Doctor Vikatan: என் நண்பர் ஒருவர் தினமும் காலையில் இளநீர் குடிப்பதை பல வருடங்களாகப் பின்பற்றி வருகிறார். வெயில் காலத்தில் மட்டுமன்றி, மழை, குளிர்காலங்களிலும் குடிப்பார். இப்படி தினமும் இளநீர் குடிப்பது சரியானதா... அதனால் ஆரோக்கியம் மேம்படுமா... எல்லோரும் தினமும் இளநீர் குடிக்கலாமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.
இளநீரில் பொட்டாசியம் சத்து மிக அதிகம். பொட்டாசியம் சத்தானது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் அவசியமானது. வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் உடலில் நீர்வறட்சி ஏற்படும்போது நீரிழப்பை ஈடுசெய்ய இளநீர் பெரிதும் உதவும். இதயநலன் காப்பதிலும் இளநீருக்கு முக்கியப் பங்கு உண்டு.
ஆன்டிஏஜிங் தன்மைகள் கொண்டது என்பதால், அடிக்கடி இளநீர் சாப்பிடுவோருக்கு முதுமைத்தோற்றம் தள்ளிப்போகும். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் இளநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். 'என்னுடைய ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது' என்று சொல்பவர்கள், மூன்றுமாத சராசரி ரத்தச் சர்க்கரை அளவை கணக்கிடும் ஹெச்பிஏ1சி (HbA1c ) பரிசோதனையில், ரத்தச் சர்க்கரையின் அளவானது 7-க்குள் இருக்கும் நிலையில், வாரம் இருமுறை இளநீர் குடிக்கலாம். அது இன்ஸ்டன்ட் எனர்ஜியை கொடுக்கும். அதுவே, ரத்தச் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டில் இல்லை என்பவர்கள் நிச்சயம் இளநீர் குடிக்கவே கூடாது.
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதில் கட்டுப்பாடுகள் அறிவுறுத்தப்பட்டிருக்கும். இவர்கள் இளநீர் குடிக்கும்போது பொட்டாசியம் அளவு சட்டென அதிகரித்துவிடும் என்பதால் இளநீர் குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இளநீரைப் போலவே அதன் உள்ளே உள்ள வழுக்கைப் பகுதிக்கும் மருத்துவ குணங்கள் உண்டு. உதாரணத்துக்கு வயிற்றின் உள்பகுதியை ஆற்றும் தன்மை கொண்டது என்பதால் செரிமான பிரச்னைகள் நீங்கும்.
டீஹைட்ரேஷன் (Dehydration) எனப்படும் நீர்வறட்சி பாதிப்புக்கு உள்ளானவர்கள், நீரிழிவு இல்லாத நிலையில் தினமும் 2 இளநீர் கூட குடிக்கலாம். உடற்பயிற்சி செய்வோர், காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டியது முக்கியம். மற்றபடி உடல்ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லாதவர்கள் தினமும் ஒரு இளநீர் குடிக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment