Doctor Vikatan: எனக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் உள்ளனர். 16 வயதாகிறது. ஒருத்தி ஒரு வருடத்துக்கு முன்பே வயதுக்கு வந்துவிட்டாள். இன்னொரு மகள் இன்னும் வயதுக்கு வரவில்லை. இரட்டையர்களாகப் பிறந்த இவர்களுக்கு பூப்பெய்தும் இந்த விஷயத்தில் ஏன் இந்த வித்தியாசம்....? வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு சிகிச்சை அவசியமா... இதனால் அவள் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறாள். என்ன செய்வது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
சமீபகாலமாக பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் ஆரம்பிக்கும் வயது மாறியிருக்கிறது. பருவமடைதலும், அதன் தொடர்ச்சியாக மாதவிடாய் வருவதும் பெண் குழந்தையின் உடல் ஹார்மோன்கள், சூழலியல் காரணங்கள் மற்றும் பரம்பரைத் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தவை.
ஒரே பிரசவத்தில் பிறக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி என்பது பெரும்பாலும் கிட்டத்தட்ட ஒன்றுபோலத்தான் இருக்கும். உயரம், உடல் பருமன், மார்பக வளர்ச்சி போன்றவை ஒரே மாதிரி இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு ஒரே நேரத்தில்தான் மாதவிடாய் வரும் என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை நம்மிடம் இல்லை. எனவே, அந்த அடிப்படையில் பார்க்கும்போது ஒரே பிரசவத்தில் பிறக்கும் ஒன்றுக்கு மேலான பெண் குழந்தைகள் ஒரே நேரத்தில்தான் பூப்பெய்துவார்கள் என்பது தவறான நம்பிக்கையே.
இப்படிப்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்கள், ஒரு குழந்தைக்கு பீரியட்ஸ் வந்து, இன்னொரு குழந்தைக்கு வராமலிருக்கும்போது, அது இயல்பான உடலியல் நிகழ்வுதான் என்பதையும், இன்னொரு குழந்தைக்கும் அது இயல்பாக நடக்கும் என்பதையும் விளக்கிச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.
அதே நேரம், 16 வயதுக்குப் பிறகும் பீரியட்ஸ் வராவிட்டால், அதை அலட்சியப்படுத்த வேண்டாம். உங்கள் மகளை தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். பருவமடைதலின் அறிகுறிகளாக பிறப்புறுப்பிலும் அக்குளிலும் ரோம வளர்ச்சி, மார்பகங்கள் பெரிதாவது போன்ற 'செகண்டரி செக்ஸுவல் கேரக்டரிஸ்டிக்ஸ்' (Secondary sexual characteristics) எல்லாம் இயல்பாக இருக்கின்றனவா என பார்க்க வேண்டும். பெரும்பாலான பெண் குழந்தைகளுக்கு 16 வயதுக்குள் மாதவிடாய் வந்துவிடும். அரிதாக சிலருக்கு அதன் பிறகும் வராமலிருக்கும்போது அதற்கான காரணம் தெரிந்து சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்.
ஹார்மோன் சமநிலையின்மை இருக்கிறதா, மூளையிலிருந்து வரவேண்டிய சிக்னல் வராததற்கு என்ன காரணம், கர்ப்பப்பையிலோ, சினைப்பையிலோ பிரச்னை இருக்கிறதா என்றெல்லாம் பார்க்கப்படும். கூடவே நாளமில்லா சுரப்பியல் மருத்துவரின் ஆலோசனையோடு சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும். சில பெண்களுக்கு மாதந்தோறும் பீரியட்ஸின்போது உணர்கிற வயிற்றுவலி வரும்.ஆனால் ரத்தம் மட்டும் வெளியேறாது. இதை 'க்ரிப்டோமெனோரியா' (Cryptomenorrhea ) என்கிறோம். அதாவது வெஜைனாவின் வெளிப்புறத்தில் உள்ள ஹைமன் என்ற பகுதி சற்று தடித்திருக்கலாம்.
அதனால் மாதவிடாயின்போது வெளியேற வேண்டிய ரத்தம் வெளியே வராமல் உள்ளுக்குள்ளேயே தங்கிவிடும். சிறிய அறுவை சிகிச்சையின் மூலம் இந்தப் பிரச்னையை சரிசெய்துவிட முடியும். அதன் பிறகு மாதவிடாய் ரத்தம் வெளியே வரும்.
இரட்டையர்களாகப் பிறந்ததால் ஒருவர் மட்டும் பூப்பெய்திய நிலையில், இன்னொருவருக்கு அந்த நிகழ்வு வராமலிருப்பது உளவியல்ரீதியான அழுத்தமாக மாற வாய்ப்புகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதை மன அழுத்தம் தரும் அளவுக்குப் பெரிய பிரச்னையாக எடுத்துக்கொள்ளாதபடி மகளுக்கு அறிவியல்ரீதியாக விளக்கிச் சொல்லுங்கள். தேவைப்பட்டால் கவுன்சலிங் அழைத்துச் செல்வதும் பலன் தரும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment