Doctor Vikatan:என் வயது 30. எனக்கு சிறு வயதிலிருந்தே தினமும் சாக்லேட் சாப்பிடும் வழக்கம் உண்டு. தவிர, எப்போதெல்லாம் ஸ்ட்ரெஸ்ஸாக உணர்கிறேனோ, அப்போதும் சாக்லேட் சாப்பிடுவேன். இப்படி தினமும் சாக்லேட் சாப்பிடுவது ஆரோக்கியத்தை பாதிக்குமா...? டார்க் சாக்லேட் சாப்பிடுவது ஆரோக்கியமானது என்கிறார்களே... அது உண்மையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்
''என்னால சாக்லேட் சாப்பிடாம இருக்கவே முடியாது'' என சொல்லும் நபர்கள் நம்மில் ஏராளமான பேர் இருக்கிறார்கள். இப்படிச் சொல்பவர்கள் சாக்லேட் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
சாக்லேட் தயாரிப்பில் கோகோ பீன் (Cocoa bean) பிரதான இடம் வகிக்கிறது. கோகோ பீன்ஸில் கோகோ பட்டர் மற்றும் கோகோ சாலிட்ஸ் ஆகிய இரண்டும் இருக்கும். இவற்றில் கோகோ பட்டரிலிருந்து மட்டும் தயாரிப்பது வொயிட் சாக்லேட். இதில் கலோரிகளும் அதிகம்... சர்க்கரை சேர்ப்பதால் ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல. வழக்கமான சாக்லேட்டுகளில் கோகோ பட்டர், கோகோ சாலிட்ஸ் மற்றும் சர்க்கரை எல்லாமே கலக்கப்படும். மூன்றாவது வகை, டார்க் சாக்லேட். இது கசப்புச் சுவையில் இருக்கும் என்பதால் பெரும்பாலான மக்களுக்கும் பிடிப்பதில்லை.
இன்னும் சிலர் சாதாரண சாக்லேட் ஆரோக்கியமற்றது என்றும் டார்க் சாக்லேட் நல்லது என்றும் அதை அதிகம் எடுத்துக்கொள்வார்கள். 75 முதல் 80 சதவிகிதம் கோகோ சாலிட்ஸ் இருந்தால் மட்டுமே அது டார்க் சாக்லேட் என்று அர்த்தம். அதில்தான் ஃப்ளேவனாயிட்ஸ் அல்லது ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமிருக்கும். அதனால் அது ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கும்போது சாக்லேட் சாப்பிடும் வழக்கம் பலரிடம் இருப்பதைப் பார்க்கலாம். சாக்லேட் சாப்பிடுவதால் உடனடியாக எனர்ஜி அதிகரிக்கும். ஆக்டிவ்வாக இருப்போம். மனநிலை சட்டென மாறும். டிப்ரெஷனில் இருப்போருக்கு இது உதவியாக இருக்கும். டார்க் சாக்லேட் சாப்பிட்டால் இதயத்துக்கு நல்லதா என்ற கேள்வி பல காலமாக இருக்கிறது. 2017-ல் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. பாதாம் மற்றும் டார்க் சாக்லேட் இரண்டையும் சாப்பிட்டவர்களுக்கு எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு குறைவதாகத் தெரிந்தது. அதில் பாதாமை நீக்கிவிட்டுச் செய்த ஆய்வில், ஆரோக்கிய பலன்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் டார்க் சாக்லேட் சாப்பிடுவது ஆரோக்கியமானதா என்பது குறித்து இன்னோர் ஆய்வு நடந்துகொண்டிருக்கிறது. முடிவுகள் வரும்வரை காத்திருப்போம்.
அளவாக சாக்லேட் சாப்பிடுவதில் தவறில்லை. அதையும் டார்க் சாக்லேட்டாக பார்த்துச் சாப்பிடுங்கள். சாக்லேட் சாப்பிடும்போது வாய் சுகாதாரம் பேணுவதையும் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். பல் சொத்தை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment