இந்தியாவில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வயதானவர்கள் உடலளவில் சுறுசுறுப்புடன் செயல்படவில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
சமீபத்தில் தி லான்செட் குளோபல் ஹெல்த் மருத்துவ இதழில் ஆய்வு தரவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் 2022-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, உலகில் 2-ல் ஒரு முதியோர் உடல் சார்ந்த எந்தச் செயல்பாடுகளையும் செய்வதில்லை என்று கூறப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவன மருத்துவ நிபுணர்கள் குழு, "வயதானவர்கள் குறைந்தது வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியும், 70 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறது. ஆனால், ஆய்வில், உலகளவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 31 சதவிகிதம் பேரும், இந்தியளவில் 49.9 சதவிகிதம் பேரும் அதிகளவு உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது.
மேலும், இந்தியாவில் ஆண்களை விட (57 சதவிகிதம்) பெண்கள் (42 சதவிகிதம்) குறைவாகவே உடல் சார்ந்த செயல்பாடுகள் செய்கின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.
2000-ம் ஆண்டில், வயதானவர்களில் 22 சதவிகிதம் பேர், உடல் சார்ந்த செயல்பாடுகள் இல்லாமல் இருந்திருக்கின்றனர். 2010-ம் ஆண்டு அது 34 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது 2030-ல் 60 சதவிகிதமாக உயர்ந்துவிடலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பெட்ரோஸ் அதானோம், "வயதானவர்களிடையே உடல் சார்ந்த செயல்பாடுகள் எந்த அளவிற்கு மோசம் அடைந்து வருகின்றன என்பதை இந்த ஆய்வுத் தரவுகள் தெளிவுபடுத்துகின்றன. முந்தைய ஆய்வுகளைக் காட்டிலும் தற்போதைய ஆய்வு முடிவுகளின் சதவிகிதம் அதிகரித்து உள்ளது.
பொருளாதார வளர்ச்சி குறைந்த நாடுகளை விட வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே இந்த நிலை அதிகரித்திருக்கிறது. உடல் சார்ந்த செயல்பாடுகள் அதிகம் இல்லாததால் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு நோய், டிமென்ஷியா, புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
அன்றாட உடல் செயல்முறைகளை குறிப்பிட்ட அளவு கடைப்பிடித்து வந்தாலே வருடத்திற்கு 4 முதல் 5 பில்லியன் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த முடியும்" என்று கூறியிருக்கிறார்.
Comments
Post a Comment