`புகைபிடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும்’… `புற்றுநோயை உருவாக்கும்’… எனக் கூறினாலும் `என் உடல், என் சுதந்திரம்’ எனப் புகைபிடிப்பவர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர்.
ஒருபுறம் இந்தியாவில் புகையிலையின் நுகர்வு குறைந்திருக்கிறது. இருந்தாலும், டீன் ஏஜ் பெண்கள் புகைபிடிப்பது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள இந்திய புகையிலை கட்டுப்பாட்டு அறிக்கையில் கூறியுள்ளது.
இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில் வயதான பெண்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் குறைந்துவிட்டாலும், இளம் பருவத்தினரிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
இது குறித்து அறிக்கையில் வெளியிட்டுள்ள தகவலில், 2009 மற்றும் 2019-க்கு இடையில் பதின்ம வயது பெண்களில் புகைபிடித்தல் 3.8 சதவிகித புள்ளிகள் உயர்ந்து 6.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது பெண்களில் அடுத்த தலைமுறையினர் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதைக் காட்டுகிறது.
அதுவே பதின்ம வயது ஆண்களில் புகைபிடிக்கும் பழக்கம் 2.3 சதவிகித புள்ளிகள் அதிகரித்துள்ளது. பெரியவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம், ஆண்களில் 2.2 சதவிகித புள்ளிகளும், பெண்களில் 0.4 சதவிகிதமும் குறைந்துள்ளது.
*பதின்ம வயது பெண்கள் புகைபிடிக்க காரணம் என்ன? வேகமான முதிர்ச்சி, பதின்ம வயது ஆண்களைப் போலவே தங்கள் கோபத்திலிருந்து விடுபடவும், கூலாக தோன்றவும் பதின்ம வயது பெண்கள் அதிகமாக புகைபிடிப்பதாக கூறப்படுகிறது. தங்களின் நண்பர்களின் வற்புறுத்தலுக்கு உட்பட்டு சிலர் பசியின் வேதனையிலிருந்து விடுபடும் வழியாகவும் புகைபிடிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இளம் பருவத்தினரிடையே பாலின இடைவெளி குறைந்து வருகிறது. 2019-ல் 7.4 சதவிகித பதின்ம பெண்கள் மற்றும் 9.4 சதவிகித பதின்ம ஆண்கள் புகையிலை பயன்படுத்துகின்றனர். இளைஞர்களை புகைபிடிப்பதிலிருந்து வெளியேற்றுவதற்கான தலையீடுகள் செய்யப்படாவிட்டால், எதிர்காலத்தில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
*என்னென்ன பிரச்னைகள் வரலாம்?
பொதுவாகவே புகைபிடிப்பதால் சுவாச நோய்கள், நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய்களின் அபாயங்கள் அதிகரிக்கின்றன. மேலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது கருவுறுதலை (Fertility) பாதிக்கும்.
பெண்களில் கூடுதல் பாதிப்பாக சேதமடைந்த நுரையீரல் மற்றும் பிறவிக் குறைபாடுகளுடன் கூடிய குறைமாத குழந்தை பிறப்புகள் (premature births) ஏற்படுகின்றன. புகைபிடிக்கும் பழக்கத்தால் பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம்.
புகைபிடிக்கும் பெண்களுக்கு 50 வயதிற்கு முன்பே மாதவிடாய் நின்று போகும் அபாயம் 43 சதவிகிதம் அதிகமாக இருப்பதாகவும் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
Comments
Post a Comment