக்கொண்டே இருப்பார்களே தவிர, தூங்க மாட்டார்கள். இந்தப் பிரச்னைக்கு 'ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்' (Restless legs syndrome) என்று பெயர். மக்னீசியம் சத்து இந்தப் பிரச்னைக்கான தீர்வாக இருக்கும் என சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். எப்சம் சால்ட் கலந்த நீரில் சில நிமிடங்கள் கால்களை வைத்திருப்பதன் மூலம், சருமத்தின் வழியே மக்னீசியம் சத்து உள்ளிறங்கி, நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, இரவு நல்ல உறக்கத்துக்கு உதவும். மருத்துவரின் ஆலோசனையோடு மெக்னீசியம் மற்றும் மெலட்டோனின் சப்ளிமென்ட்டுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
Comments
Post a Comment